Skip to main content

""மழைத்துளிகளின் பயணம்""

என் கதையில்,

ஒரு நாள் மேகத்தில் இருந்து தன் பயணத்தைக் கிளப்புகையில் எப்படியும் மண்ணை அடைய சில பல மணி நேரங்கள் ஆகுமென்று வெவ்வேறு திசையில் பயணிக்கத் தயாராக இருந்த இரு மழைத் துளிகள் ஒன்றோடு அறிமுகபடுத்திக் கொண்டு நண்பர்கள் ஆயின..

இரு மழைத் துளிகளும் தாங்கள் செல்லவிருக்கும் இடங்களைப் பற்றி பேச ஆரம்பித்தன.

முதல் மழைத் துளி இரண்டாவது மழைத் துளியிடம் கேட்டது ., உனக்கு எங்கு செல்ல விருப்பம் நகரத்திற்கா இல்லை கிராமத்திற்கா.? என்று..

இரண்டாவது மழைத் துளி, தனக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆதலால் எங்கு சென்றாலும் பரவாயில்லை என்றது..!

"சரி".. என்று முதல் மழைத் துளி தலைச் சாய்த்தது.

இரண்டாவது மழைத் துளி அதே கேள்வியை முதல் மழைத் துளியிடம் கேட்டது..

முதல் மழைத் துளி மிகுந்த புன்னகையுடன் நான் கிராமத்திற்குச் செல்ல விருப்பபடுகிறேன் என்றது..

அதற்கு இரண்டாவது மழைத் துளி, கிராமத்திற்கா.? என்று ஏளன சிரிப்புடன் கேட்டது.

முதல் மழைத் துளியும் "ஆம்" என்று தயக்கமில்லாமல் தலையசைத்தது.

இரண்டாவது மழைத் துளி தன்னிடம் இரண்டு கேள்வி இருப்பதாகச் சொல்லி, முதல் கேள்வியாக நீங்கள் ஏன் நகரத்தை விரும்பவில்லை என்று கேட்டது.

முதல் மழைத் துளி  ஆரம்பித்தது.

நகரம் என்றாலே வெறுமை தான். நகரத்தில் இருப்பவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. நாம் வரவில்லை என்றாலும் திட்டுவார்கள் வந்தாலும் கடுஞ்சொற்களை வீசுவார்கள். சிறு  குழந்தைகளுக்குக் கூட நம் மீது பாசம் வராமல் இருப்பதற்காக பள்ளியிலேயே "RAIN RAIN GO AWAY" என்று சொல்லிக் கொடுத்து அந்த பிஞ்சுகளின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்து
விடுகின்றார்கள். அங்கு நம்மால் எங்கும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாது. ஆங்காங்கே வடிநீர்க் கால்வாய் வைத்து நம்மை சிறைப் பிடித்து  விடுவார்கள். சிறைப் பிடிப்பது மட்டுமின்றி  நம்மை நமது பரம எதிரியான சாக்கடையிடம் கொண்டு சேர்த்து  விடுவார்கள். கடைசியில் நம்மையும் சாக்கடையாக்கி நம் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு உண்டாக வைத்துவிடும்.. நம்மை கட்டாயபடுத்தி தீயவர்களாக்கி மக்களுக்கு தீங்கு விளைவிக்க வைத்துவிடும் இந்த நகரம்..

இவ்வாறு நகரத்தைப் பற்றி சொல்லி முடிக்கும் போது இரண்டாவது மழைத் துளியின் இதயம் "படக் படக்" வென்று அலறியடித்துக் கொண்டிருந்தது..

அடுத்து எதிர்பார்த்த கேள்வியாக நடுங்கிய குரலுடன், ஏன் கிராமத்திற்கு செல்ல விருப்பபடுகிறாய் என்று வினவியது..


முதல் மழைத் துளி மகிழ்ச்சியுடன் தயாரானது.


கிராமம் என்றாலே அழகு தான். ஒவ்வொரு வீடும் கூரைகளுக்குள் ஒளிந்திருக்கும். ஆனால் அந்த கூரையில் எண்ணற்ற ஓட்டைகள் நெஞ்சை நிமிர்த்திப் பல்லிழுத்துக் கொண்டே நம்மை வரவேற்கும்.. அழையா விருந்தாளியாக நாம் எந்நேரம் சென்றாலும் நம்மை யாரும் கடிந்துக் கொள்ளமாட்டார்கள்.. கூரையின் ஓட்டைகளுக்கு நேராக அண்டான் குண்டங்களை வைத்து நாம் ஒருசேர சேர இணைந்து உண்டாக்கும் ஒலியை இன்னிசையாகக் கேட்டு மகிழ்வார்கள். தெருவிலும் முற்றத்திலும் கலர் கலர் குடங்களில் பிடித்து நம்மை அழகுப்பார்ப்பார்கள். இந்த சிறுவர்களுக்கோ நாம் வரப்போகிறோம் என்று தெரிந்தாலே ஒரே குதூகலம் தான். ""மழையே மழையே வா வா"" என்று பாடல்கள் பாடி நம்மை வரவேற்பார்கள். அவர்களுடைய கிரிக்கெட் விளையாட்டில் நம்மையும் இணைத்துக் கொள்வார்கள். அங்குள்ள இலை தலைகளெல்லாம் எப்படி இருக்குறீர்கள் என்று பாசமாய்க் கேட்கும்.  அவற்றின் மீது சில நிமிடங்கள் தங்கி நாம் ஓய்வுக்கூட எடுத்துக் கொள்ளலாம் எதுவும் சொல்ல மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் நமது ரத்த சொந்தங்களான ஆறு குளம் குட்டைகளையெல்லாம் சந்தித்து நமது அங்காளி பங்காளி அத்தை பெண் மாமன் மகன் என நமது உறவுகளைத் தேடிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் விட விவசாய பூமியில் இறங்கினால் இந்த ஊரே உணவு உண்ண  நாமும் காரணமாவோம் என்று முதல் மழைத் துளி பெருமிதத்துடன் சொல்லி முடித்தது.

முதல் மழைத்துளி  சொல்லி முடிக்கும் முன்பே இரண்டாவது மழைத் துளியின் மனமும் நினைவுகளும் கிராமத்தில் இருக்கும் தனது அத்தைப் பெண்ணை பற்றி கற்பனை சொரிந்துக் கொண்டிருந்தது.

அத்துடன் இரண்டாவது மழைத் துளியும் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று தனது ஆசையை முதல் மழைத் துளியிடம் கூறியது. பிறகு இரு மழைத் துளிகளும் ஒன்றாக கிராமத்திற்குச் செல்ல வேண்டுமென்று கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு பயணத்தைத்  தொடங்கினர்..


கார்த்திக் பிரகாசம்..

Comments

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...