Skip to main content

Posts

Showing posts from April, 2021

யாரோ ஒருவன்

இன்று அதிகாலை வரை நடமாடிய  சனங்களில் ஒன்று சவமாகிக் கிடக்கிறது ஊரே கூடியது ஓலக்கூரையும் ஓட்டையில் கண்ணீரை ஒழுகவிடும் வேடிக்கை பார்ப்பவனும் வோவென வெடித்துக் கதறும் ஒப்பாரி ஓலங்கள் வேதனையை வீசி அயர்ந்தன கிளைகள் புலம்பலை ஊற்றி மூழ்கின நேரங்கள் கிழிந்த ஆடையில் நைந்த‌ முகத்தில் சடுதியில் வந்தான் ஒருவன் கையில் மாலை இல்லை முகத்தில் சோகக் கண்ணீர் இல்லை பழுத்த இலை உதிர்வதைப் போன்ற முதிர் சிரிப்பில் சவமாய் கிடக்கும் பிண்டத்தை வணங்கிய அவன் வெடுவெடுவென நகர்ந்து மறைந்தான் வெயில் அப்பிய அவன் முகத்தில் சவத்தின் சாயல் இருந்ததை நான் மட்டுமே பார்த்தேன் கார்த்திக் பிரகாசம்...

மயானம்

விறகடுப்பில் இருந்து விடுதலை வேண்டியவளின் விருப்பம் இறுதியில் நிறைவேறியது மின் மயானத்தில் கார்த்திக் பிரகாசம்...

காரணமவள்

சில கவலைகளுக்குக் காரணம் இருப்பதில்லை அதுபோன்ற இல்லாத காரணத்தின் கவலையில் நாள் முழுக்கத் தோய்ந்திருந்தேன் இளம் வெயிலின் சாயலில் அருகில் வந்தாள் உன் கவலைக்கு நான்தான் காரணமா எனக் கேட்டு அம்மாவை தேடியழும் மழலையின் முக பாவத்தோடு இருளில் மறையும் நிழலைப் போல் நகர்ந்தாள் பிறகென்ன பின்னான கவலைக்குக் காரணம் அவளாகிப் போனாள் கார்த்திக் பிரகாசம்...

'நூல்' அளவு

என்னிடம் தட்டிப் பிடுங்கிய வாய்ப்பு தான் மணக்க மணக்கப் பரிமாறப்படுகிறது உங்களது இலைகளில் வாய்ப்பே வழங்கிடாமல் என்னால் முடியாது என முடிவெடுத்தீர்கள் அல்லவா உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம் 'நூல்' அளவே கார்த்திக் பிரகாசம்...

கனத்த இரவு

இரவே சுயம் மறந்துறங்கும் அர்த்த ராத்திரியில் பசியால் வீறிடுகிறது  தூளியில் மிதக்கும் குழந்தை செவிடாய் இருப்பினும் கேட்டுவிடும் போலக் குழந்தையின் அழுகை அன்னைக்கு பாரமிழந்த உடலின் எடையை மீட்டினாள் தொட்டிலில் மிதந்த குழந்தை அடுத்த நொடி அவளின் தொடைகளின் மேல் மீண்டது உள்ளாடை அணியாத சௌகரியத்தால் எளிதில் திறந்து காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள் அனிச்சையாய் இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை குழந்தையும் கூட குழந்தையின் எச்சிலில் மயிர்க்கூச்செறிய விரைத்த காம்பு பாலமுதை பாய்ச்சியது சிலிர்த்த உடலைச் சீர்செய்யக் கண் விழித்தாள் கண்களைத் திறவாமல் உதட்டினை மட்டும் நமுட்டி உணவினை உறிஞ்சும் குழந்தை அதிசயம் ஊறிக் கொண்டிருக்கும் மார்பில் ஊறியது உதடுகளால் மென் கன்னங்களால் பசியாறிய குழந்தையைத் தொட்டிலில் இட்டாள் சுளீர் சுளீரென உள்ளிழுத்த பால் கனத்த மார்பின் வலி குழந்தைக்கு எப்படித் தெரிந்திருக்கும் பாரம் தீர்ந்த வலி கண்ணீராய்ச் சொட்டியது கனத்த இரவை இலகுவாக்கி கார்த்திக் பிரகாசம்...

பேரமைதி

நிலைத்த கண்களும் உறைந்த உடலும் அசைவற்ற அமர்வுமாய் அவ்வப்போது இறந்தநிலை போல் இருக்கும் உயிர் பிரிந்த பிறகு இப்படித் தான் இருக்குமோ என்றெண்ணுகையில் இதயம் தட்டி மெல்லியதாய் மூச்சுக் காற்று வெளிவரும் அது இருக்கும் இதைவிட பெரும் பேரமைதியாய் என்று கார்த்திக் பிரகாசம்...

குழந்தைமை

சிக்னலில் ஒரு குழந்தை உற்றுப் பார்க்கிறது அதன் கண்களில் என்னவாக தெரிவேன் நடமாடும் மரமாக கருத்த வானமாக நிமிர்ந்து நிற்கும் பூனையாக கண்ணாடி அணிந்த பொம்மையாக வண்டியோட்டும் சொப்பு சாமானமாக புவா சாப்பிடாவிட்டால் கடத்தி போய்விடும் பூச்சாண்டியாக பெரிய மனிதன் வேடம் பூண்டிருப்பவனுக்கு அந்த உலகத்தில் இடமே இல்லை கண்களை விரித்து புருவத்தை உயர்த்தி கன்னத்தை உப்பலாக்கி கரத்தை அலையாக்கி சட்டென புன்னகை சிந்தியது மீண்டதென் குழந்தைமை சிக்னல் விழுந்தது வண்டி புறப்பட்டது கார்த்திக் பிரகாசம்...

அப்பா என்ற ஓர் பதம்

நண்பனின் அப்பா இறந்துவிட்டார் கைகள் நடுங்குகின்றன குழிக்குள் சிக்கியதாய் தொண்டை நகர முடியாமல் திணறக் கண்கள் குளமாகின்றன உள் வாங்கிய மூச்சு உள்ளுக்குள்ளே ‌அடைப்பதால் சுவாசிக்கச் சிரமமாய் இருக்கிறது அவரை‌ பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை நொடியேனும் பழகியதில்லை ஆனாலும் இத்தனைக்கும் காரணம் 'அப்பா'‌ என்ற ஓர் பதமே கார்த்திக் பிரகாசம்...

பிசகு

நெத்தியில் பட்டையும்  கழுத்தில் கொட்டையுமாய் காலத்தில் திரிந்தவன் இவன் பக்தியோ பம்மாத்தோ அர்த்த மறியாதவற்றின் அர்த்தங்களை அன்றைக்கொன்றாய் அடுக்கிவைத்து உலவிய நாட்கள் தெரியாததையெல்லாம் விருப்பமில்லையென வெறுத்து ஏமாற்றிக் கொண்ட பகுத்தறியும் பக்குவமில்லா பொழுதுகள் பின்னான சிதைவுகளில் கண்களைச் சிமிட்டி சாட்டையை சுழட்டி காலமாடிய கள ஆட்டத்தில் புரிந்தது பிடிமானமென நினைத்ததெல்லாம் பிசகு கார்த்திக் பிரகாசம்...