Skip to main content

புலரியின் மடியில்

நானும் நண்பனும் இன்னொரு நண்பனைச் சந்திப்பதற்காக நாவலூருக்கு 'ஓலா ஷேரில்" சென்றுக் கொண்டிருந்தோம். ஓட்டுநருக்கு நாற்பதைந்து முதல் ஐம்பது வயதுக்குள் இருக்கும். அவர் வேலைக்குப் புதிதென்பது வழித் தெரியாமல் தவிக்கும் அவருடைய விழிகளிலிருந்துக் கண்டுகொள்ள முடிந்தது. முழுக்க முழுக்க வெகுளித்தனத்தால் தீட்டப்பட்டிருந்தது அவருடைய முகம்.

சிறிது நேரம் பயணப்பட்ட பிறது அவரே பேச்சுக் கொடுத்தார். "ஏந்தம்பி. நீங்க ஐ.டி. கம்பெனில வேலப் பாக்குறீங்களா.?"

'ஆமாங்கண்ணா'.

இந்த 'லேப்டாப்' லாம் வாங்க ரொம்ப செலவாகுமா தம்பி.? மாசாமாசம் கட்டுற மாதிரிலாம் தருவாங்களா.?

அதெல்லாம் தருவாங்களேண்ணா..

எனக்கு சம்பளம் கம்மி தம்பி. இப்போ தான் கொஞ்ச நாளா இந்த ஓலா கேப் ஓட்றேன். இதுக்கு முன்னாடி கூலி வேலைக்குத் தான் போய்கிட்டு இருந்தேன். அவங்க பேங்க் டிரான்ஸ்கேசன் கேப்பாங்களா.? என் அக்கௌன்ட்ல அதிகபட்சம் இருபதாயிரம் தான் இருக்கும் தம்பி.

'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சன இல்ல' நீங்க ஷோரூம்ல போய் கேட்டுப் பாருங்க.

சரி.! யாருக்குண்ணா லேப்டாப்.?

என் மவனுக்குத் தான் தம்பி. இன்ஜினியரிங் முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. இன்னும் சரியான வேலக் கெடைக்காம வடபழனி பக்கத்துல மிருங்கங்க பத்தி வரப்போறவங்களுக்கெல்லாம் பாடம் நடத்திக்கிட்டு இருக்கான். பன்னண்டாயிரம் சம்பளம். அதான் கடனப்புடன வாங்கி ஒரு லேப்டாப் வாங்கித் தந்தரலாமுன்னு யோசிக்கிறேன். வேற வேலத் தேட உதவியா இருக்கும்ல.

சூப்பர் அண்ணா.!

அவன மட்டும் கொற சொல்ல முடியாது தம்பி. நானும் ஒழுங்குக் கெடையாது. நாப்பது வயசு வரைக்கும் எதப் பத்தியும் கவலைப்படாம பொண்டாட்டி புள்ளைய பத்தி அக்கறை இல்லாம தல தெறிக்க குடிச்சுட்டு எங்கையாவது வுழுந்துக் கெடப்பேன்.யாராவது தெரிஞ்சவங்க அந்தப் பக்கமா போறப்ப நான் வுழுந்துக் கெடக்குற கோலத்த பாத்துட்டுப் போய் என் வீட்ல சொல்லுவாங்க. அப்புறம் பையனோ பொண்டாட்டியோ வந்து வூட்டுக்குத் தூக்கிட்டுப் போவாங்க. ஒரு பொறுப்பான அப்பனா அவனுக்கு நான் ஒண்ணுமே செஞ்சது கெடையாது. கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தான் படிச்சான். பனன்டாவதுல ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்குனான். யாரையும் எதிர்ப்பாக்காம அவனே இன்ஜினியரிங் காலேஜ்ல சேந்தான்.யார் யாரையோ புடிச்சி பேங்க்ல லோன் வாங்குனான். நான்கூட பாதில படிப்பெல்லாம் வுட்ருவானு தான் நெனைச்சேன். ஆனா சும்மா சொல்ல கூடாது தம்பி. எதுலயும் பெயில் ஆகாம நாலு வருஷத்தையும் முடிச்சுட்டான். நான் மட்டும் அப்பனா பொறுப்பா இருந்திருந்தா அவன் வாழ்க்கைல எங்கையோ போயிருப்பணானோனு ஒரு குற்ற உணர்ச்சி மனசுல உறுத்துகிட்டே இருக்குது தம்பி. அவன் வாழ்க்கைல இன்னும் மேல வராம இருக்குறதுக்கு நானே ஒரு காரணமாயிட்டேன்.

சாலையில் நெருக்கடி குறைந்துவிட்டாலும் போகும் வழியை நினைத்து அவருடைய கண்கள் ஏனோ தவித்துக் கொண்டிருந்தன. என்ன சொல்வதென்று தெரியாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். அதை முடித்து வைக்க போதுமான வார்த்தைகள் இருவரிடமும் இல்லை.

அந்த அமைதி மெளனத்திற்கே பெருஞ்சுமையாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் இறங்க வேண்டிய இடம் உடனே வந்தது.

புன்னகைத்தவாறே காசை வாங்கிக் கொண்டு, 'வரேன் தம்பி' என்று காரைக் கிளப்பினார்.

சாலை நெரிசலாக இருந்தாலும், நின்ற இடத்திலேயே தேங்கி நின்றுவிடாமல் புதிய வெளிச்சத்துடன் எவ்வித தடுமாற்றமுமின்றி சீரான வேகத்தில் அந்தக் கார் முன்னேறியது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...