Skip to main content

அட்சயம்

மொத்த சக்தியையும் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிக் கொண்டிருக்கும் வெயிலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், வடியும் வேர்வையை விரல்களில் வழித்தெறிந்துவிட்டு முத்துவும் பாலுவும் தேவியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை வந்துவிட்டாளே நேரம், பசி அறியாமல் எந்நேரமும் விளையாட்டுத் தான். பாலுவும் தேவியும் அண்ணண் தங்கை. பாலு தேவியின் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முத்துவின் வீடு.மூவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். பாலுவும் முத்துவும் ஏழாம் வகுப்பு. தேவி ஒன்பதாம் வகுப்பு.

அன்றும் வழக்கம் போல மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பாலுவின் அம்மா வந்து, 'கடைக்கு போகணும்ல. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க' என்று இருவரையும் அழைத்தார். பொதுவாக மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு அம்மா அழைக்கும் போதெல்லாம் எப்போதுமே மறுக்கும் பாலுவும் தேவியும் அன்று உடனே கிளம்பத் தயாராகினர். முத்துவிற்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் விளையாட்டுக்கு அவர்களை விட்டால் அவனுக்கு வேறு கூட்டு இல்லை. விளையாட்டில் மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் கூட்டு. இவர்களிருவரும் சென்றுவிட்டால் நாள் முழுவதும் விளையாட தனக்கு நண்பர்களே இல்லையாதலால் பெரும் வருத்தமுற்றான் முத்து. அதை நினைக்கும் போது துக்கம் தொண்டையை துருத்தியது. கண்ணீர் கண்களை அழுத்தியது.

அம்மா கூப்பிட்டவுடன் சிட்டாய் பறந்துவிட்டான் பாலு. தேவி நிதானமாக நடந்தாள். முத்து அவளின் பின்னால் சென்றுக் கேட்டான்.

'ஹே தேவி'.! ஏன் விளையாடாம போற'

'நாங்க கடைக்குப் போறோம்டா' தேவி சொன்னாள்.

'கடைக்கா.? எந்தக் கடைக்கு.?' முத்து திருப்பிக் கேட்டான்.

'எந்தக் கடைக்காவா.! இன்னைக்கு அட்சய திரிதி உனக்கு தெரியாதா.! இன்னைக்கு எல்லாரும் தங்க நக வாங்குவாங்க. நாங்களும் நக வாங்கத்தான் போறோம். எனக்கு செயின்னு பாலுவுக்கு மோதரம்.'

முத்து மேற்கொண்டு வேறு கேள்விக் கேட்கும்முன் தேவி ஓடிவிட்டாள்.

அட்சய திரிதியைப் பற்றியெல்லாம் முத்துவிற்கு ஒன்றும் தெரியாது. அதைப் பற்றி அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் அவன் இன்று தெரிந்துக் கொண்டதெல்லாம் அட்சய திருதியை முன்னிட்டு தன் நண்பர்கள் தங்க நகை வாங்க டவுன் கடைக்குப் போகிறார்கள். ஆக நாமும் டவுன் கடைக்குப் போய் தங்கம் வாங்க வேண்டும். யோசித்துக் கொண்டே வீட்டிற்கு மெல்ல நடந்தான் முத்து.

சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள் முத்துவின் அம்மா. முத்துவை பார்த்ததும், ' என்ன தொர. சீக்கிரம் வந்துட்டிங்க' என்றாள். முத்து பதிலேதும் பேசாமல் அமைதியாக தலைக் குனிந்து அமர்ந்திருந்தான்.

'பசிக்குதா கண்ணு. இந்தா ஆச்சு. ஒரே ஒரு நிமிஷம் தான். கொழம்பு வெந்துரும்' சோர்ந்து அமர்ந்திருக்கும் முத்துவைப் பார்த்து அவளே சொன்னாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, "ம்மா.! வாம்மா.. கடைக்குப் போலாம்" என்று ஆரம்பித்தான் முத்து.

கடைக்கா..? எதுக்கு.? எந்தக் கடைக்கு...? முத்துவின் அம்மா இடைவெளி இல்லாமல் கேட்டாள்.

'ம்மா. இன்னைக்கு அட்சய திரிதி தான.?'

"ஆமா". அதுக்கென்ன?

'பாலுவும் தேவியும் தங்க நக வாங்க டவுனுக்குப் போறாங்க. வாம்மா நாமளும் போலாம்'

முத்துவின் அம்மா இதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனாள். அடுத்த வேளை சோற்றுக்கே ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் மகனின் இந்த ஆசையை நினைத்து மனதிற்குள் நொந்தாள். குடும்ப நிலையை எண்ணி தன்னையே கடித்துக் கொண்டாள். இருந்தாலும் முத்துவை அழைத்துக் கொண்டு கடைக்குப் போனாள்.

முத்துவிற்கு மனதில் அளவில்லா சந்தோஷம். பாலுவையும் தேவியையும் நாளை சந்திக்கும் போது வாங்கிய மோதிரத்தையோ செயினையோ எப்பிடி பெருமையாகக் காட்டலாம் என்று மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டே அம்மாவோடு நடந்தான்.

அம்மா அழைத்துச் சென்ற கடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் முத்து. அது நகைக் கடை அல்ல மளிகைக் கடை. கண் இமைக்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றான் முத்து.

"முத்து.! அட்சய திரிதினா 'எப்பவும் குறையாததுனு' அர்த்தம். நமக்கு எது எப்போவுமே கொறையக் கூடாதுனு நெனைக்கிறோமே, எது நாம வாழ்றதுக்கு அத்தியாவசிய தேவையா இருக்கோ அதத்தான் அட்சய திரிதி அன்னைக்கு வாங்கணும்.! நமக்கு இப்போ அத்தியாவசியமா தேவைப்படறது மூணு வேள சாப்பாடு. அதனால இந்த வருஷ அட்சய திரிதிக்கு அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு இந்த நாளும் வாங்கலாம்"

கண்கள் கலங்க நின்றுக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தான் முத்து. நண்பர்களிடம் சுய பெருமைப் பேச மனதுக்குள் நிகழ்த்தி வைத்திருந்த ஒத்திகையைத் துடைத்தெறிந்தான். யதார்த்தத்தைப் புரிந்துக் கலங்கினான்.

அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு எல்லாவற்றிலும் அரைக் கிலோ வாங்கி மகனின் கையில் கொடுத்துவிட்டு அவன் நிழலைப் பின் தொடர்ந்து நடந்தாள் முத்துவின் அம்மா.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...