சிறுவயதில் நானும் தங்கையும் அப்பாவிடம் "கிறிஸ்துமஸ் ஸ்டார்' வாங்கித் தர சொல்லி அடம்பிடிப்போம். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிவந்து பல்புக்கு மின்னிணைப்பு கொடுத்து வீட்டின்முன் தொங்க விடுவார் அப்பா. டிசம்பர் மாதம் தொடங்கும் போதே வீட்டின்முன் ஸ்டார் வெளிச்சமாய்த் தொங்கும்.வீடே நட்சத்திர வெளிச்சத்தில் அழகாய் இருக்கும். அம்மா கிறிஸ்துமஸ் அன்று சர்ச்க்கு கூட்டிப் போவார். "இது கிறித்துவர்கள் கொண்டாடும் பண்டிகை நமக்கெதற்கு.." என்று அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.
அக்கம்பக்கத்துத் தெரு நண்பர்களெல்லாம் இணைந்து தெருவின் மையப்பகுதியில் உள்ள வீட்டின் முன் குடில் அமைத்து சீரியல் பல்புகளைக் கொண்டு அலங்கரிப்போம். குடிலின் அடித்தளப் பகுதி முழுதும் வைக்கோல் பரப்பி அதன்மீது மாதா சிலை, இயேசு கிறிஸ்துவின் குழந்தைச் சிலை, வண்ணமயமான மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் என்று குடிலே கோலாகலமாக இருக்கும். தெருவின் மொத்த சிறுவர் பட்டாளமும் அந்த குடிலின்முன் இருக்கும்.
நண்பர்களுக்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரிக்கக் கடும் போட்டி நிலவும். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை வைத்திருப்பவனுக்கோ அல்லது இருப்பதிலேயே உயரமானவாக இருப்பவனுக்கோ அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரித்து பையில் பரிசுப் பொருட்களுடன் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் போகுமிடமெல்லாம் சிறுவர்கள் பின்னாடியே திரிவார்கள்.
சரியாக பனிரெண்டு மணிக்கு கேக் வெட்டி இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் கொண்டாடுவோம். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவன் அனைத்து குழந்தைகளுக்கும் கேக் ஊட்டி விடுவான். அடுத்தநாள் விடிந்ததும் கூட்டமாக சர்ச்க்கு அணிவகுப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒருபோதும் ஒருமதம் சம்மந்தப்பட்ட பண்டிகையாக நாங்கள் நினைத்ததில்லை. எல்லா மதத்து சிறுவர்கள், இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குப் பெறுவார்கள்.
அனைத்து பண்டிகைகளுக்குப் பின்னாலும் அதன் மதத்தையோ, இனத்தையோ சார்ந்த அடிப்படைக் காரணங்கள் பல இருக்கும். அவை பெரும்பாலும் குறிப்பிட்ட மதம் சார்ந்த பண்டிகையாகவோ அல்லது இனம் சார்ந்த பண்டியாகவோ கடந்து போகும் ஆனால் ஒருசில மட்டும் சாதி மதம் போன்ற கட்டுப்பாடுகளை மீறி சமூகத்தில் சமத்துவத்தை முன்னெடுப்பவையாக அமையும். அதில் கிறிஸ்துமஸ்க்கு முக்கியம் இடம் உண்டு.
இன்று பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் மாடியில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் வண்ணக் கோலம் இட்டிருக்கிறார்கள். பாடல்கள் கேட்கின்றன. நட்சத்திரங்கள் வெளிச்சமாய் சிரிக்கின்றன.
மனதில் பழைய நினைவுகள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தூரத்தில் ஒரு மணிச் சத்தம் பெரிதாக ஒலித்தது.
"மெரி கிறிஸ்துமஸ்"
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment