வாழ்க்கையில் இனி யார் கண்ணில் முழித்து விடக்கூடாது என்று நினைத்திருந்தானோ அவரை பல வருடங்களுக்குப் பிறகு இன்று பார்த்துத் தொலைத்துவிட்டான் மித்ரன். அவரும் அவனைக் கவனித்துவிட்டார். இவன் கண்டுக்காதது போல் சென்றுவிடலாம் என்றுதான் இருந்தான். ஆனால் அவரே அவனருகில் வந்தார்.
"என்னப்பா. ரவுண்டா அம்பது வருதா"
'இல்லீங்க. "நாப்பத்தி நாலு நாப்பதஞ்சு தான் வருது'
"நீ வேலைக்குப் போய் அஞ்சு வருஷம் இருக்கும்ல".
'ஆமாங்க'
"என்னப்பா அஞ்சு வருஷமாச்சுங்குற இன்னும் அம்பதுக் கூட வரலயா...?"
"இதோ இந்த ஏப்ரல்ல அம்பத தொட்டுடும்னு நினைக்கிறேன்...!" மித்ரனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் மனதுக்குள் பொங்கி வந்தன. அவற்றை மனக் கண்ணீராய் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மரியாதையோடு பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
இவ்வளவு நேரம் அவர் கேட்டதெல்லாம் அவனின் சம்பளத்தைப் பற்றி தான். மித்ரனுக்கு இருப்பதைந்தாயிரம்கூட கைக்கு வருவதில்லை இருந்தாலும் வெறுப்புடன் வாய்க்கு வந்தததை அடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், 'சாப்பிட்டாயா' என்ற கேள்விக்குமுன் "சம்பளம் எவ்வளவு" என்ற கேள்விதான் இவர் வாயிலிருந்து முதலில் வரும். மூச்சிலும் பேச்சிலும் அந்தஸ்தை மட்டும் சல்லடையிட்டு சற்று அதிகமாகச் சுவாசித்து வெளியிடுபவர்.
எவராவது சம்பளத்தைப் பற்றிக் கேட்டாலே அவனுக்கு எரிச்சலாய் இருக்கும் அதிலும் இவர் கேட்டால் 'அடிக்கிற வெயிலில் உடல் முழுவதும் அம்ருதாஜனைத் தடவியது போன்றதோரு எரிச்சல் வந்துவிடும்.
ஏனென்றால் "சொந்த வீடு இல்லை, நல்ல வேலை இல்லை, சம்பளம் குறைவு" என்று தன் பெண்ணை வேறொரு பெரிய இடத்து பையனுக்கு மணமுடித்துக் கொடுத்தவர் இந்த மாமாதான். பெண்ணும் அவனைக் காதலிக்கிறாளென்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஆரம்பத்தில் அவளும் அவனைத் தான் கட்டிக் கொள்வேனென்று உறுதியாக இருந்தாள். ஆனால் கௌரவ பந்துக்கள் மூலம் கட்டாயப்படுத்தி அவளது மனதை மாற்றினார். அம்மாவும் தம்பி பெண்ணைத் தன் மருமகளாக்கிக் கொள்ள வேண்டுமென்று வெகுவாக ஆசைப்பட்டாள். சொந்தம் விட்டு போய்விடக் கூடாது; பிள்ளைகள் ஒருவர் மீது ஒருவர் ஆசையாக இருக்கிறார்கள். 'பணம் காசு என்றுச் சொல்லி அதைக் கெடுத்துவிடாதே' என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சிப் பார்த்தாள். அதையெல்லாம் அவர் காதில்கூட வாங்கவில்லை. அடுத்த நாளே முகூர்த்ததத்திற்கு தேதியையும் குறித்துவிட்டார்.
"கண்டிப்பா நீங்க நேர்ல வந்து வாழ்த்தணும் அத்த. ஒங்க ஆசீர்வாதம் கெடைச்ச தான் என்னால நிம்மதியா வாழ முடியும் இல்லனா ஆயுசுக்கும் குற்றவுணர்ச்சியோடயே வாழ்ந்து செத்துருவேன்" என்று திருமணத்திற்கு முந்தைய நாள் அம்மாவின் மடியில் சாய்ந்து அவள் கதறியழுதாள். அப்பொழுது மித்ரன் உள்அறையில் தான் இருந்தான். ஆனால் அவளுக்குத் தெரியாது.
தம்பி மகள் மீதான பாசத்தினால் அம்மா மட்டும் கனத்த நெஞ்சோடு அந்தத் திருமணத்திற்குப் போய் வந்தாள்.
"சொத்துபத்து இருந்தா தான் சொந்தபந்தத்துக்கெல்லாம் கண்ணுத் தெரியும்" அப்பா அடிக்கடி சொல்வார். உண்மை தான்.! இப்போது நினைத்தாலும் எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. கால் போனப் போக்கில் மனதில் புலம்பிக் கொண்டே நடந்தான் மித்ரன்.
வீட்டை அடைந்ததும் நேராக அறைக்குச் சென்று இரண்டு ஆண்டுக்கு முந்தைய தன் டைரியைத் துலாவினான். அதில் அவளுக்கு திருமணம் நடந்த நாளான ஜனவரி பத்தாம் தேதிக்குப் பக்கங்களில் பறந்தான்.
"சொத்துபத்தும், நல்ல வேலையும் அதில் அதிக சம்பளமும் இருந்துவிட்டால் காதல் மன்னித்து ஏற்றுக் கொள்ளப்படும் இதில் ஏதோவொன்று குறைந்தாலும் காதல் ஒரு தகுதியற்ற கீழ்த்தரமானச் செயலாகவும் பாவச் செயலாகவும் கொள்ளப்படும்" என்று எழுதியிருந்த வரிகளின் இறுதியில் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக அவனின் கண்ணீர்த் துளிகள் அந்தப் பக்கத்தை முடித்திருந்தன...!
இப்போது அந்தப் பக்கம் அலையைப் போல காற்றில் முன்னும் பின்னும் பறந்தடித்துக் கொண்டிருந்தது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment