Skip to main content

Posts

Showing posts from December, 2020

பரிதாபம்

பணம் இல்லாதவனின் பெருந்தன்மை பரிதாபத்திற்குரியது ஏனெனில் எளிமை கடினமில்லை ஏற்றுக்கொள்வது தான் கார்த்திக் பிரகாசம்...

ஆயாசம்

என்றைக்குமே வெயிலை மறைத்திடாத மழையைத் தவிர்த்திடாத பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைக்குள் பழைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள் மீட்டுக் கொண்ட அடையாளங்களில் துருத்தி நிற்கும் அந்நியத்தை ஒளித்து உரையாட முற்படுகிறார்கள் ஒடிந்த சுய உருவைத் தொலைத்த ஓரிரு நாற்காலிகள் இருந்தன உடலை நீட்டி மடக்கி என்ன முயன்றாலும் அவற்றில் ஒருவராலும் மனமுற ஆசுவாசமாக அமர முடியவில்லை பசையிழந்த அவர்களின் பால்ய காலத்தைப் போலவே கார்த்திக் பிரகாசம்...

அதன் பெயர் சுதந்திரம்

கனவெல்லாம் கண்டிருக்கிறேன் நான் பார்த்ததில்லை நண்பர்களில் சிலபேர் பார்த்ததுண்டு அனுபவித்ததில்லையென்று சொல்லியிருக்கிறார்கள் பறக்க முயன்ற பலமுறை சிறகுகள் வெட்டப்பட்டன எழுத முயன்ற எத்தனையோ சமயம் விரல்கள் உடைக்கப்பட்டன அச்சத்தால் அடக்கி ஒடுக்கி அழுத்தப்பட்டன உனக்கெல்லாம் எதற்கு அது.? உனக்கெல்லாம் இதுவே அதிகம்.? சிரைக்கும் மயிருக்குக் கிடைக்கும் மரியாதை சிந்திக்கும் மனிதனுக்கு இல்லை சிந்திய கண்ணீர்த் துளிகள் சாக்கடையில் மிதக்கின்றன கனவுகளின் குரல்வளையை நெரித்த அப்பாவின் அதிகார கரங்களில் முதன்முறை பறிக்கப்பட்டது இன்றுவரை கிடைக்கவில்லை கார்த்திக் பிரகாசம்...

என்னைச் செதுக்கிய காதல்

நட்பே யாவற்றுக்கும் தொடக்கப் புள்ளி நீண்ட பேச்சுகள் அக்கறையில் தோய்த்தெடுத்த வார்த்தைகள் அழுகையில் உடன் அழும் அன்பான மனம் நட்பின் ஊடுருவலிலே சிறகுகளுடன் காதல் முளைத்தது பகிர்ந்திட வேண்டிய நிர்ப்பந்தமின்றி பாரமில்லாமல் பறந்தது எதிர்பாரா திருப்பத்தில் எந்த சமிக்ஞையும் இல்லாமல் பிரிவெனும் சகபயணியை சுமந்து வந்த காலம் பகிர்தலின் அவசியத்தைத் தாமதமாய் உணர்த்தியது அதற்குள் தொடர் பகிர்தலினால் பிறிதொரு வானத்துக்குள் வலம்வர இசைந்துவிட்டது அந்த காதல் புதிதாய் அடையப்போகும் ஒன்றின் மகிழ்ச்சியைக் காட்டிலும் இருப்பதை இழத்தலின் வலியே பெருந்துயர் நிராகரிக்கப்படும் அச்சத்தில் நட்பிற்குள் புதைந்தது மற்றொரு  காதல் கார்த்திக் பிரகாசம்...

அன்பின் அன்பு

உடைந்த மனதை உடையாத வார்த்தைகளால் பூசி மொழுகி மீண்டுமொருதரம் உயிரின் ஈரத்தை உயிர்ப்பித்துக் கசிகிறது அதே அன்பின் அன்பு கார்த்திக் பிரகாசம்...

உணர்ச்சி கூண்டு

நீ இவ்வளவிற்கு உணர்ச்சியின் வசமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை மனதைச் சுதந்தரமாக வைத்துக் கொள் எதற்குள்ளும் நீயாகச் சென்று அடைபடாதே வானம் தொடும் பறவை ஒருபோதும் கூண்டை விரும்புவதில்லை கார்த்திக் பிரகாசம்...

மனச்சுழல்

பருவநிலை மாற்றம்  மழை குளிர் வெயில் நன்கறிவாய் பாங்கியின் மனச்சுழல் உணர்வாட்டம் அறிவாயா காரணமே இல்லாமல் கோபம் வரும் சுவரைக் கூட திட்டித் தீர்க்கத் தோன்றும் கிச்சு கிச்சு மூட்டினால் எரிச்சலாய் இருக்கும் குரலை ஒசத்தினாலே அழுகை கொட்டும் இதழ்கள் விரியும் புன்னகை இருக்காது அழுக்கு ஆடை அரக்காய் மணக்கும் சோம்பல் உடம்பில் சுறுசுறுப்பாய் இயங்கும் தலையணை தனிமை விரும்பும் படுக்கையோ மிஸ் யூவை கேட்கும் கொசுக் கடிக்கும் ஆறுதல் தேடும் மௌனம் பேரிரைச்சலாய் மொய்க்கும் சகலமும் சலனம் சங்கடமுமாய் நீளும் இதற்கெல்லாம் கவலைப்படாதே பெண்ணைச் சிக்கலாய் நினைக்காதே நீ ஒன்றும் செய்ய வேண்டாம் மூச்சடைக்காத முத்தமொன்றைத் தந்துவிட்டு மௌனமாக நகர்ந்துவிடு கார்த்திக் பிரகாசம்...

அடுத்த நிறுத்தம்

துணையை மட்டும் நம்பிய  போகும் இடம் அறியா  ஏதிலி நான் எங்கே போகிறதென்று எனக்குத் தெரியாது அவசரத்தில் வெவ்வேறு பெட்டிகளில் ஏறிவிட்டோம் பெட்டிகளில் நாங்கள் மாறி ஏறிய சமாச்சாரம் இரயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அதன் போக்கில் வேகம் குறையாமல் செல்கிறது என் பயத்தைப் புசித்தவாறு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி துணை இருக்கும் பெட்டிக்கு மாறிக் கொள் என்றவாறே நகர்கிறார்கள் அருகிலிருப்பவர்கள் போகும் இடமே அறியாத பாதையைத் தொலைத்தவளுக்கு அடுத்த நிறுத்தம் எப்படி தெரியும் கார்த்திக் பிரகாசம்...

நிரந்தர சிலுவை

பாவ மன்னிப்பு கோரி  நின்ற சாத்தான்களுக்கும் மன்னிப்பு வழங்கிய பெரும் பாவத்திற்காக நிரந்தர சிலுவையில் கர்த்தர் கார்த்திக் பிரகாசம்...

குழந்தையாகவே

அவள் குழந்தையாக நினைப்பதாலோ என்னவோ நான் இன்னும் குழந்தையாகவே இருக்கிறேன் குறைந்தபட்சம் அவளிடம் மட்டுமாவது கார்த்திக் பிரகாசம்...

தலைமகன்

பிறப்பை ஒத்திப் போடும்  சக்தி மட்டும் இருந்திருந்தால் தாமதமாய் பிறந்திருக்கலாம் தலைமகனாய் பிறந்ததற்காக பெருமிரவுகள் வருத்தமடைந்திருக்கிறேன் ஒரேயொரு அக்கா இருந்திருந்தால்...! ஒரு அண்ணன் இருந்திருந்தால்... ! எவர் கண்ணிலும் படாத மற்றவர்களுக்கு மதிப்பில்லாத சின்ன சின்ன தியாகங்கள் இளம் நரையின் கன்னத்துச் சுருக்கங்களில் சொல்லாமல் தொலைத்துப் போன குழந்தைத்தனம் ஏற்றி வைக்கப்பட்ட பொறுப்புகள் சூழ்ந்து நின்ற சுமைகள் மூழ்கிப் போன இளமை பல பொழுதுகள் ஏக்கப்பட்டிருக்கிறேன் பின்னொரு நாளில் சாதிச்சு காட்டிட்ட கண்ணு குடும்பத்த தல தூக்கவச்சிட்ட இனி நான் சந்தோசமா கண்ண மூடுவேன் என்று மரணப் படுக்கையில் அப்பா தேம்பித் தேம்பி அழும் வரை காலம் கண்ணீராய் உடைந்தது கார்த்திக் பிரகாசம்...

மகள்

குளிர் காலத்தில் தாமதமாக வந்துச் சீக்கிரமாகச் செல்கிறது வெயில் திருமணத்திற்குப் பின் அம்மா வீட்டிற்குச் சென்று திரும்பும் மகள்களைப் போல கார்த்திக் பிரகாசம்...

கருணை

விட்டு விட்டுப் பெய்த மழையில்  விடாமல் நனைகிறது தாயைத் தொலைத்து வழித் தவறிவிட்ட நாய்க்குட்டி பெரும் உயிர்களுக்கான வெளியில் சிறு உயிர்களுக்கு மதிப்பில்லை தாயில்லாத உலகம் கருணை அற்றது வெம்புகிறது நாய்க்குட்டி டயர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடுமென வந்து நின்றான் எங்கிருந்தோ வந்த மழையைப் போல   கிழிந்த சட்டையின் கிழியாத ஓரத்தைக் குடையாக்கி நாய்க் குட்டியை ஏந்திக் குடிசைக்கு ஓடினான் இருவரையும் கருணையோடு அணைத்துக் கொண்டது கூரையிலிருந்து வழிந்த ஒரு மழைத் துளி கார்த்திக் பிரகாசம்...

நிர்கதி

பெண்மக்கள் பிறந்தால்  பேருவகை அடையும் பெண்களைக் கொண்டாடி வணங்கும் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்தேன் சீவி சிங்காரித்து வெளிக் காட்டாமல் கூண்டுப் பறவையைப் போல் பொத்தி பொத்தி வளர்த்தார்கள் வாலிபத்தில் வேற்றுச் சாதிக்கார பையனைக் காதலித்ததற்காகக் கண்ட துண்டமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார்கள் வாழ விடாமல் பின் வருடத்திற்கொரு முறை படையலிட்டு வணங்கிச் சாமியாக்கிவிட்டார்கள் பெண்மக்கள் பிறந்தால் பேருவகை அடையும் பெண்களைக் கொண்டாடி வணங்கும் குடும்பம்தான் அது கார்த்திக் பிரகாசம்...

தவிப்பு

வெளியே  சிணுங்கிய பூனைக்குட்டியின் குரலில் திடுமென குளிர் உரைத்தது இறுகப் போர்த்திக் கொண்டு உறங்கிவிட்டோம் நாங்கள் கார்த்திக் பிரகாசம்...

ஊர்க்குருவி

ஊர்க்குருவி பருந்தாகட்டும் அதே சமயம் பருந்தும் ஊர்க்குருவியாக வேண்டும் ஓர் நாளாவது ஊர்க்குருவியாய் இருப்பதன் கஷ்டம் ஊர்க்குருவிக்குத் தான் தெரியும் கார்த்திக் பிரகாசம்...

விடியல்

அதிகாலை சாரலில் ஆங்காங்கே நனைந்திருக்கிறது சாலை தகரக் கூரைகளில் மழையின் தாளம் காற்றில் மிதக்கிறது  கடாயில் வேகும் மெதுவடையின் வாசம் தொண்டைக் குழியில் குளிருக்கு இதமாய்  இறங்குகிறது தேநீர்  இந்த விடியல்தான் எவ்வளவு  ரம்மியமானது  கார்த்திக் பிரகாசம்...

ஒரு சொல்

மிகச்  சாதாரணமாகத்  தான்  வந்து விழுகிறது  ஒரு சொல் எப்படி ஒரு சொல்லால்  எளிதாகக்  கத்தியாய் உருமாறி  மனதைக் குத்திக் கிழிக்க  முடியும் முன்னோரு  நாள் சம்பவித்த சந்தோஷங்களைச்  சவக்குழியில்  கிடத்துகிறது ஒரு சொல்  எதிரியின் ஆயுதமும்  துரோகியின் சூழ்ச்சியும் அன்பில் பிரியமானவர்களின்   ஒரு சொல்லும் கார்த்திக் பிரகாசம்...

அம்மா தான் சொன்னாள்

பண்டிகைக்கு அடுத்த நாள் பிளாட்பார கடைகளில் புது துணி மணிகள் நேற்றில் பாதி விலைக்குக் கிடைக்கும் என்பதை அம்மா தான் சொன்னாள் தங்க நகைக் கடைகள் பெரும்பாலும் மூடியிருக்கும் இருப்பினும் அவற்றின் அலங்கார ஒளி விளக்குகள் எரிய விடப்பட்டிருக்கும் அவ்வொளி சாரலிலே கவரிங் நகைக் கடைகளில் வியாபாரம் நடக்கும் எளிய மக்களைக் கவர்தலால் கவரிங் எனப் பெயர் வந்திருக்கலாம் அம்மா தான் சொன்னாள் புயல் வந்து ஓய்ந்தது போல் வெறிச்சோடி இருக்கும் சாலைகளில் நடக்க நடக்க ஆசையாக இருக்கும் ஆனால் யாரோடு நடப்பது அரக்கப் பரக்க இல்லாமல் செவிகளற்று கிடக்கும் கை கால்கள் பரம சுகமாக இருக்கும் அன்று ஒரு நாளைப் போல் நிம்மதியாக உறங்கியதில்லை பாரமான நெஞ்சில் ஊருக்குப் போய்விட்ட பிள்ளைகளின் முந்தைய நாள் சிரிப்பு நினைவுகளோடு நீண்ட நெடிய தனிமை வீட்டில் படுத்துறங்கும் பண்டிகைக்கு அடுத்த நாள் அம்மா தான் சொன்னாள் கார்த்திக் பிரகாசம்...