உங்களுக்கு டீ யா..? காபி யா.? என்றுக் கேட்டு ஒரு கையில் வாங்கிக் கொடுத்து கொண்டே மறு கையில் டீ சிந்தியிருந்த மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தான் மணி..
அவன் அந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்து வருடம் நான்கு ஆயிருந்தது..
வந்த வாடிக்கையாளர்களைக் கவனிப்பது, டீ காபி எடுத்துக் கொடுப்பது, பால் வாங்கி வருவது, மேஜை துடைப்பது, கடையைச் சுத்தமாக பெருக்கி குப்பையை அள்ளுவது என்று காலையில் கடை திறந்தது முதல் இரவில் மூடும் வரை பம்பரமாக சுழல்வான்..
மணிக்கு நிறைய படித்துப் பெரிய கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. அவ்வாறு கலெக்டர் ஆனவுடன் முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனதில் அடிக்கடி சொல்லிக் கொள்வான்.. ஏனென்றால் அவனின் தந்தை ஒரு குடிக்காரர். குடியினால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் உரு தெரியாமல் சிதைந்துப் போகிறது என்பதை நேரடியாக அனுபவித்திருந்தான்..
குடியினால் குடும்பத்தை கைவிட்ட தந்தையையும், அதனால் கானலாகிப் போன தன் கனவுகளையும் நினைத்து அவன் வருந்தாத நாளே இல்லை.
அவன் வயதையொத்தப் பள்ளி மாணவர்கள், அவனது கண்களில் விழுந்து செல்லும் போதெல்லாம் அவன் மனக்கண்ணில் தூசி விழுந்து கண்ணீர் நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும்.. அப்படி பள்ளி மாணவர்கள் கடந்துச் செல்லும் போதெல்லாம் அந்தக் கொடூர சம்பவம் அவனைச் சுட்டெரிக்கும்..
வழக்கம் போல அன்றும் அவன் தந்தைக் குடித்துவிட்டு வந்தார்.. ஆனால் வழக்கத்தை விட அதிகமாக குடித்திருந்தார்.. "போட்டது பத்தல இன்னும் போடணும் காசு கொடு" என்று தன் மனைவியிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்..
ஆமா..! நிறைய சம்பாதிச்சுக் கொடுத்துட்ட.. நீ கேட்ட உடனே எடுத்துக் கொடுக்கறதுக்கு என்று பதில் கோபம் காட்டிக் கொண்டிருந்தார் மணியின் அம்மா.. ஒரு கட்டத்தில் போதையில் கோபம் முற்றிப் போன அவர், தன் மனைவியைப் பயங்கரமாக அடிக்க ஆரம்பித்தார். தடுக்கப் போன மணிக்கும் அடி விழுந்தது..
தந்தையின் கோபத்தில் பயந்துப் பதறிப் போன மணி, அடிக்க வேண்டாம் என்று அவரின் கால்களைப் பிடித்து கெஞ்சினான். உடனே அவர் நீ படிச்சு கிழிச்சது போதும் என்று அடுத்த நாளே அவனை இந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஒவ்வொரு நாளும் அவன் கூலி வாங்கிக் கொண்டு வரும் வரை வீட்டு வாசலலிலே காத்திருப்பார். வந்ததும் மொத்த பணத்தையும் பிடுங்கிக் கொண்டு குடிக்க போய்விடுவார்..
நன்றாக படித்தால் போதும் கலெக்டர் ஆகிவிடலாம் என்றிருந்தான் மணி. ஆனால் நீ படித்தது போதும் என்று டீக்கடையில் சேர்த்து விட்டார் அவன் தந்தை..
இன்று அவன் தந்தை உயிரோடு இல்லை.. அவன் கனவுகளுக்கு உணர்வுகள் இல்லை...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment