"இந்த நாள் இந்தளவிற்கு ஈவிரக்கம் இல்லாமல் விடிந்துவிட்டதே"
இறுதித் துடிப்பை இன்றே எட்டிவிடும் உத்வேகத்தில் இதயம் உதறித் துடிக்கிறது. தாங்கவொண்ணா சுமையை வெகுநேரம் தூக்கிச் சுமந்திருந்து இறக்கியது போல் கை கால்கள் நடுங்குகின்றன. வியர்வைத் துளிகள் வேர்த்து விறுவிறுவென்று உடல் முழுதும் விரவுகின்றன. உட்கார முடியவில்லை.
அரை மணி நேரத்திற்கு முன்பு தான் ஜிலேபி ரமேஷ் போன் போட்டு சொன்னான்.
"சங்கர் செத்துட்டான்" என்று..
இன்று விடிந்ததே இவ்வுலகில் சங்கரின் இருப்பை இன்றோடு விலக்கிக் கொள்ள தானா. இதற்கு விடியாமலே இருந்திருக்கலாமே..
'ஏதோ பொண்ணு விஷயம் போலடா. வீட்லயே தூக்கு மாட்டிக்கிட்டான். கூடவே இருந்த எங்கிட்ட கூட சொல்லாம விட்டுட்டான் பாரேன். தங்கச்சியும் அம்மாவும் கதறாங்க. அவங்க மூஞ்சில முழிக்க முடியலடா. 'ஏப்பா ரமேஷூ. உன்னோட தான எம் மவன் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பான். என்னப்பா ஆச்சு'ன்னு அம்மா கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலடா. நடுத்தெருவே சங்கர் வீட்டு முன்னாடி கூடி நின்னு அழுதுட்டு இருக்கு. பாக்கவே கஷ்டமா இருக்கு மச்சான். நீ உடனே கெளம்பி வா' மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் கண்ணீரில் சொத சொதவென நனைந்திருந்த குரலில் சொல்லி போனைக் கட் செய்துவிட்டான்.
பிரியமானவர்களின் மரணத்தின் போது நமக்கும் ஒரு தற்காலிக மரணம் நிகழ்கிறது. யார் சொல்லி காலம் நிற்கப் போகிறது. புலம்பும் மனமே சமாதானத்தைத் தந்து மீண்டும் புதிதாய் புலம்பியது. ஈரம் சொட்டும் கிழங்கு திப்பியாய் நசநசவென ஒட்டி வழுக்கியவாறிருந்த சிந்தனையில் உறைந்தபடி அமர்ந்துவிட்டேன்.
மணி ஐந்து நாற்பத்தைந்து. உடனடியாகக் கிளம்ப வேண்டும். ஆறரை மணிக்கு கோவை எக்ஸ்பிரஸை பிடித்தால் பணிரெண்டு மணிக்குள் சேலம் போய்ச் சேர்ந்துவிடலாம்.
எந்த நாள் கிழமையானலும் கூட்டத்திற்கு குறைவே இருப்பதில்லை இந்த இரயிலில். பெரும்பாலான காலை நேரக் கூட்டமெல்லாம் அரக்கோணம் காட்பாடி கூட்டம் தான். அதன் பிறகு ஓரளவிற்கு கூட்டம் குறைந்துவிடும். சந்தைக் கடை போல ஒரே இரைச்சல். படிக்கட்டின் பக்கத்திலேயே நின்றுக் கொண்டேன். தூரத்து வானத்தில் பறக்கும் பெயர் தெரியா பறவைகளும், விதவையைப் போல தனித்து விடப்பட்ட மரங்களும், பெயருக்கு மட்டும் நீரை வைத்திருக்கும் ஆறுகளும் தெளிவாய் தெரிவதற்காக கண்ணாடியை மாட்டிக் கொண்டேன். பின்னோக்கிச் செல்பவையெல்லாம் அதனுடனே சேர்த்து என்னையும் இழுத்துச் சென்றன. காலச் சக்கரமும் நினைவுகளில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் இறந்தகாலத்திற்குள் சுழன்றது.
'ஓட்ட பள்ளிக்கூடம்' என்று உள்ளூர் வட்டாரங்களில் அழைக்கப்படும் 'மாநகராட்சி நடுநிலை பள்ளி'யில் தான் சங்கரும் நானும் இரண்டாவது முதல் ஏழாவது வரை படித்தோம். என்னுடைய வளரிளம் பருவத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் சங்கரின் நட்பு எப்படி அறிமுகமானது என்று கொஞ்சமும் என் நினைவில் இல்லை.சங்கருக்கு ஒரு அண்ணண் ஒரு தங்கை. அண்ணண் படிக்கவில்லை. தங்கை அதே பள்ளியில் படித்தாள். என் தங்கையும் சங்கரின் தங்கையும் ஒரே வகுப்பு. எங்களைப் போலவே அவர்களுக்குள்ளும் நட்பானது நிறைந்திருந்தது. ஔவையார் தெருவிற்கு அடுத்த நடுத் தெருவின் கடைசி மூலையில் ஏழ்மையின் அடையாளமாக சங்கரின் வீடு இருக்கும். இப்போது நினைத்து பார்த்தால் அப்பாவின் குடிப்பழக்கம் சிறுவயதிலேயே அவனை வெகுவாக பாதித்திருந்தது புரிகிறது. சங்கரின் அப்பா பூவேலை செய்பவர். மாரியம்மன் காளியம்மன் கோவில் பண்டிகைகளின் போது அம்மனை ஊர்வலமாகக் கொண்டு வரும் தேரின் பூ அலங்காரங்களை அவரும் அவருடைய சகாக்களும் மற்றும் சங்கரின் அண்ணணும் செய்வார்கள். விடிய விடிய நடக்கும் அந்த வேலை. சங்கரும் நானும் உளுத்தங் கஞ்சிக் குடித்துக் கொண்டு கோவில் வளாகத்திலேயே சுத்தி இருப்போம். அவ்வப்போது சங்கரின் அப்பா குரல் கொடுப்பார். அவனும் நானும் ஓடுவோம். சிறுசிறு மூங்கில் குச்சிகளில் கட்டப்பட்டிருக்கும் கோழிக்கொண்டை பூக்களைத் தூக்கிக் குடுப்போம். அவர் அதை மெலிசாக வளைத்து தேரின் மேல் வைக்க மூங்கில் வாழை மரம் மற்றும் காதித அட்டைகளால் வடிவாக அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரத்தில் அழகாகச் செருகி இறுதி வடிவம் கொடுப்பார். பசை தடவப்பட்ட காகித அட்டைகளில் ஏற்கனவே உதிர்ந்து வைக்கப்பட்டிருக்கும் பூக்களை ஒட்டுவோம். வேலை முடிந்து சங்கரின் வீட்டிலேயே தூங்கி விடுவேன். எப்போது உறங்கினோம் என்றே நினைவில் இருக்காது. காலையில் எழும்போது சங்கரின் அப்பா போதையில் எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பார். நான் விழித்ததைப் பார்த்ததும் நீ வீட்டிற்குக் கிளம்பு என்று அவசரப்படுத்தி அனுப்பி விடுவான்.
எத்தனையோ முறை அவன் வீட்டில் தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் அவன் வீட்டில் முழு உரிமை எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை எனக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தான். ஆனால் அதை போன்றதொரு நிலையை என் வீட்டில் அவனுக்கு நான் உண்டாக்கித் தர தவறிவிட்டேன் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றுத் தெரியவில்லை. ஒருவேளை அப்பாவின் கண்டிப்பும் அதனால் எப்போதுமே என் மனதில் உறைந்துப் போயிருந்த பயமும் ஒரு காரணமாக இருக்கலாம். அவன் வீட்டில் நான் தங்கிய அளவிற்கு என் வீட்டிற்கு அவன் வந்ததில்லை. நானும் அழைத்திருக்கிறேனே தவிர வற்புறுத்தியதில்லை. ஒருவேளை அன்று நான் வற்புறுத்தி இருந்திருந்தால், 'சங்கர் இறந்துவிட்டான்' என்றுச் சொல்லும் போது எந்த சங்கரென்று என் அம்மா இன்று கேட்டிருக்கமாட்டார்.
அரக்கோணத்தில் பெருங்கூட்டமொன்று இறங்கியதும் படிக்கட்டில் இடம் கிடைத்தது. வீட்டு வாசற்படியில் உட்காருவது போல் வசமாக அமர்ந்துக் கொண்டேன்.
எங்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பன் அப்பு. ஏனோ அவனுக்கு எங்களின் மீது அவ்வளவு பாசம். அந்நாட்களில் எங்களுக்கு தீனிப் பஞ்சம் இல்லாமல் இருந்தது அப்புவால் தான்.டீச்சர் அவனை டீ வாங்கி வர அனுப்பும் போதெல்லாம் வடை போண்டா பலகாரங்களின் தூள்களைப் பேப்பரில் கட்டியெடுத்து வந்துத் தருவான். அருமையாக இருக்கும். பலகாரத்தை விட அதன் தூள்களே சுவையானவை என்றுத் தோன்றும். மேலும் ஒண்ணுக்கு பெல் அடிக்கும் போது கட்டில் கடை பாட்டியிடம் மாங்கா, வெடாங்கா, இலந்த வட, தேங்கா பர்பி என்று தினமும் ஏதாவது வாங்கித் தருவான். அப்போதே அவன் அந்த பாட்டியிடம் அக்கௌன்ட் வைத்திருந்தான்.
அப்புவிற்கு இடது விழி மையத்திலிருந்து விலகி சற்று ஓரமாக இருக்கும். மேல் வகுப்பு மாணவர்கள் எதற்கோ அவனை 'டோரி' என்றுக் கிண்டலடித்து விட்டனர். அதை அப்பு சொன்னது தான் தாமதம். மதிய ஒண்ணுக்கு பெல்லின் போது அவர்களோடு சண்டை போட்டு உருண்டுவிட்டோம். சங்கர் இரண்டு மூன்று பேரை அடித்தான். ஒரு குண்டனின் மீது ஏறி குத்து குத்தென்று குத்தினான். இவன்தான் அப்புவை டோரி என்று முதலில் சொல்லியிருக்கிறான். அதன்பின்னரே மற்றவர்களும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றனர்.அந்தக் குண்டன் அடுத்த நாள் பள்ளிக்கே வரவில்லை. அப்புவிற்கு இவ்வளவு தான் என்று இல்லை சந்தோஷம். சாயந்தரம் ஆளுக்கொரு 'லவ் ஓ' வாங்கிக் கொடுத்து எதையோ சாதித்த திருப்தியில் சிரித்த முகத்துடன் வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த நாள் ஏழாம் வகுப்பிற்கு குரூப் போட்டோ எடுப்பதாக ஹெட் மாஸ்டர் சொல்லி இருந்தார். ஆதலால் அப்பவும் நானும் ஈர முகத்தில் பவுடர் பூசி, முதுகிலும் கொஞ்சம் பவுடர் தெளித்து, நெற்றியில் விபூதி அடித்து, சட்டை பாக்கெட்டில் ரெனால்ஸ் பேனா வைத்து சீக்கிரமாகப் பள்ளிக்குச் சென்று சங்கருக்காக காத்திருந்தோம். போட்டோ எடுக்க நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. போட்டோ ஷாப்பில் இருந்து வந்திருந்தவர்கள் தங்கள் கருவி மற்றும் உபகரணங்களை பொருத்திக் கொண்டிருந்தனர். மற்ற மாணவர்களெல்லாம் போட்டோ எடுக்கப் போகும் குஷியில் இருந்தனர். அவர்களும் சீவி சிங்காரித்து அந்த நிமிடத்துக்காக காத்திருந்தனர். எங்களுக்கோ சங்கர் இன்னும் வரவில்லையே என்ற கவலை. ஒருவேளை சங்கர் இல்லாமலே போட்டோ எடுத்துவிடுவார்களோ. நானும் அப்புவும் சிவகாமி டீச்சரிடம் சென்று, 'சங்கர் இன்னும் வரவில்லை. நாங்கள் போய் கூட்டி வருகிறோம்' என்றோம். நீங்களும் போயிடு வராம இருக்கவா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேத்தே சொல்லி தானா விட்டாங்க. பரவால்ல. இருக்குறவங்க மட்டும் மரத்துக்குக் கீழ போட்ருக்க பெஞ்சுல போய் உட்காருங்க' என்று கண்டித்து அதட்டினார்.
நாங்கள் ஒண்ணுக்கு போவது போல பாத்ரூம்க்கு நழுவி விட்டோம். எல்லாரையும் உயரப்படி வரிசையாக நிற்க வைத்துக் கொண்டிருந்தார் சிவகாமி டீச்சர். நைசாக எட்டி பார்த்து காம்பௌண்ட் கேட்டை திறந்து வெளிய சென்றோம். அடித்த பவுடர்லாம் வியர்வையில் நனைந்து பிசுபிசுவென்று ஒழுக சங்கரின் வீட்டை நோக்கி நடந்தோடினோம். திரௌபதி அம்மா கோவில் பக்கத்தில் செல்லும் போது சங்கரே எதிரில் வந்தான். எதுவும் பேசாமல் ஆளுக்கொரு கையால் அவனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றோம். சிவகாமி டீச்சர் சிடுசிடு முகத்துடன் எங்களை நோக்கியிருந்தார். எங்கள் மூவரையும் பார்த்ததும் கோபத்தில் கத்தினார். போதா குறைக்கு கருப்புக் குடையுடன் போட்டோ எடுக்க காத்திருந்தவரும் - அந்த ஆள் வேறு பார்ப்பதற்கு ரெஸ்லிங்லில் வரும் ரிகிஷி போல குண்டாக - பார்வையிலேயே பயந்தொடுக்கிவிட செய்பவராக - கண்டபடி திட்டினார். உயரமாக இருப்பதால் சங்கரை பின் வரிசையில் நிற்க வைத்தார் டீச்சர். நான் டீச்சரின் பக்கத்தில் அமர்ந்தும், அப்பு இரண்டாம் வரிசையில் நின்றும்,
கண்ண மூடமா எல்லாரும் கேமராவ பாருங்க... ஸ்மைல்... ஸ்மைல்...
'கிளிக்' சத்தம். மீண்டும் ஒரு 'கிளிக்' சத்தம்.
முடிஞ்சது. எல்லோரும் வகுப்பிற்குச் சென்றோம்
பின்பு சாவாசமாக 'ஏன்டா லேட்டு' என்று சங்கரிடம் விசாரித்தோம்.
"சாயந்தரம் வீட்டுக்குப் போய் தான்டா பாத்தேன். நேத்து போட்ட சண்டைல பாக்கெட்டுக்குக் கீழ சட்ட கிழிஞ்சிருக்கு. இருக்கிறது இந்த ஒரு யூனிபார்ம் தான். லேட்டா வந்தா போட்டோ எடுத்து முடிச்சிருவாங்க அப்டியே கிளாஸ்ல ஒக்கந்தாரலாம்னு நெனச்சேன்"
அன்று அதன்பின் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்தநாள் ஒரு வெள்ளைச் சட்டையை வீட்டிற்குத் தெரியாமல் எடுத்துவந்து சங்கருக்கு கொடுத்தான் அப்பு. சங்கர் நெகிழ்ந்து விட்டான். சங்கரின் அந்த முகம் அப்படியே நெஞ்சில் பதிந்துவிட்டது. அன்று முழுவதும் நான் சங்கருடனோ அப்புவிடமோ பேசவே இல்லை.
சங்கருக்கு சட்டை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லையே' அழுகைத் தொண்டையை அடைத்து நின்றது.
அந்தப் போட்டோ இன்னமும் என்னிடம் இருக்கிறது. இடது பாக்கெட்டின் கீழ் குறுக்காக இரு கைகளையும் மடித்தவாறு சங்கர் நிற்பான். ஒல்லியான தேகம் என்றாலும் வசீகரமானவன்.
எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. எட்டாவது முடிந்ததும் நான் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டேன். படிப்பு ஏறாததால் அப்புவும், வசதி இல்லாததால் சங்கரும் படிப்பை அத்தோடு நிறுத்திவிட்டார்கள். பள்ளிக்கு பக்கத்திலிருந்த மெக்கானிக் ஷெட்டிலேயே அப்பு வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அப்பாவோடு பூக்கடைக்குச் சென்றான் சங்கர்.
அதன்பின் வார இறுதி நாட்களில் மட்டுமே அவர்களைக் காண முடியும். அதுவும் முதலாளி விடமாட்டார் என்பதனால் அப்பு ஊர் சுத்த வரமாட்டான். நானும் சங்கரும் மட்டும் ஞாயிற்றுக்கிழமையானால் நண்டு பிடிக்கப் போவோம். சங்கருக்கு நீச்சல் தெரியும். கிணற்றில் உள் நீச்சல் கூட போடுவான். நான் பயத்தில் தண்ணீரில் இறங்கியதே இல்லை. கை, கால்களை நனைத்துக் கொள்வதோடு சரி.
நின்றிருந்த கூட்டமெல்லாம் காட்பாடியில் இறங்கியது. ஆங்காங்கே ஓரிரு இருக்கைகள் கூட காலியாக இருந்தன. அதென்னவோ கிடைக்காத போது இருக்கும் ஏக்கம், அதுவே காலம் தாழ்ந்து கிடைக்கையில் அர்த்தமில்லாமல் போகிறது. படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன்.
வண்டி நகர்வதற்கும் போன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.
'விஷயம் தெரியும்ல. கெளம்பிட்டியா'
'தெரியும் மோகா. ரமேஷ் சொன்னான். காட்பாடி தாண்டிட்டேன்'
'நானும் ஓசூர் வந்துட்டேன். நீ சீக்கிரம் வா'
'சரி என்னதான்டா ஆச்சு. உனக்கு ஏதாவது தெரியுமா'
"ஜாதிப் பிரச்சனைன்னு பேசிக்குறாங்கடா. பாவி பய நம்மகிட்டே எதுவுமே சொல்லலையே. அக்கம் பக்கத்துல போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்கலாம் ரமேஷ் சொன்னான்......"
சிக்னல் கிடைக்காமல் கட் ஆகிவிட்டது.
காற்று வேகமாக அடித்தது. தட்டு தடுமாறி போனைப் பாண்ட் பாக்கெட்டில் வைத்தேன்.
மூன்று வருடத்திற்கு முன்பு என் காதல் விஷயத்தைச் சொன்ன போது சங்கர் கேட்டான்,
'என்ன சொல்றாங்க அந்தப் பொண்ணு வீட்ல'
"நமக்கும் அவங்களுக்கும் சேராது. நாம வேற ஆளுங்க அவங்க வேற ஆளுங்க. அந்தப் பையன மறந்துரு நாங்க நம்ம ஜாதில இருக்குற நல்ல பையனா பாத்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்னு சொல்லிருக்காங்க. அவளும் எனக்கு ஜாதிலாம் முக்கியம் இல்ல. அவன்தான் எனக்கு வேணும். கல்யாணம் பண்ணா அவனதான் பண்ணுவேன். இல்லனா செத்துருவேன்னு சொல்லிருக்கா. அதுக்கு அவங்க, 'அந்த' ஜாதிக்காரன கல்யாணம் பண்ணி, எங்கள சந்தி சிரிக்க வெச்சி, நம்ம சாதிசனத்து முன்னாடி இத்தன நாளா நாங்க கட்டிக் காப்பாத்துன குடும்ப மானத்த வாங்கறதுக்கு நீ செத்துத் தொலையறதே மேல்னு சொல்லிருக்காங்க"
'ஜாதியா.! மசுருக்கு லாயக்கில்லாத ஒரு கருமத்த எதுக்கு இந்த மனுஷனுங்க மண்டைல ஏத்திக்கிட்டு சுத்துறானுங்க தெரில'
'விடுடா.. அவவன் கௌரவம் அவவனுக்கு முக்கியம்' நான் சொன்னேன்.
'மயிரு இதுல கௌரவம் எங்க இருந்துடா வந்துச்சி. பொண்ணுக்குப் புடிச்ச பையனக் கட்டி வைக்கிறது தான் பெத்தவங்களுக்குக் கௌரவம். அதைவிட்டுட்டு ஜாதி சடங்கு சம்பிரதாயம் மதம் மண்ணாங்கட்டினுட்டு. மொத்தத்துல இவனுங்களும் சந்தோசமா இருக்கமாட்டாங்க நம்மளையும் சந்தோசமா வாழ விடமாட்டனுங்க. பாக்குற வரைக்கும் பாரு இல்லனா ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் செலவுக் கிலவு இல்லாம அமைதியா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா குடும்பம் நடத்துற வேலைய பாரு'
'பெத்தவங்க இல்லாம எப்புடி கல்யாணம் பண்றதுனு அந்தப் பொண்ணு யோசிக்கிறா சங்கரு'
ஜாதிய கட்டியழற பெத்தவங்கள வச்சிக்கிட்டு வேற என்னடா பண்ண முடியும். நாமளா அவங்கள ஜாதி பாக்கச் சொன்னோம். இல்ல நான் தெரியாம கேக்றேன்.
"ஒருத்தனோட பீய்ய பாத்து அவன் இன்ன ஜாதின்னு சொல்ல முடியுமா.? இல்ல அந்த நாத்தத வச்சி.? முடியாதுல. எந்த ஜாதி பீய்யா இருந்தாலும் நாறதான செய்யும். அத புரிஞ்சிக்காம என் ஜாதி பீ தான் ஒசந்த பீ. என் ஜாதி பீ தான் ஒசந்த பீன்னு ஊரெல்லாம் கத்தி மூஞ்சில பூசிக்கிட்டு சுத்துவாய்ங்களா.. இவனுங்க உடம்பெல்லாம் பூசிக்கிறது மட்டுமில்லாம நமக்கும் பூசிவிட பாக்குறானுங்க" சங்கர் கொதித்தான்.
அன்று ஜாதி உணர்வை எதிர்த்து கொதித்தெழுந்த சங்கரா இப்போது ஜாதி பிரச்சனையால் தற்கொலை செய்துக் கொண்டான். அதிர்ச்சியாக இருக்கிறது.
ஜோலார்பேட்டைக்குள் நுழைந்து விட்டது ரயில்.
இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் சேலம் ஜங்ஷன் வந்துவிடும்.
போன முறை சேலம் போய் கொண்டிருக்கும் போது ஜோலார்பேட்டையை கடக்கையில்தான் சங்கர் போன் செய்தான்.
'சொல்லு சங்கரு'
'எங்கடா இருக்க'
'தோ... ஜோலார்பேட்டைல இருக்கேன். இன்னும் ஒன்றரை மணி நேரத்துல வந்துருவேண்டா.'
நான் ஜங்ஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.
'பிக்கப் பண்ணிக்கிறியா.. எப்பிடிடா. வண்டி வாங்கிட்டியா'
'ஆமாடா.. ஆட்டோ வாங்கிருக்கேன். லோன்ல'
'செமடா சங்கரு'
'சரி சரி வா. நான் வெயிட் பண்றேன்'
அன்று அவனை ஜங்ஷனில் ஆட்டோவுடன் பார்க்கும் போது எனக்கு உண்டான சந்தோஷம், நான் எதையோ என் வாழ்வில் சாதித்தது போலிருந்தது. டிரைவர் சீட்டிலேயே அவனோடு உட்கார வைத்துக் கொண்டான். ஐந்து ரோடு, குரங்கு சாவடி, ராமகிருஷ்ணா பார்க் எல்லாம் சுற்றி ஒரு ரவுண்டு அடித்து வீட்டில் விட்டான்.
'காசு குடுத்தேன். எவ்வளவு சொல்லியும் மறுத்தான். என் பாக்கெட்டிலேயே திணித்துச் சென்றுவிட்டான்'
"சேலம் ஜங்ஷன் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று மூன்று மொழிகளில் கம்ப்யூட்டர் குரல் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கரகரக்கிறது. எப்போதும் ஊருக்கு வந்திறங்கும் போது இருக்கும் பூரிப்பும் சந்தோஷமும் இந்தமுறை இல்லை.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கினேன்.
ஊரில் வந்திறங்கும் போது உண்டாகும் ஆனந்தத்தில் ஒரு துளிக் கூட இப்போது இல்லை. ஏன் வந்தோம் என்று மனம் கிடந்து உலாத்துகிறது. அடுத்த அடி எடுத்து வைக்க கால்கள் தயங்குகின்றன. நிலையில் இல்லாமல் கண்ணீரைத் துடைக்கவும் திராணி இல்லாமல் கைகள் செயலற்றுத் தொங்குகின்றன. அந்த ஆவின் பாலகத்தில் தான் நானும் சங்கரும் 'டீ'குடிப்போம். அவன் படிக்கவில்லை என்றாலும் ஊருக்கு வந்து போகும் போதெல்லாம் எனக்கு ஏதாவது புத்தகம் வாங்கித் தருவான். அலமாரியில் இருப்பதில் நான் வாங்கிய புத்தகங்களை விட அவன் வாங்கி தந்த புத்தகங்களே அதிகம்.
நடுத் தெருவில் எல்லோரும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று அழுதவாறு இருந்தனர். சங்கரின் சொந்தங்களாக இருக்கக் கூடும். கால்களை யாரோ கயிறு கட்டி பின்னே இழுப்பது போல நடுங்கித் தயங்கின.
வீட்டு வாசலில் பெருங்கூட்டம். ஒதுக்கிக் கொண்டு உள்ளே போனேன்.
சங்கரை தரையில் கிடத்தியிருக்கிறார்கள். உயிர் இல்லாதது போலவே இல்லை. இப்போதும் அதே வசீகரம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment