பண்டிகை நேரங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வது என்பது விண்வெளி பயணத்திற்கிணையான சாகசமாகிவிட்டது..
தட்கல் முன்பதிவிற்கு விரல்நுனியில் எல்லா உள்ளீடுகளையும் வைத்துக் கொண்டு இரண்டுநாள் இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் எவ்வளவோ முயற்சி செய்தும் எள்ளளவு கூட பிரயோஜனமில்லை. டிக்கெட் இல்லையென்று காறித்துப்பிவிட்டது முன்பதிவு தளம்.
சரி..! கடவுள் விட்ட வழியென்று சாதாரண டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் போன் செய்தான்.
மச்சான்.. எங்க இருக்க.இண்டர்சிட்டில தான வர. சரி. சீட் பிடிச்சி வெச்சிருக்கேன். சீக்கிரம் வா...!
மனதுக்குள் அப்படியொரு மகிழ்ச்சி. இதை முன்பதிவு பயணச்சீட்டுக் கிடைக்காமல் கட்டாயத்தின்பேரில் ரயிலில் சென்றால் இருநூறு மூந்நூறு ரூபாய் மிச்சமாகும் என்று பொது பொட்டியில் பலமணி நேரம் நின்றுக் கொண்டே பயணம் மேற்கொள்பவர்களால் மட்டுமே ஆத்மார்த்தமாக அனுபவிக்க முடியும்.
பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய அந்த அறிவிக்கப்படாத ஓட்ட பந்தயத்தில் கலந்துக் கொண்டு வேக வேகமாக ஓடி ரயிலில் ஏறிப் பார்த்தால் ஒரேயொரு ஜன்னல் இருக்கையை பிடித்து வைத்திருந்தான். இது கிடைத்ததே பெரிய விடயம் ஆதலால் அனுசரித்து போய்விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் என்னை அந்த ஜன்னலோர இருக்கையில் அமர வைத்துவிட்டு அவன் லக்கேஜ் வைக்கும் இடத்தில் மேலே ஏறிப் படுத்துவிட்டான்..
ஏதோ ஒரு சின்ன இடைவெளியில் தொத்திக் கொண்டு ஆறு மணி நேரம் சென்றிருக்க வேண்டிய நான் இப்பொழுது ஜன்னலோர இருக்கையில் பனிப் போர்வையை உதறித் தள்ளிவிட்டு எழ முடியாமல் முயற்சி செய்துக் கொண்டிருக்கும் சோம்பேறி சூரியனை பார்த்துக் கிண்டலடித்துக் கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..
கடவுள் இருக்கான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment