Skip to main content

Posts

Showing posts from January, 2021

புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான்

உலகம் கண்டுகொள்ளாததையெல்லாம் ஒரு கவிஞன் உன்னிப்பாய் கவனிக்கிறான் உலகம் வெறுப்பதையெல்லாம் ஒரு கவிஞன் ஆழமாய் நேசிக்கிறான் உலகம் விரும்புவதையெல்லாம் ஒரு கவிஞன் வெகுவாய் வெறுக்கிறான் உலகம் சிறப்பற்றதென ஒதுக்குவதையெல்லாம் ஒரு கவிஞன் நினைவடுக்கில்  சீராய் அடுக்கி வைக்கிறான் உலகம் எத்தனையோ கவிஞர்களைப் புறந்தள்ளினாலும் புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான் கார்த்திக் பிரகாசம்...

மகிழ்ச்சியின் கண்கள்

'இன்று  நீ அழகாக இருக்கிறாய்' புன்னகை பூக்கிறாள் தோழி மறுத்தேன் முணுமுணுக்கிறாள் அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது மகிழ்ச்சியின் கண்களில் காண்பதெல்லாம் அழகென்று கார்த்திக் பிரகாசம்...

அம்மா கிடைத்தாள்

அம்மா இறந்தாள்  அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போனது மகள் பிறந்தாள் அன்பு அரவணைப்போடு அம்மாவும் கிடைத்தாள் கார்த்திக் பிரகாசம்...

அழுகுரல்

தொடர்ந்து ஒலிக்கிறது  அந்த அழுகுரல் நேசிக்கவும் வெறுக்கவும் வைத்த அழுகுரல் குழந்தையின் சிணுங்கலாய்த் தொடங்கி அபலையின் அலறலாய் நீளும் அழுகுரல் விழிநீர் விசத்தில் தோய்த்தெடுத்த வாளை நேராய் தொண்டைக் குழியில் இறக்கும் அழுகுரல் கனவிலும் கேட்கும் உடலில்லாத அழுகுரலைப் பற்றிக் கொண்டு நானும் அழுகிறேன் அழுகுரல்களின் ஓலமாய் கனக்கிறது இரவு கார்த்திக் பிரகாசம்...

வாசனை

முன்னாள் காதலனின் திருமணத்திற்குப் பரபரப்புடன் தயாராகிறாள் தோழி அவனுக்குப் பிடித்த அரக்கு வண்ணத்தில் சேலையுடுத்தி நிலைக் கண்ணாடியே சோர்ந்திடுமளவிற்கு ஒவ்வொரு மடிப்பையும் சரிப்படுத்தி செந்தூர பொட்டு மையமாய் அதன் மேல் குங்கும கோட்டினை அளந்திழுத்து எத்தனையோ நாள் எங்கோ பரண் மேலிருந்த அட்டைப் பெட்டியை அவசர அவசரமாக உயிர்ப்பிக்கிறாள் சின்னதும் பெரியதுமாகப் பல பரிசுப் பொருட்கள் கடிகை கைக்குட்டை கால் கொலுசு அன்னா கரினீனா புத்தகம் ஆங்கில கவிதைகளால் நிரம்பிய காதலிச அட்டைகள் சுளுவில் சொல்லிவிட முடியாத மேலும் சில தூசாக கண்களை நெருடுகிறது கடந்த காலம் தூசியோடு காலத்தையும் சேர்த்து ஊதித் தள்ளுகிறாள் அறையெங்கும் பரவுகிறது அந்த பழைய காதலின் வாசனை கார்த்திக் பிரகாசம்...

ஒருமுறை காதலித்துவிட்டால் போதும்

கவலைக்கு  காலத்திற்கேற்ப பிரத்தியேக காரணம் இருக்கும் என்று கட்டாயமில்லை ஒருமுறை காதலித்துவிட்டால் போதும் கார்த்திக் பிரகாசம்...

முகமற்றவன்

சமயங்களில் என் முகம் நினைவில் நிற்காமல் போய் விடுகிறது ஏதேதோ முகங்களைப் பொருத்தினாலும் அது என் முகம் போலில்லை நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் நபர் என்னைத் தெரியவில்லை எனச் சொல்வாரென்று ஒவ்வொரு முறையும் ஊகிக்கிறேன் சொந்த கண்களுக்குப் பழகிடாத முகம் மூளையில் பதிய மறுக்கிறது சில வேளைகளில் கண்ணாடியில் தெரியும் முகம் என்னுடையதா என சந்தேக பிம்பம் மேல் எழும்புகிறது எல்லாவற்றிற்கும் மேலாகச் சிலர் என்னை உற்று நோக்கும் போது முற்றிலும் முகமற்றவனாகி விடுகிறேன் முகமற்றவனைத் தான் முகமன் கூறவில்லையென்று அவர்கள் குறையாடுகிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

அவசியம்

தொடர் உரையாடலைப் போலவே அச்சுறுத்தாத மௌனமும் அவ்வப்போது தவிர்க்க முடியாததாகிறது ஜனனத்திற்கு முன்பான பிரசவ வலியைப் போல கார்த்திக் பிரகாசம்...

சவாரி

அண்ணே சின்னவங்களுக்கு நூறுவா பெரியவங்களுக்கு எரநூறுவா பத்து வயதைக் கடந்திடாத சிறுவன் குதிரைச் சவாரிக்கு விலை பேசுகிறான் பேரம் படிந்ததும் குழந்தை அம்மாவுடன் குதிரையேறுகிறது கயிற்றை வீசுகிறான் சிறுவன் பலவற்றில் தன்னுடையதும் ஒன்றாக குளம்படியை மணலில் பதித்தவாறு சுணக்கமின்றி கிளம்புகிறது குதிரை சவாரி செய்யும் குழந்தையின் சிரித்த முகத்தையே மெய்மறந்து பார்க்கிறான் சிறுவன் மணல் சிதறலில் சிறுவனின் தொலைந்த பருவத்தை குளம்படியில் இறைக்கிறது குதிரை கார்த்திக் பிரகாசம்...

எச்சம்

சில்லறை நாணயத்தையும் ரூபாய்த் தாளையும் நீட்டினால் குழந்தை கூட ரூபாய்த் தாளையே எடுக்கின்றது பணம் பாதாளம் வரை பாயுமே நண்பனொருவன் கெக்கலிக்கிறான் கண்டுகொள்ளாவிட்டாலும் கல்லாப்பெட்டி நிறைகிறது கடவுளுக்கு பணம் தன்னே அதள பாதாளத்திலும் மீட்குமே இன்னொருவன் புலம்புகிறான் எதிலுமே ஆழ்ந்திராத சமநிலையான பைத்தியக்கார மனதிற்கு பணமொரு எச்சம் உமிழ்ந்தாலும் உட்கொண்டாலும் எச்சம் கார்த்திக் பிரகாசம்...

காலம்

மழை நனைந்த சாலையில் அகல விரித்த கண்களோடு செத்துக் கிடக்கும் நாயின் கண்களினிலே ஒரே புள்ளியில் உறைந்து நிற்கிறது காலம் கார்த்திக் பிரகாசம்...

காலம் உண்ணும் மனிதர்கள்

மூப்பின் கொட்டகையில்  ஒவ்வொரு இரவும் கடந்த காலத்தின் ஏதோவொரு கனமான நாளில் உயிரின் ஒரு துளி குருதியை உறிஞ்சியபடி மறுத்துப் போன வலியுடன் விடிகின்றது சுருங்கிய தோல் சுண்டிய தசைகளைக் கடந்த காலத்திடம் காட்டி கேளிக்கை செய்கின்றது நிகழ் பொழுது காலம் கடந்துவிட்டதாகச் சுருக்க ரேகைகளில் கண்ணீர் ஊர்கையில் இன்னுமொரு மனிதனின் வீழ்ச்சியைக் கண்ணுற்றவாறே கள்ள மௌனத்துடன் பகலிரவைப் போர்த்தியபடி நகர்கிறது காலம் கார்த்திக் பிரகாசம்...

கதை மாந்தர்கள்

உறக்கம் கூடவில்லையென்று மருத்துவர் எழுதித் தராத உறக்க மருந்தான புத்தகம் வாசித்தேன் இந்த மருந்து வேலை செய்யாமல் இருந்ததில்லை எப்போதும் வெற்றி தான் மெல்ல மெல்லக் கண் கூடியது உறங்குவது போல உறங்குகிறேன் கதை மாந்தர்கள் கனவில் கதையைத் தொடர்கிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

மனசாட்சி

உன் தர்க்கப்பூர்வமான கேள்விகளைக் கொதி உணர்ச்சியின் வேகத்திலெழுந்த கோவத்தின்பால் அடக்கி வெற்றிச் செருக்கில் ஆளோடினேன் நெடுநேரம் நீடித்தோடிய உந்தன் கண்ணீர்த்துளிகளில் சுக்கிலம் கக்கிய குறியாய் கொதிநிலை தளர்ந்ததும் உறக்கம் களைந்த மனசாட்சி இப்போது எட்டிப்பார்க்கிறது அது முழுதாய் மென்று தின்பதற்குள் என்னிடம் பேசிவிடு கார்த்திக் பிரகாசம்...