Skip to main content

மீண்டும் அவள் தொட்டிலுக்கு

உறுதியாக மறுத்தாள்.

ராஜரத்தினத்தின் மறைவிற்குப் பிறகு ராணியம்மாள் வெளியிடங்களுக்கு எங்கும் செல்வதில்லை.

இன்று எப்போதும் இல்லாதவனாக மோகன் கட்டாயப்படுத்தினான்.

"அம்மா. வாம்மா போலாம். உனக்குத் தான் சினிமானா புடிக்கும்ல" அழாத குறையாகக் கெஞ்சினான்.

"பாட்டி பாட்டி வாங்கப் பாட்டி நாமலாம் ஜாலியா தீபாவளி ஸ்பெசல் சினிமாக்கு போலாம்" அப்பா கெஞ்சுவதைப் பார்த்ததும் அம்முவும் சேர்ந்து கொண்டாள்..

மகனும் பேத்தியும் போட்டிப் போட்டுக் கொண்டு வற்புறுத்தி அழைத்ததும் ராணி அம்மாவினால் மறுக்க முடியவில்லை.

ராணி அம்மாளுக்குச் சிறு வயதிலிருந்தே ரஜினி என்றால் உயிர். புதிதாக வெளிவரும் ரஜினியின் அத்தனைப் படங்களையும் தியேட்டரில் பார்த்து விடுவது வழக்கமான வழக்கம். படம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். படத்தில் ரஜினி இருந்தால் போதும். பார்த்துகிட்டே இருக்கலாம். குடும்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையெல்லாம் கூட ரஜினி படம் வெளியான வருடங்களைக் கொண்டே நினைவில் வைத்திருப்பாள். ராஜரத்தினத்தை முதல் முறையாகக் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் புத்தகத்திற்கு நடுவே ஒளித்து வைத்துப் பார்த்தது '16 வயதினிலே' வெளியான வருடம். 'பைரவி' வந்த போது திருமணமானது.

"என்ன ஏன் உனக்குப் புடிச்சிருக்கு.. அட வெட்கபடாம சொல்லு" முதலிரவின் போது ராஜரத்தினம் கேட்டார்.

"ரஜினி மாதிரியே நீங்களும் கருப்பா பரட்டை தலையா இருக்கீங்க. அதான் உங்கள பாத்த உடனே புடிச்சிப் போச்சு" ராஜ ரத்தினத்தின் முகம் பார்க்காமல் உடனே வெட்கித் தலை குனிந்தாள்.

அப்படியொரு ரஜினி கிறுக்கு.

ராஜரத்தினம் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.

"தர்பார்" (ராஜரத்தினத்துடன் கடைசியாகப் பார்த்த படம்) படம் வந்து இரண்டு மாதம்தான் இருக்கும். ஏதோ கொரோனான்னு ஒரு பயங்கர நோய் ஊரெல்லாம் வேகமாகப் பரவுகிறது. அதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் நிறைய மக்கள் இறந்துவிட்டார்கள். ஆதலால் இருபத்தியொரு நாட்கள் யாரும் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளியே செல்லாதிர்களென்று நாடு முழுவதும் அறிவித்து விட்டார்கள். அதிலும் வயதானவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டுமென்று அழுத்திச் சொல்லப்பட்டது. கடைகள் எல்லாம் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே ஆளுக்கொரு இடத்தில் தனித்தனி உலகங்களில் உலவிக் கொண்டிருந்தார்கள். சமயங்களில் பழைய கதைகள் பேசப்பட்டு அவர்களுக்குள் புதிய சண்டைகள் முளைத்தன. நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையும், தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றதால் இருபத்தியொரு நாட்கள் என்பது கிட்டதட்ட ஒன்பது மாதங்களுக்கும் மேலாகவே ஊரடங்கு நீடித்தது. தொழில்கள் முடங்கின. அன்றாடக்காய்ச்சி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது.

மோகனின் அலுவலகத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். ராஜரத்தினமும் ராணி அம்மாளும் கவனமாகவே இருந்தார்கள். ஊரடங்கின் மந்தமான ஓர் மதிய நேரத்தின் வெயில் புழுக்கத்தில், ராணி அம்மாளுக்கு லேசாகச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக மோகன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். மோகன் கோபமாக மறுத்தும் ராஜரத்தினம் உடன் சென்றார். அங்கு மூவருக்கும் (ராணி அம்மாள், ராஜரத்தினம், மோகன்) முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. ராணி அம்மாளுக்கும், மோகனுக்கும் பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரிந்தது ஆனால் ராஜரத்தினத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணி அம்மாளுக்கு அழுகையினால் சுவாசிப்பதில் சிரமம் கூடியது. ராஜரத்தினம் அதே மருத்துவமனையில் மருந்தில்லாத அந்த தொற்றின் வைத்தியத்திற்காகத் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை

நான்கைந்து நாட்கள் சென்றன. ராணி அம்மாள் மெல்ல மெல்லக் குணமடைந்து கண்களைத் திறந்தார். இப்போது சிரமமின்றி மூச்சுவிட முடிந்தது. செத்தாலும் பரவாயில்லை தன் கணவரை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று கதறி அழுதார். தூரத்திலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்க்க மருத்துவர்கள் அனுமதித்தனர்.

சுவாசக் குழாய்கள் பொருத்தப்பட்டு, உடல் பலவீனமாகி முகம் மிகவும் ஒடுங்கிப் பரிதாபமாகப் படுத்திருந்தார் ராஜரத்தினம்.

"என்னங்க. உங்களுக்கா இந்த நெலம. அந்த ஆண்டவனுக்குக் கண்ணே இல்லையா. உங்கள இப்படி பாக்கறது முன்னமே நான் போய் சேந்திருக்க வேண்டாமா" அவரைப் பார்த்துக் கதறி அழுதார்.

"அழாத. சீக்கிரம் குணமாகி வந்துடுவேன். நான் வந்ததும் நாம ரெண்டு பெரும் அடுத்த ரஜினி படத்துக்குப் போலாம்" என்று சைகையில் சொல்லியவாறே ரஜினியைப் போலவே ஸ்டைல் சல்யூட் செய்து சிரித்தார் கண்களில் வழியும் கண்ணீருடன்.

அதான் கடைசி. அதன்பின் ராஜரத்தினத்தை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள். தொற்று பரவும் அபாயத்தினால் நண்பர்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல் உடனடியாக ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்ட ஒரு குழியில் அவரின் சடலம் உறவினர்கள் யாரும் இல்லாமல், கட்டின மனைவி கூட அருகில் இல்லாமல் மருத்துவ ஊழியர்களால் அனாதைப் பிணம் போல புதைக்கப்பட்டது.

சரியென்று சொல்லிவிட்டாளே தவிர என்ன படம், எந்த தியேட்டர் என்றெல்லாம் அவள் கேட்டுக்கொள்ளவில்லை.

தீபாவளியன்று மதியம் நான்கு பேரும் காரில் கிளம்பினர்.

பாட்டி மடியில் அமர்ந்து கொண்டாள் அம்மு. குழந்தைக்குக் கதை சொல்லிக் கொண்டே வந்த ராணி அம்மாள்,குழந்தையோடு சேர்ந்து அவளும் உறங்கிவிட்டாள்.

தியேட்டர் வந்ததும் மோகன் எழுப்பி விட்டான். கண்களைத் துடைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கியவள் தியேட்டரை பார்த்ததும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

சரஸ்வதி தியேட்டர். கல்யாணம் ஆனதும் முதல்முறையாக "முள்ளும் மலரும்" படத்திற்கு ராஜரத்தினம் அவளைக் கூட்டி வந்த தியேட்டர் இது தான். இப்போது பெரிய மல்டி காம்ப்லெக்ஸ் தியேட்டராக உருமாறி நிற்கிறது. இட்லி சட்டி ஆவியைப் போல நினைவுகள் மெல்ல மெல்ல மனதிலிருந்து மேலெழுந்தன.

காரை நிறுத்திவிட்டு வந்த மோகனைப் பார்த்ததும் அழுகைப் பொத்திக்கொண்டு வந்தது. குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதாள்

மோகன் கட்டிப்பிடித்து அம்மாவை ஆறுதல் படுத்தினான். குழந்தையும், மோகனின் மனைவியும் ராணி அம்மாளை நிறைவாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"சரி சரி வாங்க. நேரமாச்சு" அம்மாவைத் திசை மாற்றினான் மோகன்.

இரண்டு மூன்று நாயகர்களின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு நடிகரை மட்டும் தான் ராணி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது.

"ரஜினி"

அவள் நினைத்தது போலவே ரஜினி படத்திற்குத்தான் டிக்கெட் புக் செய்திருந்தான் மோகன்.

படம் தொடங்கியது. ஒவ்வொரு எழுத்துகளாகப் பறந்து வந்து அவை 'ரஜினி' ஆகி திரையில் மின்னியது. ராணி அம்மாளுக்கு ராஜரத்தினத்தின் ஞாபகம் வந்தது. "என்ன ஏன் உனக்குப் புடிச்சிருக்கு.."ரஜினி மாதிரியே நீங்களும் கருப்பா பரட்டை தலையா இருக்கீங்க. அதான் உங்கள பாத்த உடனே புடிச்சிப் போச்சு".

மனம் சொக்கியது.

'ஓ. இத இப்பிடி மாத்திட்டாங்களா ..!'; 'ஹே.. இந்த எடத்துல தான தீனிக் கட இருந்துச்சு..?'; 'ச்சார் கூட மாத்திட்டான் பாரு'; 'தோ. இங்க கேட் மாதிரி பெருசா கம்பி இருக்கும்ல தர டிக்கெட் எடுத்தவங்க பெஞ்சு டிக்கெட் பக்கம் போகாம இருக்குறதுக்காக. அப்பவும் நம்மாளுங்க தாண்டி போய்ட்டு தான் இருப்பாங்க. அந்த கேட்டு சும்மா கடனேனு நிக்கும்.!' முன்ன இந்தளவுக்கு சவுண்ட் 'டம்முடம்மு' ன்னு இருக்காது இப்போ என்னாமா கேக்குதுல.. கக்கூஸ் பக்கம் போகவே முடியாது. ஒரே நாத்தமா இருக்கும். பெரிய தொட்டில தண்ணி ஊத்தி வச்சிருப்பானுங்க இப்போ பரவால்ல. வீட்ல இருக்கமாதிரியே தனித்தனி ரூமா கட்டிருக்கான். முன்ன நடுவுல ஒரே ஒரு மஞ்ச கலர் லைட் தான் இருக்கும். இப்ப பாரேன் எத்தன தினுசு தினுசா லைட்டுங்க.

உனக்கு அந்த வசனம் ஞாபகம் இருக்கா, "ரெண்டு கையும் ரெண்டு காலும் போன கூட காளின்றவன் பொழச்சிப்பான் சார்.. கெட்ட பய சார் இந்த காளி"... அதெப்படி மறக்க முடியும். "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவல இல்ல" என்னா சவுண்ட்டு.. இப்பக்கூட காதுல கேக்குது.

படம் முடிந்து கிளம்பும் வரையிலும் ராஜரத்தினோடு பேசிக் கொண்டு இருந்தாள் ராணி அம்மாள்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டியிடம் குழந்தைக் கேட்டது.

நீங்கப் பழைய காலத்துல இருந்தீங்களா..?

மூக்குக் கண்ணாடியைக் கொஞ்சம் முன் தளர்த்திப் பாதி விழிகளால் பேத்தியை சில நிமிடங்கள் மௌனமாகப் பார்த்தார் ராணி அம்மாள்.

"புரியலையா பாட்டி?"

குழந்தையே மௌனத்தைக் கலைத்தது.

"புரியலையே டா கண்ணு" வெகுளியாய் சொன்னார் ராணி அம்மாள்.

நான் எல்.கே.ஜி , யு.கே.ஜி படிக்கும் போது நீங்க இருந்தீங்களா.?

பொந்திலிருந்து சலனமில்லாமல் நாவினை நீட்டியவாறு மெல்ல எட்டிப் பார்க்கும் பாம்பைப் போலக் கடந்து போன வாழ்க்கை ஒரு துளி ஈரமாகக் கசிந்தது மூன்று வயது பேத்தியின் அந்த கேள்வியில்.

'அம்மு'... அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது..

"வர்ர்ர்றேன்மா" மடியிலிருந்து இறங்கி அம்மாவிடம் ஓடியது குழந்தை.

கசியும் ஈரத்துடன் ராணி அம்மாளின் வாய் மட்டும் முணுமுணுத்தது "இருந்திருக்கேன்டா கண்ணு. இன்னமும் கூட பழைய காலத்திலேயே தான் இருக்கேன்".

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...