Skip to main content
அந்தப் பிச்சைக்காரனின் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. யாரிடமும் பிச்சைக் கேட்காமல் அமைதியாகவே இருந்தான். எவராவது பிச்சை இட்டாலும் கூட முகத்திலும் உடலசைவிலும் எந்த சலனமும் இல்லாமல் சுவற்றில் வரைந்த சித்திரம் போல் இருந்தான்.

அருகில் இருந்த சக பிச்சைக்கார நண்பர்களுக்கு அன்று அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவன் பிச்சை எடுக்க வந்த நாளில் இருந்து ஒருநாள் கூட இப்படி சோர்ந்து போய் அமர்ந்ததில்லை.. எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், வருபவர்கள் போகிறவர்களிடமெல்லாம் பிச்சைக் கேட்டு கொண்டும் பிசியாகவே இருப்பான். 

நாளின் முடிவில் அங்கிருப்பவர்களிலேயே அதிகப் பணம் அவன் தட்டில் தான் இருக்கும்..

சக பிச்சைக்காரன் நண்பன் அவனிடம் பேச முயன்றான். ஆனால் அவன் வாயை திறக்கவே இல்லை. அதனால் அவனை யாருமே தொந்தரவு
செய்யவில்லை.

அமைதியாவே இருந்ததால் அன்று அவன் தட்டில் காசு விழவே இல்லை. தனக்கு கிடைத்ததில் பாதியை அவனோடு பகிர்ந்துக் கொண்டான் சக பிச்சைக்கார நண்பன்.

ஒரு வாய் சாப்பிட்ட உடனே அவன் கண்களில் இருந்து சில துளிகள் எட்டிப் பார்த்தன. இந்த முறை அவன் நண்பன் கேட்கும் முன் அவனே பேச ஆரம்பித்தான்.

"அந்தத் தெருவிலேயே அந்த வீட்டில் மட்டும் தான் திண்ணை இருக்கும். தினமும் பிச்சை எடுத்துவிட்டு நள்ளிரவில் அங்கு போய் தான் தூங்குவேன். தாயின் மடியில் படுத்திருப்பது போல ஒரு சுகம் உடலெங்கும் பரவும். ஆறேழு பேர் ஒன்றாக உட்கார்ந்து முழு இலை போட்டு உணவு சாப்பிடும் அளவிற்கு விசாலமான திண்ணை. அதன் பக்கவாட்டில் ஆழ ஊன்றி இருக்கும் ஆலமரம் இரவும் முழுதும் தன் கிளைகளால் சிறகடித்துக் கொண்டே இருக்கும்"

"வீட்டை புதிதாக இன்னும் பெரியதாக கட்டுவதற்காக அந்தத் திண்ணையையும், ஆலமரத்தையும் நேற்று இடித்து விட்டார்கள்" என்று கதறி அழுதுக் கொண்டிருந்தான்.

சக பிச்சைக்கார நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் வீட்டை இடிப்பதற்கு இவன் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறான். குழப்பமாக இருந்தது.

சக பிச்சைக்கார நண்பன் இந்த விடயத்தை இன்னொரு பிச்சைக்கார நண்பனிடம் விவரித்துக் கொண்டிருந்தான். அதற்கு அந்தப் பிச்சைக்காரன் சொன்னதைக் கேட்டு சக பிச்சைக்காரன் அதிர்ந்து போனான்.

"திருமணமான புதிதில் அவன் அப்பா ஆசை ஆசையாய் அந்த வீட்டை கட்டி முடித்தார்.அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் அவரின் உதிரத்தில் பூத்த செம்பூக்கள். அந்த ஆலமரம் அவன் பிறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னால் அவன் அம்மாவால் நடப்பட்டது.

சிறு வயதில் தினமும் இரவு அந்தத் திண்ணையில் அமர்ந்து தான் அவர்கள் மூவரும் சாப்பிடுவார்கள். அப்பொழுது அந்த வழியாக யார்  வந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து ஒரு இலை பரிமாறப்படும். அவன் சாப்பிட்டுவிட்டு அந்தத் திண்ணையிலே அம்மாவின் மடியில் தலைவைத்து உறங்கிவிடுவான்.

சில காலங்களுக்கு பிறகு காதல் தோல்வியால் ரகசியமாக குடித்துக் கொண்டிருந்த அவன், அப்பா இறந்த பிறகு வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்தான். குடிக்கு அடிமையாய் ஆனான். தன்னால் முடிந்த வரை கண்டித்த அம்மாவும் ஒருநாள் இறந்து போனார். எல்லாரும் விட்டுச் சென்ற பிறகு குடியே அவனுக்கு நிரந்தர துணையானது. கடனால் அந்த வீட்டை இழக்கும் நிலையும் உண்டானது.

வீட்டை இழந்தாலும் நள்ளிரவில் எல்லாரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டுத் திண்ணையில் தான் அவன் தூங்குவான். யாரும் பார்ப்பதற்கு முன்னால் அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி விடுவான். இப்படித்தான் சென்று கொண்டிருந்தன அவனுடைய நாட்கள். நேற்று வழக்கம் போல தூங்குவதற்காக சென்றவன் அங்கு திண்ணையும் ஆலமரமும் இல்லாததைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டான்" என்று சொல்லி முடித்தான் இன்னொரு பிச்சைக்காரன்..

சக பிச்சைக்கார நண்பன், தூரத்திலிருந்த அவனைப் பார்த்தான்.

அவன் கசங்கிய கைலி, கிழிந்த மேல்சட்டை கலைந்திருந்த தலைமுடியென ஆகாயத்தை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...