Skip to main content

Posts

Showing posts from August, 2020

சுய விசாரணை

எல்லா புத்தகங்களும் ஒரே புத்தகமே சிலதை அலசுகிறது சிலதை அகற்றுகிறது சிலதை அறிக்கிறது சிலதை அரிக்கிறது தெளிந்தும் குழப்பியும் பக்கங்களில் தோய்கிறது கனவை வளர்க்கிறது கற்பனை தூண்டுகிறது சிறையை உடைக்கிறது துரோகம் தியாகம்  தற்பெருமை அனுசரிப்பு கழிசல் கழிவிரக்கம் சுய விசாரணை செய்கிறது மனக் கூண்டில் அமர வைத்து கேள்வி கேட்கிறது முடிவை நம் பொறுப்பில் ஒப்படைத்து விட்ட இடத்திலிருந்து விடுபட்ட விசாரணையை தொடர்கிறது அடுத்த புத்தகம் கார்த்திக் பிரகாசம்...

அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்

உணர்ச்சியே இல்லாமல் உற்றுப் பார்ப்பார்கள் உன்னால் முடியும் உதவிக்கு இருக்கிறேன் என்பார்கள் ஊக்கமளிப்பதாய் சொல்லி உடைந்த காலை மறுபடியும் உடைப்பார்கள் வெற்று வார்த்தைகளை விற்று வெயிலிலும் குளிர் காய்வார்கள் ஆறுதல் கூறியே அகம் மகிழ்வார்கள் அசந்த வேளைகளிலெல்லாம் அனுதாபம் காட்டியே ஊனமாக்கிவிடுவார்கள் அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள் கார்த்திக் பிரகாசம்...

வெற்று நிஜம்

கேட்கக் காதுகள் கிடைத்ததும் ஞானியாகிவிட்டேன் யாசிக்கும் கரங்கள் நீண்டதும் வள்ளலாகிவிட்டேன் இறைஞ்சும் கண்ணீர் கண்டதும் இரக்கமானாகி விட்டேன் மன்னிப்புக் குரல்கள் கேட்டதும் கடவுளாகிவிட்டேன் காட்சிகள் முடிந்து ஒப்பனை கலைத்ததும் உரித்தெறிந்த பாம்புச் சட்டையைப் போல் யாதுமற்ற வெற்று நிஜமாகிவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

நாளை வரை எதற்கு

கம்பீர கண்களில் கருணைக் காட்டு  கண்ணம்மா இசை மதுவினால் தள்ளாடுகின்றன என் இரவுகள் கோப்பையில் ராஜாவும் ரஹ்மானும் வண்ண வண்ணமாய் கண்முன்னே விரிந்திருப்பது வானவில் அல்ல உனக்கு நீயே பூட்டிக் கொண்ட அலங்கார சிறைக் கம்பிகள் உனக்கு நினைவிருக்கிறதா மழைக் காலத்தின் ஓர் மாலைப் பொழுதில் நோயுற்றிருந்தேன் உள்ளங்கையிலும் புறங்கழுத்திலும் முத்தங்கள் தந்தாய் எப்போதும் நோயுற்றே கிடக்கலாம் மழை நின்ற பின் மனம் சொட்டியது கடைசி சொல்லுக்காகக் காத்திருக்கும் கவிதையே உடைத்தெறி விலங்கை வா சிறை விட்டு அரவணை என்னை வீழ்த்து முட்டாளாக்கு அன்பு செய் நாளை வரை எதற்கு இன்றே வாழ்ந்துவிடுவோம் கார்த்திக் பிரகாசம்...

வெளுத்துப் போன சாயம்

அரைக்கால் டவுசர் காலத்தில் அரசியல் தெரியாது மதம் தெரியாது குறிப்பாகப் பக்தி கிடையாது திருவிழா பண்டிகை - அதெல்லாம் கொண்டாட்டம் கவலைகளை மறப்பதற்கு ஓர் காரணம் அன்பைப் பகிர்வதற்கு ஓர் வாய்ப்பு நினைத்துப் பார்த்தால் விசேசம் விநாயகருக்கோ ஏசு நாதருக்கோ நபிக்கோ பெரிய நாயகி அம்மனுக்கோ அதெல்லாம் பிரச்சனையில்லை ஒருவீட்டில் சுண்டல் ஒருவீட்டில் கொழுக்கட்டை ஒருவீட்டில் கேக் ஒருவீட்டில் கோலம் நண்பர்கள் காசு சேர்த்து ஓலைக் குடில் வேய்ந்து சிலை வைத்து நாள் முழுவதும் அமர்க்களம் பெருக்கெடுத்த அறியா வயதின் ஆனந்தம் இன்று தெருவோர கடையின் தரையில் கூட்டமாக அமர்ந்திருக்கும் களிமண் விநாயகரின் கண்களில் கலவரம் களிமண் உருவில் வளர்ந்திருக்கும் மதம் விநாயகரின் சாயலில் மறைந்திருக்கும் வெறி மத வியாபாரத்தில் பண்டிகைகள் லாபம் வெளுத்துப் போன சாயம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார் பிள்ளையார் கார்த்திக் பிரகாசம்...

மரணம்

சர்வ சாதாரணமாக நிகழ்கிறது ஓர் மரணம் ஏதோவொரு கடையில் தயாராய் தொங்குகின்றன இழவு வீட்டின் வாசத்தில் தொடுக்கப்பட்ட பூ மாலைகள் சம்பிரதாய ஒப்பாரியும் அழுகையும் சகிக்கவில்லையெனினும் அவசியமாகிறது கண்ணீருக்கு மத்தியிலும் சடங்கு சீர் செலவுகளை மதிப்பிடுகிறது காசுள்ள கல்நெஞ்சம் நீளும் ஆறுதல் கரங்களின் முடிவில் முகங்கள் இல்லை மழிக்கப்பட்ட மயிர்க் கற்றையின் ஈரத்தில் கடைசியாய் ஒருமுறை ஊற்றெடுக்கிறது பாசம் கார்த்திக் பிரகாசம்...

நிழலைத் தொடரும் வெளிச்சம்

நடப்பதற்கு முன்னே நகர்கின்றன நிழல்கள் கிட்டத்தட்ட எல்லா மனித உருப்படிகளின் நிழல்களுக்கும் ஒரே சாயல் நிறமற்றதாய் முகங்களற்றதாய் நிலையுருவமற்றதாய் நிர்வாணம் பேசும் வேடிக்கை மனிதர்களின் நிழல்கள் மனிதனை அறிய நிழலைப் பின்தொடரும் வெளிச்சம் கார்த்திக் பிரகாசம்...

தனிமையின் ஓர் துளி

அடைபட்ட கூண்டுக்குள் சுதந்திரமாகச் சிறகடிக்கும் பறவையின் சப்தத்தில் தனிமையின் ஆற்றாமை புதிதாக வீட்டுக்கு வரும் யார் எவரென்று அறியாத விருந்தாளியிடம் விளையாட்டு சாமான்களையெல்லாம் காட்ட அடம் பிடித்து அழும் குழந்தை கண்களின் திரவத்தில் தனிமையின் விரக்தி அடர்ந்த தாடி மீசைக்குள் மரித்துப் போன குழந்தைத்தனம் தனிமையின் அடர்த்தி பிரியமானவர்கள் பிரிகையில் தனிமையின் சுயரூபம் விரும்பிடும் உள்ளம் விலகி வெறுக்கையில் தனிமையின் வலி தன்னைத் தானே விழுங்கிடும் உயிர் தனிமையின் ஏமாற்றம் பழகிப் போன சுயம் தனிமையின் யதார்த்தம்  கார்த்திக் பிரகாசம்...

கதை

மழையின் சத்தம் மெல்ல மெல்ல அறையை ஆக்கிரமிக்கிறது எதைப் போட்டுத் தடுக்க அடுத்த அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ மழையின் கதைகளோடு கதைக்கப் போகிறோம் கார்த்திக் பிரகாசம்...

மீட்சி

பிரியம் காட்டியவர்களெல்லாம் சீக்கிரத்தில் மறைகிறார்கள்  இல்லையேல் பிரிகிறார்கள் என்றோ ஒரு நாள் அலமாரியில் உருளும் சொப்புச் சாமானத்தின் சப்தங்களில் உயிர்த்தெழுகிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

கூடு

எனக்கொரு ஆசை இல்லை - இது அப்பாவின் ஆசை மரபுவழி நோய் பரிமாற்றத்தைப் போல் மரபுவழி ஆசை பரிமாற்றம் என்னை அறியாமல் எனக்குள் ஏற்றப்பட்டிருக்கிறது மூளையின் ஏதோவொரு மூலையில் பதியவைக்கப்பட்டிருக்கிறது சாகறதுக்குள்ள ஒரு வீடு சமாதிக்கு முன்னே சொந்தமாக ஒரு கூடு அடுக்குமாடி பலகணி பளிங்குத்தரை லட்சங்களில் ஆடம்பரம் யாருக்கு வேண்டும் படுத்ததும் கவலைகளின்றி உறங்கிடத் தனிமையினைத் தாலாட்டிட ஏக்கம் தொலைத்திடப் பாசம் பெருக்கிட அன்புடன் அரவணைத்திட உயிரினும் உயிராய் ஒற்றைக் கூடு அவ்வளவே கார்த்திக் பிரகாசம்...