ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் நான் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தேன். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, ரத்தம் குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் குரல்களை அவை என் காதுகளில் பாட்டாய் பாடிச் சென்றன. எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டேன்.வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்குகள் தலைக்குனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தன. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். நான் இருக்கும் வரையில் அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் காணாமல் போனது
கார்த்திக் பிரகாசம்...
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் தினக்கூலிகளை போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் மேகங்கள் கலையத் தொடங்கின. யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் நானும் நிலவும் தனியானோம். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கின்றது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கின்றது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment