Skip to main content

Posts

Showing posts from August, 2021

யார் யாரை

கூண்டில் கிடந்த பறவையை விடுவித்தேன் பறவை நன்றி சொன்னது நானும் நன்றி சொன்னேன் பறவைக்கு யார் யாரை விடுவித்தது.? கார்த்திக் பிரகாசம்...

காலாதீதம்

தூரத்து உறவுக்கார பெண்ணவள் அடுத்த தெருவிலிருந்தாள் பால்வாடி பருவந்தொட்டே நானும் அவளும் ஒன்றாய் பள்ளிக்குச் செல்வோம் அன்பாய் பார்ப்பாள் அன்பாய் பேசுவாள் அன்பாய் கொஞ்சுவாள் அன்பாய் சிரிப்பாள் அன்பாய் கரம் பற்றுவாள் கோவமும் அன்பாய் என் கழுத்தில் தொங்கிக் கிடக்கும் தண்ணீர் பாட்டிலைக் கழுத்திலிருந்து எடுக்காமலேயே கலைந்து போன முடிகள் முகத்தை உரச மூடியைக் கழற்றி நீர் உறிஞ்சுவாள் பெண் குழந்தை பொம்மையை தன் குழந்தையாகக் கவனித்துக் கொள்வதையொத்த கனிவன்பிருக்கும் பார்வையில் சொப்பு சாமானத்தில் சமைத்து மணக்க மணக்க ஊட்டுவாள் செடிகளுக்குள் தட்டான் பிடிக்கையில் பாதத்தில் பத்திய முள்ளை ஊக்குப் பின் வைத்து லாவகமாய் எடுப்பாள் காலத்தோடு வளர்ந்தோம் அரும்பு மீசை பருவத்தில் பாவாடை தாவணியில் கனவிலெங்கும் பாட்டுப் பாடி திரிந்தாள் டா‌ போட்டுப் பேசுவாள் நான் டி போட்டால் உனக்கு நானென்ன பொண்டாட்டியா எனச் செல்லமாய் ஏசுவாள் தெளிக்கும் வெயிலிலும் வானம் பார்த்து இதழ் விரித்திருந்த சூரிய காந்தி மலரை அவளுக்குப் பரிசளித்த நாளில் சாதிய முறைப்படி அவள் உனக்குச் சகோதரி முறை என்றாள் அம்மா விரும்பிய பெண்ணை விளங்காத சாதி வந்து வி...

எடையிழப்பதில்லை

முதற் பாதியில் ஓட்ட வேகத்தில் நடந்தவன் தோய்ந்த கால்களை இழுத்தவாறு‌ தவழ்கிறேன் பாரம் சுமந்த அவை பரிதாபகரமாய் தொங்குகின்றன முடிகள் நரைத்து தேகம் சுருங்கிவிட்டது வில்லாய் வளைந்த முதுகு நிரந்தரமாய் வளைந்தாகிவிட்டது சமயத்தில் சுயநினைவும் கூட தப்பிவிடுகிறது வதைக்கும் பருவ வேள்வியின் வேதனையில் தனிமைக்கு இரையான பாதுகாப்பின்மையின் விரக்தியில் கரம் சேரா காதலியவள் அவசரத்தில் எறிந்த 'அந்த சொற்கள்' மட்டும் குளத்தில் எறிந்த கல்லைப் போல் அடி நெஞ்சில் அப்படியே தங்கி இருக்கின்றன சொற்கள் ஒருபோதும் எடையிழப்பதில்லை கார்த்திக் பிரகாசம்...

அழகிய நாய்

அழகிய நாய் அழுகு என்றால் நாயாய் பிறந்திருக்கலாமோ என ஏங்க வைக்கும் அழகு மழை பெய்து எங்கும் பசுமை பூத்திருந்த ஓர் நன்னாளில் நான்கு குட்டிகளை ஈன்றது கடைக்குட்டியின் சாயல் தாயின் பிரதியை ஒத்திருந்தது அதன் மீது மட்டும் கூடுதல் பாசம் மற்ற குட்டிகளின் மீதும் அளவில்லா பாசம் தான் தாயாயிற்றே உணவைப் பங்கிட்டு அளிக்கும் தினமும் நக்கிக் கொடுக்கும் வளர்ந்த நாய்களிடமிருந்து ஒற்றை ஆளாய் காக்கும் ரேபீஸ் தாக்கிய அன்று கடைக்குட்டியைத் தான் முதலில் கடித்துக் குதறியது விபரீதம் அறியாமல் விளையாட்டு என நினைத்து தலையை நக்கக் கொடுத்தது கடைக்குட்டி நிலமெங்கும் சிவப்பு துளிகள் தாயின் பற்களெல்லாம் கடைக்குட்டியின் குருதி வாடை வாயில் கவ்வியிருந்த கடைக்குட்டியின் கழுத்தைத் தரையில் விட்டபோது அது செத்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது அன்றே மற்ற குட்டிகளை மறந்து அந்த நிலத்திலிருந்து ஓடிவிட்டது தாய் எந்த தேடியும் கிடைக்கவில்லை காற்றில் கடைக்குட்டியின் குருதி வாடை வீசாத ஒரு நிலத்திற்குத் தப்பியோடியிருக்கலாம் அல்லது தன்னையே கடித்து மாண்டிருக்கலாம் அந்த அழகிய நாய் அழுகு என்றால் நாயாய் பிறந்திருக்கலாமோ என ஏங்க வைக்கும் அழகு கார...

அரசல்புரசலான தகவல்

அரசல்புரசலான தகவல் ஊர்த் தெரு பெண்ணுக்கும் காலனி தெரு பையனுக்கும் காதலாம் அடுத்தநாள் செய்தி கடன்சுமை தாளாமல் காலனி தெருவில் குடும்பமே தீயிட்டு தற்கொலை தகவல் உறுதியானதாகப் பேசிக் கொண்டனர் சிலர் கார்த்திக் பிரகாசம்...

குறையின்றி

குறையென்று ஒன்றுமில்லை என்றான் அவன் குறையின்றி ஒன்றுமில்லை என்றான் மற்றொருவன் குறைத்தவிர ஒன்றுமில்லை என்றாள் அவள் பசியால் செத்துப் போன வயிற்றையும் மறுப்பால் மரத்துப் போன மனதையும் தோல்வியால் இத்துப் போன பருவத்தையும் கொண்டவன் சொல்கிறேன் அவர்கள் குறையெனக் குறைபட்டுக் கொள்வதெல்லாம் இருத்தலின் தினசரி சுகங்களையும் சுகித்திடாத சுவாரசியங்களையும் மட்டுமே கார்த்திக் பிரகாசம்...

சரி விடுங்கள்!

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் முனைப்பில் அவசரமாகக் கயிற்றைக் கம்பத்திலிருந்து இறக்கி முடிச்சுகளை நிதானமில்லாமல் அவிழ்க்கிறான் வணிக வளாகத்தின் காவலாளி வேடனிடம் சிக்கிய பறவையைப் போலத் தலை கவிழ்ந்து தரையில்படத் தொங்குகிறது தேசியக் கொடி சரி விடுங்கள்! தேசமே தலை குப்புறக் கிடக்கையில் தேசியக் கொடியில் என்ன இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

புகழுரை

புகழுரை என்றறிந்ததும் அதை ஒரே மூச்சில் உடனடியாக வாசிப்பதில்லை நான் சிகரெட்டை அடிப்பாதம் வரை உள்ளிழுக்கும் பயிற்சி பெற்ற நிபுணனைப் போல் ஒவ்வொரு சொல்லையும் மனதின் ஒவ்வொரு அறைக்குள்ளும் உலாத்துவேன் சொற்களை மிஞ்சிய ருசி மருந்து மனதிற்கு வேறெதுவுமில்லை அதிலும் பாராட்டுச் சொற்கள் ரசித்து ருசித்து சொற்களின் சுயமைதுனம் நிகழும் சுக்கிலம் கக்கிய குறியாய் மனத்தின் சொற் போதை தளர்ந்ததும் ஒரே மூச்சில் வாசிப்பேன் சொற்களின் கூச்சல் பிணத்தின் வாடையில் உடலைக் கூசும் கார்த்திக் பிரகாசம்...

சில்லறை கவிதை

தம்பி.. பண்டம் எவளோ.? சமோசா பத்து ருவா போண்டா பத்து ருவா வடை பஜ்ஜி எட்டு ருவா உனக்கெது வேணும் பாட்டி.? கந்தலான முந்தியில் முடிந்திருந்த  நாலைந்து சில்லறை நாணயங்களை  முன்புறமும் பின்புறமும்  திருப்பி திருப்பி  பார்த்துவிட்டுச் சொன்னாள் ஒரு டீ மட்டும் குடுய்யா... போதும் பொன்னிற வெயிலில் வயதான பாட்டியின் சில்லறை கவிதையானது டீ கார்த்திக் பிரகாசம்...

நான் சைக்கிள் வளர்க்கிறேன்

நான் சைக்கிள் வளர்க்கிறேன் இருவருக்கும் ஒரே சிறகுகள் நான் இல்லாமல் அது பறக்க முயல்வதில்லை அது இல்லாமல் நானும் பறப்பதில்லை ஒருசிலர் அதற்கு 'பருந்து' எனப் பெயரிடச் சொன்னார்கள் வேறுபலர் 'பீனீக்ஸ்' என்றார்கள் ஆகாயமும் பிரபஞ்ச வெளியும் எல்லாருக்குமானது தானே ஆதலால் அதற்கு 'தும்பி' எனப் பெயரிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கதாநாயக பிம்பம்

என் மீதான அவளின் கதாநாயக பிம்பம் கவர்ச்சிகரமாய் இருந்தது போக்கில் மெல்லிய புன்னகையை உதிர்க்க இயேசுவைப் போல் புனிதமானவன் நீ எனச் செவிகள் கூசிடப் போற்றுவாள் மழலை சிரிப்புடன் நான் அமர்ந்திருக்க உலகின் அத்துணை புனித ஆத்மாக்களும் எந்தன் சிறு பார்வை வேண்டி பவ்யமாய் நிற்பது போல் முகம் கொள்வேன் அப்பிம்பம் பெருஞ்சுவர் காவலில்லா சிறை மீண்டெழச் சாத்தியமற்ற நானே ஆணிகள் துளைத்து என்மேல் சுமத்திக் கொண்ட நிரந்தர சிலுவையென பிறகு தான் புரிந்தது ஏதோ ஒரு நாள் இயல்பான மனிதனாய் எதிர்பாராமல் ஒரு தவறை நிகழ்த்திய போது அருவருப்பினும் கீழான அவளின் பார்வையில் தான் பின்னிய வலையிலேயே சிக்குண்ட சிலந்தியைப் போல் முதன்முதலாய் என் கதாநாயக பிம்பம் துடித்தது நடக்கும் போது கைகளைப் பற்றிக் கொள்ளாத ஓர் நாளில் நூறாவது மாடியிலிருந்து விழுந்த கண்ணாடியைப் போல் என் கதாநாயக பிம்பம் சில்லு சில்லாய் உடைந்தது சிலுவையைச் சுமந்த சென்ற இயேசுவைப் பின்தொடர்ந்த பாரபாஸைப் போல் துரத்தி வந்தவள் திடீரென்று காணாமல் போய்விட்டாள் அவள் விட்டுச் சென்ற அன்பின் வழியில் அரைகுறையான நான் மட்டும் இருந்தேன் வெளுத்துப் போன கதாநாயக பிம்பத்தோடு கார்த்திக் ...

சிறைகள் விற்பனைக்கு

இன்றொரு விளம்பரம் பார்த்தேன் சிறைகள் விற்பனைக்கு பலவித உணர்ச்சிகளின் கண்ணீர் உப்பினைச் சேர்த்து சோக வடிவமைப்பில் செதுக்கப்பட்ட விதவிதமான சிறைகள் வனத்தைக் கண்டிராத கோவில் யானையின் சிறை ஆகாசத்தை அளந்திடாத கூண்டு பறவையின் சிறை பணக்கார வீட்டு வராண்டாவில் பிஸ்கட்டிற்கு வாலாட்டும் காட்டு நாயின் சிறை வண்டு தீண்டிடாத மலரின் சிறை கணவனை இழந்த இளம் விதவையின் சிறை கால்கள் கட்டப்பட்ட கழுதையின் சிறை எதற்கும் ஆசைப்படாதது போல் எல்லாவற்றையும் இழக்கும் அம்மாக்களின் தியாகச் சிறை ஒவ்வொன்றுக்கும் பயனர் கையேடு காரணங்களோடு வகுக்கப்பட்ட தகுதிகளோடு வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட சிறைக்குள் செல்லலாம் மாதத் தவணை உண்டு ஆண்டுச் சந்தா செலுத்தி மாதமொரு சிறையை வாடகைக்குப் பெறலாம் சிறையிலிருந்து விடுபடவே முடியாதென்ற யதார்த்த வாழ்வியலின் புரிதலில் விரும்பிய துயர்வுறும் சிறையிலாவது அடையலாமே எனச் சொந்த சிறையை பரிமாற்றி வேறு சிறைக் கேட்டேன் அந்த சலுகை எக்காலத்துக்கும் இல்லையென்றதால் திரும்பி வந்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

தீண்டாத வரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தோழியிடம் சுற்றித் திரிந்த பேசிப் பேசி மலைத்த பொழுதுகளை அளவளாவினேன் நான் சம்மந்தப்பட்ட நினைவுகளின் பிம்பத்தை மட்டும் எளிதில் மறந்துவிடும் அவளிடம் மயிர்க்கால் கூச்செறியச் சிறந்த தருணமென அவள் புளங்காகிதமடைந்த பொக்கிஷமென நான் பொத்தி அடைகாக்கும் நினைவுச் சுளைகளை உயிர்த்தலுக்குப் போராடும் போன ஜென்மத்தின் சுகமான தொலைதல்களை ஒவ்வொன்றாக மீட்டேன் அவளைப் பொறுத்தவரையில் அவைப் பிரேதமாகி பிரயோஜனம் இல்லாமல் நினைவறையில் மக்கி வெகு காலமாகிவிட்டது மறந்திடாத நினைவுகளால் பூட்டப்பட்ட நிரந்தர கைதியாக உணர்ந்தேன் நிராதரவான நிலையைக் கண்டு கலங்கிய கண்களுடன் தோழி சொன்னாள் 'தீண்டாத வரை முட்கள் குத்துவதில்லை நினைவுகளைப் போல' கார்த்திக் பிரகாசம்...

பலவீனன்

அன்பைப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் திரண்டிடும் பலவீனன் நான் பலவீனனின் பற்றாக்குறையான மொழி மென்மை வார்த்தைகளானதென்பதால் திரவ மொழியும் தன் பங்கிற்கு உரையாடலை உயிர்ப்பிக்கிறது போலும் எதிரிலிருப்பவர்கள் அசூயையாய் உணரலாம் சிலர் உரையாடவே தயங்குகிறார்களென்றும் தெரியும் ருசிப் பண்டத்திற்கு அனிச்சையாய் நாவில் உமிழ்நீர் சுரப்பது போல என் காற்றில் எப்போதும் கண்ணீரின் உப்பு உலர்வதே இல்லை தாழ்மையாய் வேண்டுகிறேன் அன்பாய் என்னுடன் பேசாதீர்கள் திரும்பிச் செல்லும் போது உரையாடுவோர் பட்டியலில் நீங்கள் ஒருவரை இழக்காமல் தவிர்க்கலாம் நானோ ஒற்றைத் துளியின் உப்பின் அளவிற்கேனும் அவஸ்தைப்படுவதைக் கொஞ்சம் தவிர்க்க முடியலாம்  கார்த்திக் பிரகாசம்...