பேரில்லாமல்
ஓர் உறவு
இருக்கலாமா..!
ஆதலால்
அந்த உறவுக்கு
ஓர்
பெயரிட வேண்டும்..!
ஆனால்
ஏற்கனவே இருக்கும்
உறவைக் குறிக்கும்
எந்தப் பெயராகவும்
அது
இருக்கக் கூடாது..!
பேருக்கு
உறவாடிக் கொண்டிருக்கும்
விருப்பமில்லா
அர்த்தமில்லா
உறவுகள்
போலில்லை
அது..!
உண்மையானது..!
அன்பை அடித்தளமாக கொண்டது..!
கவனிப்பைக் கொட்டுவது..!
பிரதிபலன் எதிர்பாராதது..!
நிபந்தனை விதிக்காதது..!
நினைக்கும் போதே
கண்களிலும் இதயத்திலும்
அடர்ந்து விரிவது..!
ஆறுதலுக்கு
அடைக்கலமருள்வது..!
சஞ்சலமற்றது..!
இளைப்பாறுதல்
இயைவது..!
கண்ணீரைப்
புன்னகையாக்குவது..!
பெயல்நீர் போல்
பேதம் பார்க்காதது..!
அது நட்பல்ல.!
அது காதலுமல்ல..!
பேரையும்
அவ்வுறவின்
வேரையும்
தேடித் தேடித்
தோற்றே போனேன்..!
பேருக்கு
பழகவில்லையே
பின்னே பேரில்லாவிட்டால்
என்னவென்று
விட்டுவிட்டேன்..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment