எழுதியவர்: ஷோபாசக்தி
வகைமை: நாவல்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
வகைமை: நாவல்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
கண்டி ரஜ வீதியின் சிறைக் கொட்டடியில் அடைபட்டிருக்கும் பெண்ணொருத்தி, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் எழுதுகிறாள். முந்நூறு வருடச் சிறைத் தண்டனையில் மீதமிருக்கும் சொற்ப நாட்களைக் கடக்கும் பொருட்டு, தனது நினைவறையில் நிரந்தரமாகப் பதிந்துபோன சுவடுகளைக் காகிதத்தில் மீட்டெடுக்கிறாள்.
இலுப்பங்கேணி என்னும் கிராமத்தில் பிறந்த வெள்ளிப்பாவை என்ற சிறுமி, காலம் கையளித்த தகிக்கும் வெப்பச் சூழலின் அழுத்தத்தினால் ‘ஆலா’ என்னும் பெயரில் சிறுவர் போராளியாகப் புலிகள் இயக்கத்தில் இணைகிறாள். களப் பயிற்சிகளை எளிதில் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்படுவதாலும், மேலும் சிங்களத்தில் சரளமாகப் பேசவும், பத்திரிகைகளில் வெளியான செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்திடும் அளவிற்குச் சிங்களத்தில் மொழித் திறன் கொண்டிருந்த காரணத்தினாலும், ஆலாவை ‘கரும்புலி’யாக்குகிறது இயக்கம்.
உடலையே ஆயுதமாக்கி மாயும் தற்கொடை(லை)த் தாக்குதலின் மூலம் மாட்சிமை மிக்க மரணத்திற்கு ஆய்த்தமாக்குகிறாள் ஆலா.
இலங்கை அமைச்சர், மற்ற பிற அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் சாலை மேம்பாலத் திறப்பு விழாவில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிடப்படுகிறது. பாலத்தின் இருமுனைகளிலும் குண்டு வெடிப்பிற்கு ஆலாவும் [கிழக்கு], இன்னொரு கரும்புலி சிறுவனும் [மேற்கு] தயாராக இருக்கின்றனர். அவ்விழாவில் எதிர்பாராத விதமாகக் கிழக்கு முனையில் தொடங்கும் ஊர்வலத்தில் “புலிகளை ஆதரிக்கும் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரும் பங்கேற்கிறார். குண்டு வெடிப்பில் அவர் சிக்கிக் கொண்டால் இயக்கத்திற்குச் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தினால் கிழக்கு முனையில் மட்டும் திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கிழக்கு முனையில் யாரையும் பாதிக்காவண்ணம் [குறிப்பாகத் தூதுவர்] குண்டு வெடிக்க வேண்டும். ஆலா கூட்டத்திலிருந்து விலகி ஆட்கள் குறைந்த பாலத்தின் மத்திய பகுதிக்குச் செல்கிறாள். திட்டமிட்டபடி மேற்கு முனையில் குண்டு வெடிக்கிறது.
மாட்சிமை மிக்க ஒரு மரணத்திற்காக உடலையும், மனதையும் ஆயத்தமாகி வந்த ஆலா, பாலத்தின் வேறு சுவர்களை வெடிக்க வைத்துத் தனது மரணத்தின் மதிப்பைக் குறைத்துக் கொள்ள தயங்குகிறாள். மரணத்தை முத்தமிட்டு அணைத்துக்கொள்வதில் அவளுக்கு எந்தப் பிசிறும் இல்லை; ஆனால் அது மாட்சிமை மிக்க மரணமாக இருக்க வேண்டும். உயிர் என்னும் பேராற்றலைத் திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பது போலச் சாவுக் குடித்துவிடக் கூடாது என்ற கூற்றில் உறுதியாக இருக்கிறாள். பெருந்தயக்கம் சூழ்ந்து மரத்து உடல், மரத்து நின்றிருந்த கணத்தில் போலீஸ் கைது செய்கிறது.
நாவலின் முற்பகுதி நிகழும் களமான கிழக்குப் பகுதியின் மாந்திரீகம், பாடும் மீன்கள், சலதேவதைகள் [நீரரமகளிர்], நாக தம்பிரான்கள், கண்ணகி அம்மன் வழிபாடு [திருக்குளிர்த்தி - சினங்கொண்டு மதுரையை எரித்த பிற்பாடு உக்கிரத் தெய்வமாக, தான் தங்கியிருந்த ஆயர் சேரிக்குக் கண்ணகி வந்தபோது, அங்கிருந்தவர்கள் வசந்தன் கூத்துப் பாடியும், போர்த் தேங்காய் அடித்தும், கொம்பு முறி விளையாடிக் காண்பித்தும் கண்ணகியை மகிழ்வித்து, அவளது உக்கிரத்தைத் தணியப்பண்ணிக் குளிர்த்தி செய்தார்களாம்], கூத்து, நாட்டார் பாடல்கள் என அந்நிலத்தின் கலாச்சார மரபு சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
தமிழர் வாழ்ந்த பகுதிகளில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றச் சம்பவங்களும், அதனூடாக ஊர் மற்றும் ஆற்றின் பெயர் மாற்றங்களும், இந்திய அமைதிப்படை கட்டவிழ்த்த வன்முறை அராஜகங்களும், அப்போது சிறுமியாய் இருந்த வெள்ளிப்பாவையின் நினைவறையில் இருந்து ஆலா மீட்டெடுத்த சுவடுகளின் மூலம் கதையில் விரிகிறது. மேலும், புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டதையும், அதன் பொருட்டான மக்களின் கவலையையும் குறிக்கும் இடத்தில் வாணர் பொலியர் சொல்கிறார், “நாங்கள் அழியப் போகிறோம்”.
எக்காரணத்தைக் கொண்டும், தான் அடைய வேண்டிய இலக்கை நெருங்குவதன் பொருட்டான பயணத்தில் வன்முறையென்னும் வஸ்துவை ஓரே நம்பிக்கைப் பேராயுதமாக முன்னெடுக்கும் போது, அங்கு சர்வாதிகாரமே முதலில் உயிர்த்தெழுகிறது. பெண் புலிப்போராளிகள் வெளியாட்களை [இயக்கத்தில் இல்லாத ஆட்களை] காதலித்ததற்காக மரணதண்டனையை விதிக்கிறது இயக்கம். சிங்களப் பேரினவாதமோ, புலிக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்ததற்கு அப்பாவித் தமிழனின் தலையைக் கழுத்தோடு வெட்டி, அவனது பாதங்களின் கீழ் வைக்கிறது.
சிறையில் ஏகப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை. அதில் ஒரு பெண். டவுனில் பெண்களை வைத்து இராணுவ வீரர்களுக்காகப் பாலியல் விடுதி நடத்திய குற்றத்திற்காக இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கிறது இலங்கை அரசாங்கம். ஆனால், போர் முடிவுற்றதற்குப் பின்பான காலத் தொடக்கத்தில், அதே டவுனில் அமைச்சரின் ஆதரவு பெற்ற தமிழ் முதலாளி பாலியல் விடுதியொன்றை நடத்துகிறார். "யாழ்ப்பாண முதலாளிகள் இந்த வேசைத் தொழிலைக் கூட எங்களுக்கு விட்டுத் தரப்போவதில்லையா?" எனக் கடுஞ்சினத்துடன் ஆலாவிடம் கேட்கிறார்.
அதிகாரமும் பணமும் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்தால், உயிர் மூச்சைத் தவிர வேறொன்றும் இருப்பில் இல்லாத சாமானியர்களை, உதிரும்போது இலை ஏற்படுத்தும் மெல்லிய சலனம் கூட இல்லாமல் வீழ்த்திடும். அவர்கள் தடயமே இன்றிக் காணாமல் ஆக்கப்படுவார்கள். மேலும், அவற்றிற்குச் சாதி, மதம், இனம் என எதுவுமே கிடையாது. ஆதிக்க நிலைநாட்டலும், சுய அதிகாரத்தின் எல்லையை விரிவாக்குவதுமே அவற்றின் பிரதான நோக்கம்.
சிறை அதிகாரி, ஆலாவின் சீழ் பிடித்த பாதத்தின் புண்களைச் சூடு நீரில் கழுவி விடுகிறாள்.
சிறை அதிகாரி, ஆலாவின் சீழ் பிடித்த பாதத்தின் புண்களைச் சூடு நீரில் கழுவி விடுகிறாள்.
இளம்பெண்ணின் மீதான அனுதாபத்திலும், அக்கறையிலும் செய்கிறாளா அல்லது அவளைப் புலிகள் சார்பு கொண்ட சிங்கள அதிகாரியாகப் புரிந்து கொள்வதா என்ற குழப்பம் வருகிறது. ஏனென்றால், "இப்போதுதான் ஒரு புலியைப் போல் இருக்கிறாய்" என ஓரிடத்தில் ஆலாவைக் கண்டு சொல்கிறார் அந்தச் சிறை அதிகாரி.
நான் இன்னும் மனித உடலுடனும், உணர்வுகளோடும் இருக்கிறேன் என்பதைத் திறந்து காட்டுவதற்கான வாசலாக யோனியும் ஆசான வாயும் இருக்கின்றன என, தனிச்சிறையின் சித்ரவதையில் வதங்கிடும் ஆலா நம்புகிறாள். உணர்ச்சியைத் தக்க வைக்க, காமத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறாள். பாலுறுநிலைக் கோடுகளைத் தரையெங்கும் வரைந்து வைக்கிறாள். விடுதலை எண்ணம் அவள் மனதில் எழவே இல்லை; அதனை முற்றாக மறந்திருந்தாள்.
தற்கொ(டை)லைத் தாக்குதலில் ஆலாவிற்கான கிழக்கு முனையில் நிகழ்ந்த மாற்றத்தின் மூலகாரணமான வெளிநாட்டுத் தூதுவர், கடுமையாக நோய்வாய்ப்பட்டுச் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவளிடம், “உங்களை இப்போது விடுதலை செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியதும், பிளிறிக்கொண்டே அழும் மிருகம் போல அழுகிறாள்.
“காமத்தினால் மட்டுமே தான் உயிரோடு இருப்பதை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பிய தனக்கு ஏன் விடுதலை உணர்வே துளியும் ஏற்படவில்லை?” என்ற அடிமனதில் எழுந்து ஆட்டுவித்த அடிப்படைக் கேள்வியே, சிறை விடுதலை மற்றும் மணவாழ்க்கை என ஓர் கற்பனை வாழ்வை எழுத ஆலாவைத் தூண்டியிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.
நாவலின் கடைசிப் பகுதியில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்று ஆலா விடுதலை ஆகிறாள். விடுதலைக்கு உறுதுணையாக இருந்த வாமதேவன் என்பவனை, அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்கத் திருமணமும் செய்து கொள்கிறாள். சிறையில் திருமணம் நடக்கிறது. அரசாங்கத்தின் நிபந்தனைப்படி, விடுதலை பெற்றதும் அவள் இலங்கையில் இருக்கக் கூடாது; இனி எப்போதும் இலங்கைக்குள் திரும்ப நுழையவும் கூடாது. மீறினால், பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாள். ஆதலால், திருமணம் முடிந்த கையோடு வாமதேவனுடன் நேராக மேலை நாட்டிற்குச் செல்கிறாள். இணைப்பு விமானத்திற்குப் பன்னிரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி விடுதியில் தங்குகிறார்கள். ஆலாவுடன் மிருகத்தனமாகக் கலவியில் வாமதேவன் ஈடுபடுகிறான்.காமம் கற்பனையில் இருப்பதுபோல யதார்த்தத்தில் இருப்பதில்லை என அவளுக்குத் தோன்றுகிறது.
வாமதேவனோடு வாழத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அவனது நோக்கத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்கிறாள் ஆலா. அவன் தேடிவந்து ஆலாவைக் கட்டிக்கொண்டதற்கான நோக்கம்..,
“பாருங்கள், நான் ஒரு போராளிக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறேன். இப்படியொரு மகா காரியத்தைச் செய்யும் உங்களில் துணிவு உண்டா?”
எனச் சமூகத்தின் முன்பு தன்னையொரு தியாகத்தின் பிம்பமாகக் கட்டமைத்துக்கொள்வது மட்டுமே. தொடர்ந்து ஆலாவின் மீது தன் அதிகாரத்தைச் செலுத்துகிறான். குழந்தை பதுமனுக்காக அனைத்தையும் பொறுத்துப்போகிறாள்.
எதிர்பாராத சூழலில் அவளுக்கு ஒரு துப்பாக்கி (குறளி) கிடைக்கிறது. யுத்த காலத்திற்குப் பின்பு மீண்டும் குறளி. அதனைக் கையில் ஏந்தியதும் கப்டன் ஆலா மீண்டும் உயிர்த்தெழுகிறாள். வாமனைத் தெகிரியமாக முறைக்கிறாள். அவன் விவாகரத்துக்குச் செல்கிறான்.
ஒருநாள் பதுமனைத் தூக்கிக் கொண்டு கையில் துப்பாக்கியோடு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். ரயில் நிலையத்தில் போலீஸ் அவளைச் சூழ்கிறது. துப்பாக்கியைக் கீழே போடுமாறு எச்சரிக்கின்றனர். ஆலாவை நோக்கி துப்பாக்கி முனைகள் நீள்கின்றன. சட்டெனத் துப்பாக்கியைப் பதுமனின் தலையில் வைக்கிறாள். துப்பாக்கி முனையில் நிற்கும் யாதொன்றும் அறியாத பச்சை மழலையான இந்த பதுமனும், துருக்கிக் கடற்கரையில் மரித்துக் கிடந்த மூன்று வயது சிரிய குழந்தையான அயிலான் குர்தியும் வேறுவேறு அல்ல.
ஆம்… உண்மை என்பது முன்கூட்டியே நாம் அறிந்திருப்பதல்ல. அந்தக் கணத்தில் நாமாகத் தேடிக் கண்டடைவதே உண்மை.
கார்த்திக் பிரகாசம்…
Comments
Post a Comment