பறவையே எங்கு இருக்கிறாய்...!!!
வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இசை தான் இளைப்பாறல். அது பிறப்பாயினும், இறப்பாயினும், கொண்டாட்டமாயினும், துக்கமாயினும் எதுவாயினும் சரி.
எப்போதும் ஆறுதலையே தேடியலைந்துக் கொண்டிருக்கும் மனதிற்கு இசை மட்டுமே நிரந்தர ஆறுதல்.இசையினூடாக மனதைத் தொடும் பாடல் வரிகள் இளைப்பாறலைத் தாண்டிய ஆறுதலில் மனதை அரவணைத்துக் கொள்ளும்.
அப்படியொரு அரவணைப்பை நல்கும் இரு பாடல்கள் "பறவையே எங்கு இருக்கிறாய்" மற்றும் "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது".
முதல் பாடல் இன்னக் கவலைக்காக என்றில்லை, எந்தக் கவலையானாலும் என்ன காரணமானாலும்; தூசிகளைத் தனித்தெறியும் முறத்தைப் போல மனதைக் கவலைகளிலிருந்து எளிதாக மீட்டெடுத்து விடும். மனதை லேசாக்கி முழுவதுமாகத் தன்வசப்படுத்திக் கொள்ளும். அதிலும் பாடலின் தொடக்கத்தில் இசைக்கு முன்பாக ஜுவா மற்றும் அஞ்சலியின் குரல்களில் ஒலிக்கும் சில வரிகள். அங்கேயே மனத்தில் புது வெளிச்சம் பாயும். இசைஞானியின் குரல் ஒளிந்துள்ள சோகங்களை ஒவ்வொன்றாக வழியனுப்பி வைக்கும். உடலெங்கும் யுவனின் இசை ஆக்கிரமிக்கும். சோகங்களெல்லாம் சுழன்றோடும்.
எவ்வித துயரமானாலும், கடைசி நம்பிக்கையும் தளர்ந்து போய் அடிமட்ட நிலையில் துவண்டு நின்றாலும் கூட மீண்டெழுந்து வர, "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" என்ற ஒரு பாடல் போதும். பின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவிடலாம். அற்புதமான, தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வைக்கும் வரிகள் பாரங்களை காற்றில் எறியும். ஒரு புத்துணர்வு உடலெங்கும் பரவும். "என்ன பெரிய பிரச்சனை ஒரு கை பார்த்துவிடலாம்" என்ற உத்வேகத்தை அளிக்கும். உத்வேகம் அளிக்காவிட்டாலும் "இதெல்லாம் ஒரு பிரச்சனையா...! இதற்காகவா இவ்வளவு நேரம் சோர்ந்துப் போய் அமர்ந்திருக்கிறோம்" என்ற குறைந்தபட்ச நம்பிக்கை மேலிடும் எண்ணத்தையாவது கொண்டு வந்துவிடும். அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.
சோர்வுறும் வேளையில் தோள் தட்டிக் கொடுத்து இளைப்பாறல் இழைக்கும் இந்த இரு பாடல்களைத் தந்ததற்காகவே யுவனுக்கும், நா.முத்துக்குமாருக்கும் நாம் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment