Skip to main content

"பள்ளிகொண்டபுர"த்தின் முடிவில் தொடங்கிய "ஏழு தலைமுறைகள்"

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுர" த்தை வாசித்து முடிக்கையில் மனம் சலனத்தோடிருந்தது.

தாம் செய்தது அசாத்தியமான தியாகம் என தன் பிள்ளைகளை நம்ப வைக்க முயற்சிக்கும் அனந்தன் நாயர். தனக்கு பிடித்துவிட்டது என்பதற்காகக் குழந்தைகளைப் பற்றிக்கூட நினைத்து பாராமல் வேறொருவருடன் சென்றுவிட்ட அம்மாவை முற்றிலும் வெறுக்கும், அப்பாவை விட அம்மாவின் மீது பெருத்த கோபமும் ஏமாற்றமும் கொண்டிருக்கும் மாதவிக்குட்டி. அப்பாவின் சந்தேகப் புத்தியினாலும், அளவுக்கு அதிகமான கோபத்தினாலும் அவரின் ஒருவித கோழைத்தனத்தாலும் தான் அம்மா அத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது. மீண்டும் திரும்பி வந்தபோது கூட அவளை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய அப்பா தான் அம்மாவின் அம்முடிவிற்கும் நம்முடைய இந்நிலைக்கும் முக்கிய குற்றவாளி என்பது போல் வாதிடும் பிரபாகரன் நாயர்.

இம்மூவரின் பார்வையும் அவரவர் நிலையில் இருந்து பார்க்கும் போது சரியானதாகத் தோன்றியது. ஆனால் இறுதி முடிவாக இவர்களில் எவருடைய நிலையை நான் ஏற்றுக் கொள்வது என்ற சலனம் மனதை உருத்திக் கொண்டே இருந்தது. ஆதலால் விரிந்த புரிதலுக்காக அந்நாவல் சார்ந்த பதிவுகளைப் படிக்க இணையதளத்தில் தேடினேன். அப்போது பரிந்துரைப் பட்டியலில் நீல.பத்மநாபனின் பிற நாவல்களான "தலைமுறைகள்" மற்றும் "உறவுகள்" புத்தகங்களுடன் "ஏழு தலைமுறைகள்" என்ற புத்தகமும் தோன்றியது. சரியென்று அப்புத்தகத்தைப் பற்றித் தேடினேன்". பல எழுத்தாளர்களின் பதிவுகள் கிடைத்தன.

"1750ம் ஆண்டு ஆப்ரிக்காவில் இருந்து வெள்ளையர்களால் அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கறுப்பர் இன மக்களின் கதை" என்று தெரிந்தது. மேலும் "கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை" என்ற மேற்கோள் புத்தகத்தின் மீதான ஆவலைத் தூண்டியது. கடைகளில் தேடினேன். எளிதாகக் கிடைக்கவில்லை. பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு "டிஸ்கவரி புக் பேலஸில்" கிடைத்தது. அந்த நாளே படிக்கத் தொடங்கினேன்.

அடிமனதை அடியோடு பிடுங்கி எறிந்திடும் கதைப் போக்கு. ஒவ்வொரு வரியும் வலியிலும், ரத்தத்திலும் எழுதப்பட்டிருந்தது. கறுப்பர் இன மக்கள் வெள்ளை இன வெறியர்களால் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட காட்சிகள் கண் முன்னே விரிந்தன. அவர்கள் அனுபவித்த சித்ரவதை ரணங்கள், கொடுமைகள் நேராக நெஞ்சுக்குள் ஈட்டியைப் பாய்ச்சியது போல் இறங்கின.

ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளையர்களால் கடத்தப்பட்ட ஒரு சிறுவன் ரணமான பல சித்ரவாதைகளுடன், கொடுமையான கசையடிகளுடன், ஒரு இடத்தில் உண்டு, அதே இடத்தில் கழித்து என சொல்லொணா கொடுமைகளுடன் கப்பலில் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுகிறான். அங்கு ஏலத்தில் ஒரு வெள்ளைக்கார எஜமானுக்கு அடிமையாக விற்கப்படுகிறான். பிறந்த நாட்டை பிரிந்து இத்தேசத்தில் கை கால்களில் சங்கிலிகள் இடப்பட்டு கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்படும் அவனின் தப்பிக்க முற்படும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. ஒரு கட்டத்திற்குமேல் சக அடிமையை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு தன் கதையைக் கூறுகிறான். அக்குழந்தை பிற்காலத்தில் வேறொரு எஜமான் வீட்டில் அடிமையாக வளர்கிறது. அவ்வீட்டின் எஜமான் மூலமாக அப்பெண்ணிற்கு ஒரு மகன் பிறக்கிறான். அவனுக்குத் தன் அப்பாவின் அடிமைக் கதையையும், தான் இங்கு அடிமையாக வந்த கதையையும் அப்பெண் கூறுகிறாள். இந்தக்கதை "ஏழு தலைமுறைகள்" இவ்வாறே வாய் வழியாக தன் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் "அலெக்ஸ் ஹேலி" அந்த ஏழாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.
1850ல் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை ரத்து செய்ததும் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அம்மக்கள் ஆறு தலைமுறைகளுக்கு பின்னர் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றனர்.

இது ஒரு கறுப்பினத் தலைமுறையின் கதை மட்டுமல்ல. ஒட்டுமொத்த கறுப்பினத்தின் கதை. வெள்ளை இன வெறியர்களால் அடக்கப்பட்டு சிதைக்கப்பட்ட அவர்களின் வாழ்வியல். அவர்களின் அடிமனதிலிருந்து வெகுகாலமாக வெளிவரக் காத்திருந்த சுதந்திரக் குரல்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...