காலையில் அம்மாவுடன் அலைபேசும் போது பேச்சுவாக்கில் நேற்றிரவு தூங்கத் தாமதாகிவிட்டது என்றார். ஏன் என்றதற்கு "லோக்கல் சேன்னல்ல நம்ம விஜய் படம் போட்ருந்தான். அதான் முடியுற வரைக்கும் பாத்துட்டு தூங்க லேட் ஆயிடுச்சு" என்றார்.நினைவுகள் என்னை பதின்ம வயது காலத்தில் கொண்டுப் போய் போட்டது. யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான விஜய் படங்களை நான் அம்மாவுடன்தான் பார்த்திருக்கிறேன். அது பிரியமானவளே ஆகட்டும், பத்ரி, ஷாஜஹான், வசீகரா,சச்சின், ஆதி, குஷி, கில்லி போக்கிரி ஆகட்டும். எல்லாம் அம்மாவோடு தான். துள்ளாத மனம் துள்ளும் படத்தில் "கழிவறையில் விஜய் அழும் காட்சியைத்" தொலைக்காட்சியில் பார்த்தே விஜய்யோடு சேர்ந்து நானும் அம்மாவும் பலமுறை அழுதிருக்கிறோம். அம்மாவுடன் பார்த்த விஜய்யின் அனைத்து படங்களுமே மிகவும் பசுமையானவை. மனதிற்கு இதமானவை. இன்றும் அந்த படங்களையோ, அந்த படங்களின் பாடல்களையோப் பார்க்கும் போது இனிமையாக இருக்கும்.
சொல்லப் போனால் அம்மாவுடன் படம் பார்க்கும் வரை விஜய்யை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனியாகச் சினிமாவிற்குச் செல்ல ஆரம்பித்த பிறகு விஜய்யின் மீதான ஈர்ப்புக் குறைந்துவிட்டது. பெரும்பாலான படங்கள் கைத் தட்டலுடன் முடிந்துவிட்டதே தவிர மனதைத் தொடவில்லை. மனதைத் தொடாததற்கு என்ன காரணமென்று யோசித்துப் பார்த்தேன்.
அம்மாவுடன் செல்லாததுக் கூட காரணமாக இருக்கலாம். தொட்டு போன அந்த தென்றலை மீண்டுமொருமுறைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசைத் துள்ளியெழுந்தது. அதனால் விஜய்யின் அடுத்தப் படத்திற்குக் கண்டிப்பாக அம்மாவுடன்தான் செல்ல வேண்டுமென்று முடிவுச் செய்து அலைபேசியைத் துண்டித்தேன். அலுவலகத்தை அடையும் போது எங்கேயோ "போக்கிரி பொங்கல்" பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment