உடல் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது. "என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கிறது" என்பார்களே அதை இன்றுதான் முதல்முறையாக உணர்ந்தேன். அப்படிபட்ட நடுக்க மனநிலையில் தான் கூட்டம் முடியும் வரையிலும் அமர்ந்திருந்தேன். படித்து வியந்திருந்த எழுத்தாளர்கள் பலரை முதல்முறை நேரில் பார்க்கிறேன். ஏதோவொரு தவிப்போ, தயக்கமோ அல்லது இரண்டுமோ மனதில் ஆழமாக ஊன்றி நின்று நிழலாடின. கடைசிவரை நெருங்கவேயில்லை தூரத்திலிருந்தே அவர்களை ரசித்திருந்தேன்.
இப்படியோர் அனுபவம் இதற்குமுன் ஏற்பட்டதில்லை.
"கவிஞர் ஆத்மாநாம் விருது விழா 2018" பற்றி ஒரு மாதத்திற்கு முன்பே வேல் கண்ணண் அண்ணன் முகபுத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் அழையா விருந்தாளியாக கண்டிப்பாகச் செல்வதென்று. ஆனால் ஆச்சரியமாக நேற்று, "எங்க இருக்கீங்க கார்த்தி. சேலமா சென்னையா.? அப்போ சரி. விழாவிற்கு வாங்க. உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்று போனில் அழைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார் வேல் கண்ணண் அண்ணன். போனை அணைத்துவிட்டு நானைடந்த மகிழ்ச்சியென்பது அளப்பரியது. ஏனெனில் என்றோ ஓர் நாள் போகிற போக்கில் ஏற்பட்ட பத்து நிமிட அறிமுகத்தை மறக்காமல் நினைவில் வைத்து அழைத்தது, எனக்கு அவரளித்த மிகப்பெரிய அங்கீகாரம். அக்கணம் உண்டான தவிப்பும் நடுக்கமும் விருது வழங்கும் கூட்டம் முடியும் வரையிலும் நீடித்தன.
எனக்கு "மாதொருபாகன்" மூலம் அறிமுகமான ஐயா பெருமாள் முருகன், "வல்லிசை" மூலம் சாதி சமமின்மையின் வீரியத்தை உணர்த்திய அண்ணன் அழகிய பெரியவன், "மீட்பு" மூலம் தெரிந்திட்ட போகன் சங்கர், கவிதா முரளிதரன், "ஆர்தர் ரைம்போ" என்னும் மனிதர்களை வெறுக்கும் ஓர் இளங்கவியின் நரக உலகத்தை அடையாளம் காட்டிய கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் மற்றும் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் சந்தித்திட வைத்த இம்மாலைப் பொழுது எனது நினைவு தாழ்வாரத்திலிருந்து என்றுமே நீங்காது.
மேலும் ஆத்மாநாம் என்னும் பெருங்கவிஞரை அறிய வைத்து எனது வாசிப்பு எல்லையை விரிவுபடுத்தி இவ்விழாவில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் வேல் கண்ணண் அவர்களுக்கு நன்றிகள் பல.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment