Skip to main content

பயணம்...!!!

மற்றவர்களின் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனதும் சில ஆசைகளை அடைக்காத்து வைத்திருக்கும்..
அவ்வாறு பெரும்பாலோனோரின் மனது அதிகம் காதலிக்கும் ஆசைகளில் ஒன்று பயணம்... ரயிலோ அல்லது பேருந்தோ, பயணம் என்றால் படு குஷியாகும் உள்ளம் கொண்டவர்களில் நானும் ஒருவன்..

இதுவரை பார்த்திட பலவிதமான மனிதர்களை, வேடிக்கையான விசயங்களை, கண் திறக்கும் நிகழ்வுகளை, மனதிற்கு மருந்து போடும் பாடல்களை, புத்தகத்தின் முக்கியத்துவத்தை பயணத்தினால் மட்டுமே முழுமையாக அறிய முடியும்..

அதிலும் ரயிலில் "ஜன்னல்" இருக்கையாகவும், பேருந்தில் ஓட்டுனருக்கு பக்கவாட்டில் முழுமையாக சாலையை பார்க்க முடிகின்ற இருக்கையாகவும் கிடைத்துவிட்டால் அதை விட மகிழ்ச்சியான ஒரு தருணம் அன்றைய நாளில் அமைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

இதுவரையில் கேள்வியேப்பட்டிராத ஊர்ப் பெயர்கள், பெயர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஆறுகள், தண்ணீரை பார்த்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான அணைகள், தனித்து விடப்பட்ட விதவைப் பெண்ணைப் போல அங்கொன்று இங்கொன்றுமாய் மாடி வீடுகள், கூட்டுக் குடும்பமாய் ஒன்றையொன்று தாங்கி நிற்கும் குடிசைகள், காலாவதியான மின்கம்பங்கள், ஓரிரு நிமிடம் மட்டும் ஜன்னலை உரசி உயிரற்று போகும் சாரல் துளிகள், நிறுத்தத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வரும் சிறுவயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட திண்பண்டங்கள் என மனதை இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் எட்டி உதைத்து கடைசியில் நிகழ்காலத்திற்குள் நிறுத்தி வைக்கும் தந்திரம் பயணத்திற்கு மட்டுமே அத்துப்படி..

அருவியில் கொட்டும் நீரைப் போல அனுபவங்களை அள்ளிக் கொட்டும்.. அது தரும் அனுபவங்களை தாகம் தீர தீர, மூச்சு முட்ட முட்ட, மனசு நிறைய நிறைய பருகிக் கொண்டே இருக்கலாம். தீர்ந்தும் விடாது. சோர்ந்தும் விடாது.

பலமுறை சென்று வந்திருந்தாலும், ஒவ்வொரு முறை சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி உண்டாகும். மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும்.

பேருந்திலும், ரயிலிலும் பலமுறை பயணித்திருந்த எனக்கு, சொந்த ஊரிலிருந்து ஒருமுறையாவது இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு வரவேண்டும் என்ற ஆசை வெகுநாளாக மனதில் நச்சடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆசையின் நச்சடிப்பு நண்பனால் நேற்று தீர்த்து வைக்கப்பட்டது.. அவனுக்கு முந்நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட நன்றி..

இருவர் மட்டுமே பங்கு எடுத்துக்கொண்டதாய் நான் நினைத்திருந்த பயணத்தில், வழியில் கருப்பஞ்சாறு விற்றுக் கொண்டிருந்த தாத்தா பாட்டி, காரில் ஜன்னலை ஒட்டி முகத்தைப் பொதித்து கண்ணாடியில் சித்திரம் வரைந்து கொண்டிருந்த குழந்தை, ஓய்விற்காக சற்று அமர இடங்கொடுத்த குட்டிச்சுவர், வாரா விருந்தினர்க்களுக்காக பந்தல் போட்டு காத்திருக்கும் மரங்கள், பஸ் ஸ்டாண்ட்களையே பார்த்திடாத பை பாஸ் ரோடுகள், தொட்டு விடுவது போல வந்த பறவை, துரத்தி வந்த சூரியன் ஆனால் முதுகில் ஏறிக் கொண்ட சந்திரன் என உடன் பயணித்தவர்கள் என் எண்ணத்தைப் பொய்யாக்கினர்.

எனக்குள் அடைந்து கிடந்த ஆசைக்கு கிடைத்த புதுமையானதோர் அனுபவம், இன்னும் பல ஆசைகளுக்கு நல்ல தீனியை அளித்துள்ளது. வெகுநாள் ஆசை நிறைவேறியதில் அலாதியான மகிழ்ச்சி...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...