சிறு வயதில் வண்ணங்களின் மீது ஒருவித கவர்ச்சி இருந்தது.. வண்ணமயமான உடைகளை அணிந்து நண்பர்களின் முன் தன்னைத் தனிக்காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் என் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் வயதில் வளர வளர வண்ணங்களின் மீதான கவர்ச்சி காணாமல் போய் விட்டது. வண்ணங்களின் மீதான கவர்ச்சி காணாமல் போய்விட்டது என்று சொல்வதை விட கருப்பு நிறத்தின் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கருப்பு நிறம் பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அந்த நிறம் எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவு தான். மற்ற சாயங்கள் வேண்டாம், கருப்பு நிற சாயமே எனக்குப் போதும் என்று நான் தேர்தெடுத்துக் கொண்ட பிறகு, அந்த கருப்பு நிறத்திற்கும் பல சாயங்கள், காரணங்களாக மற்றவர்களால் பூசப்படுகிறது.
பெரியாரின் பகுத்தறிவில் ஆரம்பித்து காதல் தோல்வி வரை ஏகப்பட்ட சாயங்கள் கருப்பு நிறத்தின் மீது தெளிக்கப்படுகிறது..
கருப்பு நிறம் என்பது, அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எதையும் பிரதிபலிக்காத போது உண்டாகிறது..
அது போலத்தான் , எந்தவொரு தனிப்பட்ட கருத்தையோ அல்லது உணர்ச்சியையோ பிரதிபலிப்பதற்காக நான் கருப்பு நிறத்தை அணியவில்லை..
என்னைப் பொறுத்தவரையில் என் மனதும் என் உடலும் ஒருசேர, அணிவதற்குப் பொருத்தமான நிறமாக கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment