வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள் ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.. பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும். ...