ஒரு இந்து சமூக சீர்திருத்த மாநாட்டில் நிகழ்த்துவதற்காக டாக்டர். அம்பேத்கரால் எழுதப்பட்டு பேசப்படாத உரையின் எழுத்து வடிவமே "ஜாதியை அழித்தொழிக்கும் வழி". குறிப்பிட்ட அந்த சீர்திருத்த இயக்கமே தாமாகவே இவ்வுரையை அச்சடித்து வெளியிட முன்வந்து பின்பு பல்வேறு காரணங்கைளைச் சொல்லி பின்வாங்க அம்பேத்கரே புத்தகத்தை எட்டணாவிற்கு விற்றார். அம்பேத்கர் வெளியிட்ட அடுத்த ஆண்டே இப்புத்தகம் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டவர் நம் "பெரியார்".
இந்து மதத்தைப் பற்றியும்,அதன் சாதிய அமைப்புகள் பற்றியும் இதற்குமேல் ஒரு மனிதனால் ஆராய்ந்தறிந்து சொல்ல முடியாது. அம்பேத்கர் ஓர் மாமேதை. ஜாதியின் அடிவேரிலிருந்து அதன் கிளை இலைகள் வரை ஒன்றுவிடாமல் அலசியிருக்கிறார்.
தம் இனத்தவரிடமிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய "முகமதியர்கள்" பயன்படுத்திய சொல்லே "இந்து" என்பதாகும். முகமதிய படையெடுப்புக்கு முந்தயை சமஸ்கிருத புத்தங்கங்களில் "இந்து" சொல்லே காணப்படவில்லை.
கிட்டத்தட்ட நான்காயிரம் ஜாதிகளின் கூட்டிணைப்பே "இந்து" என்ற மத நிறுவனம். அதனால் ஓர் இந்து இந்துவாக வாழ்வதில்லை, அவன் தன் ஜாதியின் பிரதிநிதியாகவே வாழ்கிறான்.
வர்ணக் கோட்பாடுகள் ஒருவனை தன் ஜாதி சுவற்றைத் தாண்டாமல் கவனமாக அடைத்து வைத்துள்ளன. பிறப்பால் ஒருவனை பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்று பிரித்து, அவனைத் தன் தகுதிக்கேற்ற வேலையை, விருப்பத்திற்கேற்ற தொழிலை செய்ய விடாமல் தடுக்கின்றன. மேலும் பிராமண,வைசிய,சத்திரியன் மூவரும் சூத்திரனைக் காப்பவர்கள் போன்ற மாய தோற்றத்தை உண்டாக்கி வைத்துள்ளது. வேதங்களும், சாஸ்திரங்களும், மனுவும் ஒரு இந்துவை பகுத்தறிவு அற்றவனாக, எதிர்க் கேள்வி கேட்க வக்கற்றவனாக ஆக்கவே முனைகின்றன. இவையே ஜாதியையும் வலுவாகத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆதலால் அவற்றின் நம்பிக்கையின் மீது குண்டு வைக்க வேண்டும். அவர்கள் சாதியால் பிளவுக் கொண்டு தனித்திருக்கிறார்கள். சாதியை இழக்க இந்துக்கள் ஒருபோதும் தயாராய் இல்லை.
பொதுவுடைமையால் மட்டுமே சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியாது. சாதியை ஒழித்தால் மட்டுமே சமத்துவம் சாத்தியம்.
மேலும் இந்து மதம் கொள்கைகளாக இல்லாமல் வெறும் விதிகளாக மட்டுமே வகுக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்து மதத்தின் மீது கண்டிப்பாக சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான சீர்திருத்தம் "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.
அம்பேத்கர் இப்புத்தகத்தை வெளியிட்டு கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. பகுத்தறிவைத் தூண்டும் அவரின் கருத்துக்களைப் பின்பற்றி நாம் ஒவ்வொருவரும் முதலில் நம் அகத்திலிருத்து ஜாதி உணர்வைத் துளியளவுமில்லாமல் நீக்கி சமத்துவத்தை வளர்தெடுத்து பின்பு சமூகத்திலிருந்து ஜாதியை அழித்தொழிக்க அமைப்பாய் திரளவேண்டும்.
நாம் தான் சமூகம். நாம் ஒவ்வொருவரும் சமூகம். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமூகத்தை மாற்ற இயலாது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment