எழுதியவர்: ஷோபாசக்தி
வகைமை: நாவல்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
கை, கால்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்ட சிறு சிறு பிள்ளைகளினது உலகில், குழந்தைத்தனம் நிறைந்த அப்பா, அம்மா விளையாட்டு நீர்த்துப்போய், அந்த இடத்தில், "நீ ராணுவம், நான் இயக்கம்" எனச் சண்டை போட்டு விளையாடுமளவிற்குப் போர் என்னும் பேரழிவு நிகழ்த்திய இனியொரு காலத்திலும் மீட்ட முடியாத இழப்பின் நிஜச் சாட்சியங்களாக இருக்கிறார்கள் குழந்தைகள்.
போர் முடிந்த பிற்பாடும் தொடரும் இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களையும், அவர்தம் ஆக்கிரமிப்புகளையும் பேசுவதோடு மட்டுமல்லாமல், சாதிய ஒடுக்குமுறைகளையும் ஆழமாகப் பதிவு செய்கிறது நாவல். மேலும், கார்த்திகையாக அமையாள் கிழவி இறக்கும் பகுதி வலியுடன் கூடிய மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது.
ஷோபாசக்தியைத் தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருக்கிறேன்."கொரில்லா"வில் வரும் ரொக்கி ராஜ், இயக்கத்திலிருந்து வெளியேறியதும் புலம்பெயராமல், ஒருவேளை நாட்டிலேயே இருந்திருந்தால், அவன் "BOX" நாவலில் வரும் சகோதரம் ரேமன் பக்ததாசாக இருந்திருப்பான். அதேபோல, "ம்" நாவலில் வரும் நிறமி, இந்நாவலின் இதயராணியாக இருந்திருக்கக் கூடும். இந்நாவலின் அமிர்தகலாவும், இச்சாவின் ஆலாவும் அடிப்படையில் பார்த்தால் ஒருவரே எனத் தோன்றுகிறது.
முக்கியமாக, பாலச்சந்திரனும், பதுமனும், கார்த்திகையும் [சந்த ஸ்வஸ்திக தேரர்], அயிலான் குர்தியும் வேறுவேறு அல்லர்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment