நடிகர் சிலம்பரசன் பெண்களைப் பற்றி பாடிய அந்த பாடல் வலைத்தளத்தில் வெளியான நாள் முதல் அந்த பாடலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலைத்தள வாசிகளிடையே தினம்தினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது..
ஒருபுறம் பாடல் பிடித்திருந்தால் கேளுங்கள். பிடிக்காவிட்டால் விட்டுவிட்டு வேற வேலையைப் பாருங்கள் என்று சில நபர்களால் கருத்து சொல்லப்பட்டு வரப்படுகிறது.
மறுபுறம் மாதர் சங்கம், பெண்கள் அமைப்பு என்று பெண்களை இழிவாகவும், கொச்சை வார்த்தைகளாலும் பாடியதற்காக சிலம்பரசன் மீது எதிர்ப்புகளும் கடுமையாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த விவகாரத்தை ஒரு நடிகர் சமந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் எடுத்து கொள்ள முடியவில்லை. இதை ஒரு சமூக பிரச்சனையாகத் தான் காண முடிகிறது.
நம் நாட்டை பொறுத்தவரையில், நடிகர் என்பவரை வெறும் நடிகராக மட்டும் மக்களால் பார்க்கபடுவதில்லை. தனக்கு பிடித்த நடிகரை தன் குடும்பத்தில் ஒருவராகவும், அந்த நடிகர், படத்தில் சொல்வதையெல்லாம் உயிர் மூச்சாக கருதி, வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள் தான் நம் நாட்டில் ஏராளம். தன் வீட்டின் சொந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதல்களிலும்,பேனர்களிலும் கூட தனக்கு பிடித்த நடிகரின் படத்தைப் போட்டு அழகுப் பார்க்கும் மக்கள் நம் நாட்டு மக்கள்.
நம் மக்கள் நடிகனை ஒரு கலைஞானாகவும், நடிப்பை ஒரு தொழிலாகவும் மட்டும் கருதி இருந்தால், பல முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் இந்த நாடு கண்டிருக்காது.
இவையெல்லாம் நடிகர்களுக்குத் தெரியாத விடயமில்லை. ஆகவே தங்கள் கலை உணர்வைத் தாண்டி சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கடமை உண்டு என்பதை ஒவ்வொரு நடிகரும் உணர வேண்டிய தருணம் இது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment