Skip to main content
நேரத்திற்கு என்ன அவசரம்..? யாரைப் பார்க்க இவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பணிபுரிந்துக் கொண்டிருக்கும் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது. முடிந்துவிட்டது என்று சொல்வதைவிட பள்ளத்தில் ஊற்றிய தண்ணீரைப் போல வெகுவேகமாக ஓடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

படித்து முடித்த கையோடு வேலைத் தேடி அலைவது வேறு. ஆனால் ஒரு அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் பணிச் செய்துவிட்டு பிறகு அந்த வேலை வேண்டாமென்று விட்டுவிட்டு வேறு வேலைத் தேடி அலைவதெல்லாம் நரக வேதனை. சென்னையைப் பொறுத்தவரையில் அது நகர வேதனை.

"டீக் குடிக்க வேண்டும் என்றால் கூட கையில் காசு இல்லை என்பதனால் நண்பன் வரும் வரை காத்திருப்பது. நேற்று இரவே அவன்தான் வாங்கி தந்தான் இன்றும் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வான் என்று பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும் போது "இல்ல மச்சான் எனக்கு பசிக்கல நீ சாப்பிட போ" என்று பொய் சொல்வது. மாதாமாதம் வாடகை மற்றும் இதரச் செலவுகளைக் கணக்கிடும் போதெல்லாம் " சங்கடத்தில் எங்கேயோ காணாமல்" போய்விடுவது. காலை உணவுச் செலவைத் தவிர்ப்பதற்காக இரவு தாமதமாக தூங்கி அடுத்தநாள் மதியமாக எழுவது. மதிய உணவை முப்பது ரூபாய்க்குள் முடிப்பது. அறையில் சிதறிக் கிடக்கும் சில்லறைகளையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது. ஆறுதலுடன் சேர்ந்தே வரும் அறிவுரைகளை சகித்துக் கொள்வது. மொட்டைமாடியில் தனியாகப் பேசிக் கொள்வது. ஆபாச படங்களுக்கு அடிமையாகிப் போனது. கடல் அலையில் கவலைகளை கரைக்க முயன்றது. தாடியை காதலிக்க தொடங்கியது. தனிமையை ரசிக்க பழகிக் கொண்டது. நல்ல வேலை அதிக சம்பளம் என்று அன்றைக்கான கனவுகளை உருவாக்கிக் கொண்டு பிறகு தூங்கச் செல்வது...!" என அந்நாட்கள் கற்பித்த மற்றும் திணித்த அனுபவங்களெல்லாம் வாழ்நாள் மொத்தத்திற்குமான படிப்பினைகள்.

பூமியைப் போல வேலைத் தேடுபவனின் அல்லது இல்லாதவனின் வயிறும் பெரும்பாலும் நீரால்தான் நிரம்பியுள்ளது. "நிரம்பியிருந்தது"...! கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல் நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வாக சென்னை முழுதும் அலைந்து இறுதியில் அந்த வேலையே அலுத்து போய் என்னிடம் வந்து சேர்ந்ததாகத் தான் இப்போதும் இந்த வேலையை நினைக்கத் தோன்றுகிறது.

காலை அலுவலக வளாகத்திற்குள் நுழையும் போது நீண்ட வரிசையில் கைகளில் கோப்புகளுடன் நிறைய பேர் நின்றுக் கொண்டிருந்தனர். வரிசையின் கடைசியில் என்னைப் போலவே ஓர் உருவம் வியர்வைத் துளிகளுடனும் முகத்தில் கவலைகளுடனும் என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

"கண்டிப்பாக இந்த வேலை உனக்கு கிடைக்கும்.. வாழ்த்துக்கள்..!" என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த உருவம் வெகுநேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...