மகன் வந்தான் மகள் வந்தாள் மருமகன் வந்தார் மகனின் நண்பர்கள் வந்தார்கள் மகளின் குழந்தைகள் வந்தார்கள் அவர்களுக்கு மூன்று வேளையும் நேரத்திற்கு உணவுப் பரிமாறப்பட்டது அனைவரும் சுவையாகச் சாப்பிட்டார்கள் வெளியே உலவச் சென்றார்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் மதியவேளைகளில் ஓய்வெடுத்தார்கள் அழுக்கு படிந்த அவர்களின் துணிமணிகள் சுத்தமாக வெளுக்கப்பட்டன குழந்தைகள் அலங்கோலப்படுத்திய பொருட்கள் அதேயிடத்தில் அழகாகச் சீர்படுத்தப்பட்டன அவர்கள் உறங்க வேண்டி தலையணை மற்றும் விரிப்புகள் நேர்த்தியாக விரிக்கப்பட்டன அனைவரும் உறங்கிய பின் அவள் உண்ணச் சென்றாள் அறை முழுவதும் அவளுடைய இருமல் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது இருமலை விழுங்க முயன்றாள் முடியவில்லை மூச்சு வாங்கத் தொடங்கியது சுடுதண்ணீரில் மிளகைக் கலந்து குடித்துவிட்டு படுத்தாள் அனைவரும் சுவையாக உண்ட மயக்கத்தில் விளையாடிய களைப்பில் நிம்மதியாக உறங்கிக் கிடந்தார்கள் ஒருவரும் அவளிடம் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை ஒரு வாரமாக அம்மாவிற்கு உடம்பு சரியில்லை கார்த்திக் பிரகாசம்...