"ஏய்...! விஜயா எப்டி இருக்க.?"
"நல்லா இருக்கேன் பாயம்மா. நீ எப்டி இருக்க"
'நல்லா இருக்குறனால தான் போறவள நிக்க வெச்சிப் பேசிட்டுக் கெடக்கேன்'.
"ம்ம்ம் அதும் சரிதான்.. இதான் என் பையன்"
"அதான் மூஞ்சிலேயே தெரியுதே. 'என்னக் கண்ணு பண்ற.. படிக்கிறீயா வேலைக்குப் போறீயா.? "
"இன்ஜினியரிங் முடிச்சிட்டு சென்னையில வேலைக்குப் போறேன் மா"
பாயம்மாவின் கண்களில் இருந்து பாய்ந்து வந்த சந்தோஷம். அதை வெறுமனே 'சந்தோஷம்' என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. "ஒருகாலத்தில் கண்ணுக்கெதிரே ஒருவேளைச் சோற்றுக்கே கஷ்டப்பட்டவள் இன்று தன் பிள்ளைகளை சொந்த காலில் நிற்க வைத்து, நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்துச் சாதித்துவிட்டாள் என்ற ஆத்ம திருப்தி. எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துக் காட்டியவளின் போராட்டக் குணத்தின் வெற்றிக்கு அவளின் இதயத்திலிருந்து வெளிவந்த ஒருதுளி பாராட்டு".
"எப்படியோ பையனையும் படிக்க வெச்சி, புள்ளையையும் நல்ல எடத்துல தாட்டிபுட்ட விஜயா" பாயம்மாவின் கண்கள் கண்ணீர் கோர்க்கவில்லை ஆனால் அவள் அழுவது போலிருந்தது.
"தம்பி..! மவராசா.. அம்மா அப்பாவ கடைசிக் காலத்துல நல்லா பாத்துக்க அய்யா. ஒங்க அம்மா பட்டக் கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்ல ராசா" என்றுக் கன்னத்தைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தாள் பாயம்மா.
சரிங்கமா.! என்றுச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தேன். அம்மாவின் கண்களில் கடந்த காலம் கஷ்டங்களுடன் கண்ணீராய் கரைந்தோடிக் கொண்டிருந்தது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment