எழுதியவர்: எஸ்.தேவி
வகைமை: நாவல்
வெளியீடு: ஸீரோ டிகிரி
பலவீனமான பொருளாதாரத்தின் படிக்கட்டுகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அன்றாடம் தத்தளிக்கும் மக்களிடம் நேரடியாகச் சென்று சுலபமான வேலை, சிறப்பான வசதி, நல்ல சாப்பாடு, பயிற்சி காலத்திலேயே சம்பளம் மேலும் மிக முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு எனப் பயிற்சியளித்த தரகர் குழுவின் மூலமாக நயவஞ்சகமாக மூளைச் சலவை செய்து பணியில் அமர்த்தி, பின்பு குறைவான சம்பளம், சிறை போன்ற கட்டுப்பாடு, உழைப்புச் சுரண்டல், உடல் சுரண்டல், நோய் என அவர்களை இரக்கமின்றி சீரழித்த கொங்கு மாவட்டங்களில் உள்ள பஞ்சாலை முதலாளிகளால் "சுமங்கலித் திட்டம்" என்ற மங்கலகரமான(?) பெயரால் தொடங்கப்பட்ட நவீன கொத்தடிமை திட்டம் குறித்து துணிச்சலாகப் பேசியிருக்கின்றது எழுத்தாளர் தேவி எழுதியுள்ள 'பற்சக்கரம்' நாவல். ஏன் பெண்களை மட்டும் வேலைக்குச் சேர்க்கிறார்கள்? அதிலும் திருமணமாகாத அல்லது திருமணமாகிக் கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் குறிவைக்கிறார்கள்? அதற்குப் பின்னுள்ள முதலாளி வர்க்கத்தின் தந்திரத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
ஆலையில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளைப் பேச்சுக்குப் பேச்சு "என் புள்ளைங்க" என புளங்காகிதமடையும் எந்தவொரு முதலாளியும் தன் சொந்த மகனையோ/மகளையோ வியர்வை சிந்தும், அதிக உடல் உழைப்பு கோரும் வேலையில் ஒருபோதும் அமர்த்துவதே இல்லை. அதுமட்டுமல்லாமல் "தொழிலாளியின் இரத்தத்தை விட முதலாளியின் லாபம் பெரிது" என்னும் முதலாளி வர்க்கத்தின் தாரக மந்திரத்தின்படி தொழிலாளர்களிடம் என்றைக்கும் முதலாளி என்னும் மனிதனைக் கடவுள்(?) ஸ்தானத்தில் நிலைநிறுத்தி வைக்கும் பூசாரி வேலையை, வெளிப்புறத்தில் மின்னுவது போல் தோற்றமளிக்கும் அதிகார சாட்டை போன்ற அமைப்பிலான பொம்மை சாட்டையை மற்றவரைக் காட்டிலும் ஒருபடி மேற்பதவியில் இருக்கும் இன்னொரு தொழிலாளியிடமே வழங்கி அதனை சாதுரியமாகச் சாதித்துக் கொள்கிறார்கள் என்பதையும் பேச நாவல் தவறவில்லை.
மறுபுறம் குடும்பச் சூழலின் காரணமாக இந்த உழைப்பு சுரண்டலுக்குள் அகப்பட்டுக் கொண்ட ரம்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நொடிந்த குடும்பம், மனைவி படித்திருந்தாலும் வேலைக்கு அனுப்பாத கணவனின் ஆணாதிக்க போக்கு, குடும்ப மேம்பாட்டுக்கென சுரண்டப்பட்டு கடைசியில் ஏமாற்றப்படும் பெண்களின் உழைப்பு என குடும்ப அரசியலையும் தொட்டுச் செல்கிறது.
நூலாலை முதலாளியின் கதாபாத்திரமும், அரசியல்வாதியான சுப்பையாவின் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment