Skip to main content
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டான் பாலு. அன்று அவனுக்கு பிறந்தநாள். எழுந்ததில் இருந்து நண்பர்கள், குடும்ப உறவுகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்று ஒவ்வொருவராய் மாறிமாறி போன் செய்து கொண்டே இருந்தனர். உண்மையில் சொல்லப் போனால் அவன் சீக்கிரம் எழுந்ததற்கு காரணமே அந்த அழைப்புகள் தான்.

தொடர்ந்து வந்து கொண்டே இருந்த அழைப்புகள் அவனை சில மணி நேரத்திற்கு சிரித்த முகமாவே வைத்திருந்தது. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.. எப்பொழுதும் அலுவலகத்திற்கு கிளம்புவதை விட அன்று மிகுந்த உற்சாகமாக இருந்தான். பிறந்த நாளன்று எப்பொழுதுமே தன்னை மீண்டும் ஒரு குழந்தையாகப் பாவித்துக் கொள்வது பாலுவின் வழக்கம்.. அந்த நினைவே அந்த நாளை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் மாற்றி விடும் என்ற நம்பிக்கை..

போன் பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அறக்க பறக்க 9:10 ரயிலை பிடித்தான். மிதமான கூட்டம் இருந்ததால் வாசற்படியிலேயே பாதுகாப்பாக நின்றுக் கொண்டான்..

எதிர் வாசற்படியில் இவனைப் போலவே சில இளைஞர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.. அவர்கள் ஏதோவொரு விசயத்தை பற்றி சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் பாலு, அலுவலகத்தில் நண்பர்களுடன் கொண்டாடவிருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றி நினைத்து கொண்டான்.. அந்த நினைப்பு அவனை அடிக்கடி மணியைப் பார்க்க தூண்டிக் கொண்டே இருந்தது.

அடுத்த சில நிறுத்தங்களில் கூட்டம் இன்னும் சற்று அதிகரித்தது. பாலு நகர்ந்து உள்ளே சென்று விட்டான். அந்த இளைஞர்கள் அதே இடத்தில் தொங்கியபடியே வந்தனர். அங்கிருந்தவர்களில் சிலர் தொங்கிக் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.. அடுத்த நிறுத்தத்தில் கூட்டம் அதிகமானது. ஓடி வந்தே ஏறிய அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன், ரயில் வேகம் எடுக்கும் நேரத்தில் கால் இடறி கீழே விழுந்துவிட்டான்.

அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் கத்தினர். அதுவரை சிரித்த முகமாக இருந்த பாலுவின் முகம் பதறியது. இதயம் வேக வேகமாக துடித்தது. வியர்வை துளிகள் அனலாய்க் கொதித்தன. கைகள் நடுங்கின. கண்கள் கலங்கி வியர்வைத் துளியுடன் கலந்தன. பாலுவிற்கு ஒரே பதற்றமாய் இருந்தது.. பரவசமாய் இருக்கும் என்று அவன் நினைத்த நாள் கண் இமைக்கும் நேரத்தில் இவ்வளவு பதற்றமாய் மாறும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சந்தோசமெல்லாம் செத்து போய் சலனமே இல்லாமல் அலுவலகத்தை அடைந்தான் பாலு. நண்பர்கள் வாழ்த்தினர். கேக் வெட்டினான்.. ஆனால் மனம் எதிலுமே லயிக்கவில்லை. கண்ணை மூடினால் காலையில் ரயிலில் கண்ட காட்சியே கண்முன் வந்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கை முடிந்துவிடும் என்று எண்ணம் அவனது அச்சத்தை அதிகரித்தது. சந்தோசத்தை மட்டுமே அவன் முன்னிருத்திக் கொண்டு வந்த வாழ்க்கையில் திருப்தியான, மன நிறைவான செயல் ஒன்றுக்கூட செய்யவில்லையே என்ற நினைப்பு அவனது மனத்தை அதீதமாக ஆக்கிரமித்தது. அலுவலகத்தில் இருந்து அனைவரும் கிளம்பிவிட்டனர். பாலு என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தான்.

திடீரென தெளிவு பிறந்தவனாய் கணினியை ஆன் செய்தான். ஆன்லைனில் "இறந்தபின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தனது விருப்பத்தை பதிவு செய்தான். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதை மடித்து தனது பர்சில் வைத்துக் கொண்டான்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பி ரயில் நிலையத்தை அடைந்து, ரயில் வந்தவுடன் ஏறி ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டான். ரயில் வேகம் எடுத்தது.. ஜன்னலில் வந்து காற்று அவன் தலை முடியை ஆதரவாக கோதியது.. மனது இலகுவானது. எப்பொழுதும் இருந்திடாத ஒரு நிறைவு பாலுவின் மனதில் நிரந்தரமாக மையம் கொண்டது..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...