அன்பைப்
பேசிக் கொண்டிருக்கும் போதே
கண்களில் நீர் திரண்டிடும்
பலவீனன் நான்
பலவீனனின்
பற்றாக்குறையான மொழி
மென்மை வார்த்தைகளானதென்பதால்
திரவ மொழியும் தன் பங்கிற்கு
உரையாடலை உயிர்ப்பிக்கிறது
போலும்
எதிரிலிருப்பவர்கள்
அசூயையாய் உணரலாம்
சிலர் உரையாடவே
தயங்குகிறார்களென்றும் தெரியும்
ருசிப் பண்டத்திற்கு அனிச்சையாய்
நாவில் உமிழ்நீர் சுரப்பது போல
என் காற்றில் எப்போதும்
கண்ணீரின் உப்பு
உலர்வதே இல்லை
தாழ்மையாய் வேண்டுகிறேன்
அன்பாய் என்னுடன் பேசாதீர்கள்
திரும்பிச் செல்லும் போது
உரையாடுவோர் பட்டியலில்
நீங்கள் ஒருவரை இழக்காமல் தவிர்க்கலாம்
நானோ
ஒற்றைத் துளியின் உப்பின் அளவிற்கேனும்
அவஸ்தைப்படுவதைக் கொஞ்சம்
தவிர்க்க முடியலாம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment