நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா சாலையை இணைக்கும் சாலையில் நூறு அடிக்கு ஒரு திருநங்கை, தூக்கிய அலங்காரத்துடனும் மார்புத் தெரிய துணியை விலக்கிக் கொண்டும் கடந்து போகும் வண்டிகளிடம் கையைக்காட்டி நின்றுக் கொண்டிருந்தனர். நகரத்தில் நள்ளிரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் கூட மிரட்டித் துரத்தும் காவல் துறையினரின் கண்களில் இருந்து இவர்கள் எப்படி மறைந்திருந்தனர் என்று தெரியவில்லை. கோபம் வருமுன் இரக்கம்தான் முதலில் வந்தது. விதி இரக்கமில்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி நடுநிசி வீதிகளில் இத்தகைய சூழ்நிலையில் நிற்க பணித்ததை எண்ணி மனம் மிகுந்த வருத்தத்தை அடைந்தது. ஜோதி நரசிம்மனின் "கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை", ரேவதியின் "உருவமும் உணர்வும்" போன்ற புத்தகத்தில் வரும் மாந்தர்களின் கதைகள் கண்முன்னே காட்சியாய் விரிந்தது. பிழைப்புக்கு வழித் தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடும் அவர்கள் ஏகப்பட்ட வன்கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மூன்றாம் பாலினம் என்று பொதுவாக அங்கீகர...