ஒரே நேரத்தில் குறிவைத்து எய்யப்பட்ட ஆயிரமாயிரம் அம்புகளைப் போல உடலைக் குத்தித் துளைக்கின்றன மழைத்துளிகள். பகலெது இரவெது என்ற தகவல் அறியவிடாமல் பெய்யென பெய்யும் பேய் மழை. உடல் நடுங்குகிறது.
"இருந்தாலும் இந்த மழை ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது".
மழை தந்த ஈரத்தால் கனமான தலைமுடியை உதறிக் கொண்டே பேருந்தில் ஏறினேன். எப்பொழும் போல ஓட்டுநரின் பக்கவாட்டில் இருக்கும் முன் இருக்கைக்குச் சென்றேன். ஜன்னல் இருக்கை ஆளில்லாமல் தனித்திருந்தது. மழையில் நனைந்திருந்தது. மழைக்கால ஜன்னல் இருக்கையை போல என்றோவொருநாள் நானும் எல்லோராலும் கைவிடப்படுவேனோ.?
ஆனால் அது என்னமோ தெரியவில்லை சாலையை மறைக்காத அந்த முன் இருக்கையில் அமரும் போது மனதிற்குள் ராணியைப் போன்ற ஓர் உள்ளுணர்வு.
ஜன்னலில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள் உடலையும் உள்ளாடையையும் நனைக்கையில் உலராத ஈரம் உயிரின் மூலத்தைத் தொட்டுச் செல்கிறது.
அணிந்திருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த வட்ட மழைத்துளிகளின் வழியே பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்த அந்த வயதான உருவத்தைப் பார்த்தேன்.வளைந்த கைத்தடியைப் போலிருந்தது. குறுகிய உடல்.குளிருக்கு நடுங்கும் கோழிக் குஞ்சாய் இருந்தது.நரைமயிர் முழுவதும் மழையில் நனைந்து, ஒற்றை முடிக்கற்றையாய் முன் நெற்றியில் விழுந்தது. அடர்ந்த வெண்ணிற தாடி இரு காது மடல்களையும் இழுத்துப் பிடித்திருந்தது. தோளில் போட்டிருந்த துண்டில் கண்ணாடியைக் கழட்டித் துடைத்து மீண்டும் மாட்டிக் கொண்டார்.நடத்துனரிடம் சலுகை அட்டையைக் காட்டிவிட்டு,காலடியில் இருந்த பிளாஸ்டிக் பைக்குள் வைத்திருந்த பிளாஸ்க்கை எடுத்து டீக்குடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கோ வயதான என் ஆண் உருவம் என்னருகிலயே அமர்ந்து டீக்குடிப்பதை போலிருந்தது.
வாயை விரித்திருந்த பிளாஸ்டிக் பையில் அசோகமித்திரனின் மவுனத்தின் புன்னகைப் புத்தகமும், பிளாஸ்க்கும், பிரிந்த பாதி காலியாகியிருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் மற்றும் இன்னும் சில தின்பண்டங்கள் சிந்தியும் சிதறியும் கிடந்தன. அதைக் கண்டதும் பேருந்து கண்ணாடியில் பதிந்திருக்கும் மழைத்துளிகளைத் துடைத்தெறியும் துடைப்பானைப் போல, நினைவுகள் மனதைத் துடைத்து மீண்டும் நிறைத்தன.
பழைய சென்னையின் மங்கலான நினைவுகளுடன் மெட்ராஸ் தாத்தாவின் மெல்லிய உருவம் பக்கத்தில் வந்தமர்கிறது. உடல் சிலிர்க்கிறது.
அம்மாவுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு பெரியம்மா. இரண்டு சின்னம்மா. இரண்டு மாமாக்கள். என்னோடு சேர்த்து மொத்தம் பதினோரு பேத்தி பேரன்மார். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என எந்தத் தொடர் விடுமுறையானாலும் நாங்கள் கரூரிலிருந்து அம்மாச்சி வீட்டிற்குச் சென்று விடுவோம். சொல்லுக்கு தான் அம்மாச்சி வீடு. மத்தபடி எப்பொழுதுமே எங்களுக்கது "மெட்ராஸ் தாத்தா வீடு" தான். எண்பதுகளின் முடிவில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் சென்னையாக மாறுவதற்கு முன்னிருந்த மெட்ராஸின் மீது எனக்கு அலாதியான காதலை ஏற்படுத்தியவர் தாத்தா. சொல்லப் போனால் தாத்தாவின்பால் இருந்த பேரன்பும், பெரும் வியப்பும் தான் மெட்ராஸ் மீதான என் ஈர்ப்புக்கு முதல் அஸ்திவாரம்.
தாத்தாவின் வீடு நுங்கம்பாக்கத்தில் இருந்தது. தாத்தா எழிலகத்தில் ஏதோவொரு வேலையில் இருந்தார். என்ன வேலையென்று சரியாகத் தெரியவில்லை. தினமும் மாலை ஆறு மணிக்கு அலுவலத்தில் இருந்து திரும்பி வரும் போது, நாங்கள் பேரன் பேத்திகள் எல்லோரும் முகம் கழுவி, பவுடர் பூசி, சீவி சிங்காரித்து தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாவையும், அம்மாச்சியையும் தீட்டித் தீர்த்துவிடுவார். வீட்டிற்குள் வந்ததும், "இன்று எங்கே செல்லலாம், பார்க்கா இல்ல பீச்சா" என்று எங்களைப் பார்த்துக் கேட்பார். நாங்களும் அவருக்காக ஆவலோடு காத்திருப்போம்.
நாங்கள் இருக்கும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பார்க்கிற்கும், பீச்சிற்கும் கூட்டிச் செல்வார். வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே பார்க் இருந்தது. அங்கு எங்களை விளையாட வைத்து, உடன் விளையாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தின்பண்டங்கள் வாங்கித் தருவார். பீச்சிற்குக் கூட நாங்கள் அனைவரும் நடந்தே செல்வோம். கண்ணில்படும் தின்பண்டங்களையெல்லாம் கேட்டுக் குழந்தைகளான நாங்கள் அடம் பிடிப்போம். ஓரிருவர் என்றால் பரவாயில்லை. ஆனால் ஒரு குழந்தைக் கூட்டமே ஓ'வெனக் கத்தியழும். ஆனால் ஒருமுறைக் கூட எங்களிடம் தாத்தா அதிர்ந்துப் பேசியதே இல்லை. கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். எங்களைச் சாப்பிட வைத்து அழகுப் பார்ப்பார். அன்பாகப் பேசுவார். அருமையான மனிதர். ஒருநாள் இரவு ஏதோ பிரச்சனைக்காக அவர் அம்மாவைத் திட்டிக் கொண்டிருக்கையில் நான் தூக்கத்திலிருந்து பயந்து போய் எழுந்து அழ ஆரம்பித்துவிட்டேன். உடனே தாத்தா பதறிவிட்டார். தேம்பிக் கொண்டிருந்த என்னைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே போனார். கிட்டத்தட்ட நடுராத்திரி. ஒரு பெட்டிக் கடை கூட இல்லை. நானும் அழுகையை நிறுத்தியபாடில்லை. மைல் கணக்காய் தோளில் என்னைத் தூக்கியலைந்து, எங்கோவொரு மூலையிலிருந்த பெட்டிக் கடையில் எனக்கொரு முறுக்கு பாக்கெட் வாங்கித் தந்து,"என் கண்ணுல்ல, அழாத" என்றுச் சொல்லி என் கண்களைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டார். பின்புதான் என் அழுகை ஓய்ந்தது. எங்களுக்குச் செலவுச் செய்ய அவர் யோசித்ததே இல்லை. பேருந்திற்குக் கூட மெட்ராஸுக்கு வரும் போது மட்டும்தான் நாங்கள் டிக்கெட்டிற்குச் செலவுச் செய்வோம். திரும்பிச் செல்லும் போது எப்போதுமே எங்கள் அனைவருக்கும் அவரே தான் டிக்கெட் எடுத்து வழியனுப்பி வைப்பார். மேலும் அவர் "இது பெரிய மகள் பெற்றது, இது சின்ன மகள் பெற்றது, இது மகன் வீட்டு வாரிசு" என்றெல்லாம் பாரபட்சம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாங்கள் எல்லோரும் ஒரே வானில் வீற்றிருந்த வீண்மீன்களாய் இருந்தோம். அவர் வானமாய் இருந்தார். அதில் நாங்கள் பிரகாசமாய் மின்னினோம்.
தாத்தாவிற்கு ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார். தாத்தாவின் வீட்டிற்கு அருகிலேயே அவரின் வீடும் இருந்தது. அவர் தினமும் எங்களை வாசலில் வட்டமாக அமரவைத்து விளையாட வைப்பார். பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். அதுபோல ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் போட்டி வைத்தார். ஜெயிப்பவர்க்கு பரிசுத் தருகிறேன் என்று முந்தைய நாளே சொல்லி இருந்தார். அடுத்த நாள் எப்படியோ திக்கித் திணறி வெற்றிகரமாக ஒரு திருக்குறளைச் சொல்லிவிட்டேன். அன்றைய நாள் அந்தத் தாத்தா திருக்குறள் புத்தகத்தைச் சொன்னபடியே எனக்கு பரிசளித்தார். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்திட்ட முதல் பரிசு அது. நான் பரிசு வாங்கியதை அம்மாச்சி சொல்லக் கேட்டு பெருமையாகப் புன்னகைத்தார் மெட்ராஸ் தாத்தா. வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத, "என் பேத்திக் கெட்டிக்காரி" என்றுச் சொல்லும் அந்தக் கர்வமானச் சிரிப்பு.
அம்மாச்சியின் மீது பேரன்பு. பேரன்பின் மீது பேராசைக் கொண்டவர். அதுவும் அம்மாச்சிக்கு. சண்டை போடுவார். திட்டுவார். ஆனால் ஒருநாளும் அம்மாச்சி இல்லாமல் இருந்ததே இல்லை. அவரால் இருக்கவும் முடியாது. அம்மாவும் பெரியம்மாவும் பேசிக் கொள்வார்கள், "அம்மாக்கு முன்னாடி இந்த மனுஷன் போய் சேந்தரனும். அம்மா இல்லாம இவர் படர கஷ்டத்த பாக்குற சக்தி நமக்கு இல்ல" ன்னு. ஓரளவிற்கு விவரம் தெரிந்த பிறகு நானும்கூட அவ்வாறு எண்ணியிருக்கிறேன். பாட்டி படுத்த படுக்கையாய் இருந்த போதும்கூட அவரே உடனிருந்து எல்லா பணிவிடைகளையும் செய்துக் கவனித்துக் கொண்டார். நாங்கள் வேண்டிக் கொண்டது போலவே கடைசிக் காலத்தில் அம்மாச்சிக்கு முன்னமே அவர் இறந்துப் போனார்.
சாகும் வரையில் அவர் எந்த மகனையும், மகளையும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக தன் மகன்களையும்,மகள்களையும் மற்றும் பேரன் பேத்திகளையும் தான் சாகும் வரையிலும் எந்தக் குறையுமில்லாமல் கவனித்துக் கொண்டார். அவருக்கான அத்துனைப் பாத்திரங்களையும், அது கணவனாகட்டும், தந்தையாகட்டும், தாத்தாவாகட்டும் மிகச் செவ்வனே செய்திருந்தார். மிஸ்டர்.பர்ஃபெக்ட் என்பார்களே அது போல.
நான் படித்து முடித்து வேலைக்காக மெட்ராஸுக்கு வந்தபோது அது சென்னையாக மாறியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் இருந்து பீச் தொலைத் தூரமாகியிருந்தது. வீட்டிலிருந்து நடந்துச் செல்லும் தொலைவில் எந்தப் பார்க்கும் இல்லை. மெட்ராஸ் தாத்தாவும் உயிரோடு இருக்கவில்லை.
ஆனால் வெற்றுடலாக கிடந்த நான் பார்த்த சென்னைக்கு, மெட்ராஸ் தாத்தாவின் நினைவுகளே புத்துயிர் மீட்டிக் கொடுத்தன. நித்தம் நித்தம் மீட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்கு இம் மழைத்துளிகளே சான்று.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment