Skip to main content

Posts

Showing posts from 2023

அன்பெனும் பெருவெளி

மகள் பிறந்தால் என் காதலியின் பெயர்! மகன் என்றால் உந்தன் காதலனின் பெயர்! எதற்கு? போலச் செய்தலொன்றும் போர்க் குற்றமில்லை பரிசுத்தமான பேரன்பின் பரந்த வெளியில் விட்டுச் சென்ற நேசங்களை உரமாக்குவோம் அதே காதலன் / காதலியாகிட சாத்தியமில்லை அதனிலும் மேலான அன்பில் திளைப்பது சாத்தியம் அன்பு எல்லையற்றது அன்பு விதிகளற்றது அன்பின் தேவையானது இன்னொரு அன்பு மட்டுமே

மனப்பிறழ்வு

காலத்துக்கும் வருத்தும் தகுந்த சூழலில் செய்யாதவொன்று ஆயுசுக்கும் தொடர்ந்து நெருஞ்சி முள்ளாய் குத்துமொன்று சொல்லப்போனால் எங்கோ ஒரு மூலையில் ஆன்மாவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்குமொன்றுக்கு அன்பின் மனப்பிறழ்வு என்று பெயர்

முந்தைய நொடி வரை

மனம் கவரும் நிறம் என்றேன் “நிறமல்ல. உறைந்து போன சாயம்” என்றது ஆளை மயக்கும் நறுமணம் என்றேன் “நறுமணமல்ல. உதிர்ந்து உரமான இலைகளின் வியர்வை” என்றது நீ மலர் தானே என்றேன் “ஆம். நீ பறிப்பதற்கு முந்தைய நொடி வரை” என்றது

லீதல்

லீதல் ஆற்றின் நீரைப் பருகிவிட்டேன் இன்னும் சில நிமிடங்களில் முழு மறதியுண்டாகும் இந்த வாழ்வை மறந்திடுவேன் எவ்வித சலனமுமின்றி உலகமும் என்னை மறக்கும் சந்தேகமில்லை மறதிக்குப் பழக்கிவிட்டால் இறப்பொன்றும் அத்துணை துயரமுமில்லை மறத்தலையும் இறத்தலையும் மயிலிறகால் பிணைத்து வைத்திருக்கும் உன்னைத் தான் முதலில் மறதிக்குப் பழக்குவேன் இறத்தல் என்னைப் பழக்கட்டும்

மழையானேன்

பட்டாம்பூச்சியைப் போல்  படபடத்து திரிந்த  மழலை  அழுவதை பார்த்துவிட்டது  எத்தனையோ முறை அழுதிருக்கிறேன்  கனமான கண்ணீர்த்துளிகளை  இதுவரைக்கும்  யாருக்கும் காட்டியதில்லை  தனிமையில்  ஓ’வென கதறியழுவதை காட்டிலும்  நெடுந்தூரம் பயணித்து  பெருங்கூட்டத்திற்குள் தொலைந்து  மனதை அவிழ்த்தெறிந்து  மௌனமாய் அழுதிடுவேன்  மழலையின்  பிஞ்சு விரல்களில் பதிந்து  றெக்கை முளைத்த  ஓர் கண்ணீர்த் துளி  தூக்கிப் பறந்தது  தூரத் தேசத்தின் காட்டில் மழையானேன்

ஈடு

கடல் தந்த அன்பை மழையாய் பொழிகிறது வானம் விதை தந்த அன்பைப் பூவாய் பூக்கிறது செடி மண் தந்த அன்பைக் கனியாய் துளிர்க்கிறது மரம் ஈன்ற அன்பை இறையாய் வேண்டுகிறது மனம் எதுவொன்றையும் அன்பால் ஈடுகட்ட முடியும் ஆனால் அன்பை ? அன்பை பேரன்பால் ஈடுகட்டுவதே அறம்

பிரதி பிம்பம்

சீரற்ற வேகத்தில்  கோணல் மாணலான வரிசையில் தெளிவற்ற இலக்கைத் தேடி சலனமின்றி நகரும் சாதுவான கருப்பு எறும்பு கூட்டத்தினூடே திக்கற்று அலைவுறுகிறது ஆன்மாவின் பிரதி பிம்பம்
எல்லாமும் புரிந்திட முயன்று எளிதில் ஏமார்ந்துவிடும் சுதந்திரமான அன்புடன் ஆழமான புரிதலும் நுண்ணறிவும் கொண்ட உறவு உணர்ந்த தவறைக் கூச்சமில்லாமல் ஒப்புக் கொள்ளும் இயலாமையை அப்பட்டமாய் வெளிக்காட்டும் புகையும் நெஞ்சை முத்தமிட்டவாறே கம்பறு கத்தியால் கீறும்

கடலோடு

குழந்தைகள் நிறைந்த கடற்கரை  குழந்தையாகவே மாறிவிட்டது கடல் **** சமோசா சுண்டல் விற்பவனின்   வறுமை பருவத்தை எல்லோருக்குமாக  வாசிக்கிறது கடல் **** பல பாதங்கள் பதிந்த பின்னும் பழைய பாதங்களை மறப்பதில்லை கடல் **** ஊரை விட்டு ஓடி வந்தவனை வாழ்விற்கு அறிமுகப்படுத்துகிறது கடல் **** ஞாயிற்றுக் கிழமைகளில் உழைப்பாளர் சிலையை பொலிவுக்கூட்டி காட்டுகிறது கடல் **** கால் நனைக்காமல் போனவர்களின் வருகையைக் கணக்கில் வைப்பதில்லை கடல் **** கடலே கண்ணயர்ந்த பின்னும் உழைப்பாளர் சிலையின் முன் மாங்காய் கீற்றுகள் அரிந்து கெண்டிருக்கிறாள் பார்வை மங்கிய கிழவி

காணாமல் போன ஐந்து நாட்கள்

செவ்வாய் இரவு உறங்கச் சென்று ஞாயிறு மதியம் விழித்திருக்கிறேன் இடையில் பகல் வந்ததா இரவு விடிந்ததா  அறியேன் உண்ணாத உணவுக்கும் உளறல் பேச்சுக்கும் புரியாத மருத்துவ அறிக்கைகளும் விழுங்கிடாத  மில்லி கிராம் நரகமுமான    மாத்திரைகளே  சாட்சியங்கள்  நினைவூட்டவோ நினைவகற்றவோ நிலையுணர்த்தவோ  வலியுறுத்தவோ வற்புறுத்தவோ எதன் பொருட்டு வந்ததோ? பால்கனி தொட்டிச் செடியில் முளைத்த டேபிள் ரோஸ் இரண்டு சாம்பல்  ஒரு கருப்பு நிற குட்டியை  ஈன்ற தாய்ப் பூனை உக்கிரம் குறைந்த வெயில்  பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி  நன்றாகத் தான் இருந்திருக்கின்றன நான் இல்லாமல் இருந்த நாட்கள்  வீட்டின் முற்றத்தில் செத்துப் போன கரைப்பான் பூச்சி தலைக்குப்புற கிடக்கிறது

தேடிச் செல்

பறவையானது பஞ்சத்தின் நிமித்தம்  பொத்தி பொத்தி பாதுகாத்த தானியங்களை இருப்பு விகிதம் குறைவது புலனாகாதவாறு சாமர்த்தியமாகக்‌ களவாடும்  சிறு எறும்பு கூட்டம்‌ போல் சேமித்த நினைவுகள்  துலக்கமிழந்து   மெல்ல மெல்லக் காலாவதியாகின்றன வயிற்றுக் கோளாறால் அவதிப்படும்  வயோதிகன் பயன்படுத்திய  பழைய கழிவறையைப் போன்றதாகிவிட்ட நினைவுகளில்   நிகழ்பவையும்  சீராகப் பதியாமல்  குமைகின்றன  மூப்போ  வளர்ந்தெழும் பற்றற்ற போக்கோ  என்னைத் தொலைத்துவிட்டு  வேறெதையோ  தேடச் சொல்கிறது

புதிதாய் வேறொன்றுமில்லை

புதிதாய் ஒன்றுமில்லை வறண்டு காய்ந்த மனசில்   அடர்ந்த செழிப்பின் பால் தினந்தினம் பூக்கும் அன்பு மலர்கள்  மனம் நிறைந்து வழிந்திட ஒரு காதல் அரும்பியிருக்கிறது சுருங்கச் சொன்னால்  இலையைப் போல் சுய கனமற்று பெரு மரத்தின் பாரம் சுமக்கிறேன் இருத்தலில்  நம்பிக்கை பிறந்திருக்கிறது புதிதாய் வேறொன்றுமில்லை 
'நல்வரவு'  பலகையுடன் பளபளவென மின்னிடும் புதிதாய் கட்டப்பட்ட  தனியார் மருத்துவமனைக்கு நன்கு அலங்கரிக்கப்பட்ட நவீன இடுகாட்டின் சாயல்
கனவு கண்ட காதலனின் உருவத்திற்குள் கச்சிதமாகப் பொருத்தப் பார்க்கிறாள் நானோ  நிரந்தர உருவமற்றவன் அருவத்தின்‌ போதி நிழலில் தவம் கிடப்பவன்‌  அன்பைத் திரித்து  கருணையின் சிலுவையில் சாத்துகிறாள் தூக்கிச் சுமக்கவும் வலுவில்லை தூர எறியவும் மனமில்லை மெசியாவின்  காயங்களில் வழிகிறது  என் குருதி

அறம்

சிறுத்தையும் மானும் முத்தமிட்டு ஆரத் தழுவிடும் புகைப்படமொன்று அபூர்வ காட்சியெனப் பகிரப்பட்டிருந்தது சட்டெனக்  குடிநீர்த் தொட்டியில்  நரகலைக் கலந்த வன்மம் நினைவில் வருகிறது  மிருகமாய் இருத்தலில்  விடுபடும் மிருகம் மனிதனாய் இருக்க முடிந்திடாத மனிதனுக்குச் சொல்லும்  பேருண்மை அறம்

உன் வருகைக்காகவே

சமீபத்தில் ஒலிக்கிறது நமக்கான பிரார்த்தனை கீதம்  அருகில் வந்துவிட்டாய் போலும் தழும்புகளில் குருதி வழியக் காயங்கள் மீண்டும் மினுக்கின்றன  வீசும் தென்றலின் சொஸ்தப்படுத்தும் நேசம்  நாளங்களில் விரவுகிறது முகங்கள் பார்த்திடும் முன் பதித்த பூவிதழ் முத்தங்கள்  கோடையின் பனிக்கால ரோஜாவாகிட அடுத்த சந்திப்பு வரைக்குமான  புது காயங்களைக் கைவசம் வைத்திருப்பாயென்று அறிவேன் இந்த முறையாவது மறு சாத்தியத்திற்கான  சிறு எதிர்பார்ப்பைக் கூட  உண்டாக்கி சென்றுவிடாதே  மற்றபடி  உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்!
பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் உன் அளவுக்குப் பக்தியில்லை வணங்குவதில் நாட்டமுமில்லை உன்னுடன்  பேசச் சிரிக்க கைகோர்த்து நடக்க சம்மணகால் உரச மௌனமாய் அமர்ந்திருக்கச் சிகப்பு வெள்ளையில்   நடுவிரலால்  என் நெற்றியைத் தொடும் சிறு தீண்டலின் ஆத்ம சுகத்திற்காக வருவேன் காலம் நயவஞ்சகமானது   சாதுரியமான சூதாடியும்கூட நாம் ஒன்றாகச் செல்லாத ஒரு கோவிலில் உன் கடவுளைக் கண்டிருக்கிறாய் உனக்குத் தெரியுமா? என் தெய்வத்தை  நான் தொலைத்த இடமும்  அதுவே

தாடி

தாடியை மழித்துவிட்ட தகப்பனைச்  சட்டென அடையாளம் தெரியாமல்  அழுகிறாள் மகள்  தாடி என்பது வெறும் மயிரல்ல

நிதர்சனம்

தோல்விக்கென மனதைத் தொடர்ந்து பழக்குகிறேன் எதிர்பார்த்த தோல்வியில்  உண்மைக்கு அருகாமையில் பூத்த பூர்வ நித்தியத்தின் வாசம் நுகர காத்திருக்கிறது  அன்றை தாண்டி நாளடைவில் அழுகிப் போன ஓர் உடலுறுப்பாய் மாறிடும்  வெற்றியை‌ மாட்டிக் கொண்டு  என்ன செய்வதென தெரிவதில்லை  கால் மாட்டில் பூனையை போல் படுத்துறங்கும் தோல்வி பத்திரமாய் பாதம் கூசுகிறது வெற்றியின் போது பங்கு கறிக்கு மொய்ப்பவர்கள் தோல்வியின் போது  இழவு வீட்டிற்கு   தலையைக் காட்டிட வந்திடும் சம்பிரதாய முகங்களாய் கடக்கிறார்கள்  தோல்வி நிதர்சனம்  தோல்வி ஆறுதல் தோல்வி தன்னிலை உணர்தல் 
முதல் இளநீரைப் போல்  இரண்டாவது ருசிப்பதில்லை  என்றேன் இரண்டுமே‌ ருசிக்கும்  வேறுவேறு ருசியில் என்கிறாள்  அடுத்தடுத்து இரண்டு பெற்ற இளம் பேற்றுக்காரி

இரவு

நிலவொளியில் நிழல் குடிக்கும் நிலம் குனிந்த தலை நிமிரா‌த பார்வையற்ற  தெரு விளக்கு  மென்று துப்பிய சக்கையாய் வீதி மாடுகள் ஓய்வெடுக்கும் ஆடுகளம் பதுங்கு குழியை விட்டு பயமின்றி வெளிவரும் எலி தன் நிழலைக் கண்டு அச்சத்தில் குரைக்கும் நாய் நிறமற்ற கோடுகளாய் நெடிந்துயர்ந்த  கட்டடங்கள்  காலத்துக்கும் அசதியின்றி   பூதாகரமாய் நிற்கும் ஆலமரம் காற்றோடு கிசுகிசுக்கும் இலைகள்  கசக்கியெறிந்த காகிதமாய் மேகங்கள்  பகல் மென்று துப்பிய எச்சமாய்   யாருமற்ற  ஏதுமற்ற சிந்தையற்ற மரணத்தின் நிம்மதியைத் தற்காலிகமாய் சுமந்து வரும் இரவு 

தேவதையின் இரட்சிப்பு

நேற்று முதல் புதிதாய் சிரிக்கிறாய் என்கிறார்கள் மகள் மீட்டுத் தந்த எந்தன் பழைய‌ சிரிப்பது உண்டான ஒற்றை மலருக்காக ஒட்டு மொத்த மரமும்  உயிர்தாங்கி நிற்பது போல்  தேவதை இரட்சிப்பின் பொருட்டு  துவண்ட பருவமும்  தொலைத்த காலமும்  வேர்விட்டு துளிர்க்கிறது அவர்களுக்குத் தெரியாத இன்னொரு ரகசியம்   தாயின் கருவறையிலிருந்து மகளின் கரங்களில் மறுமுறை பிரசவித்திருக்கிறேன்

நேற்றில் வருவாயா?

பூட்டிய அறைக்குள் அமர்ந்திருக்கிறேன் வெளியேறும் பெரும் மூச்சு  அறையெங்கும் புழுக்கமாய் நிறைகிறது சாவியிடும் துளைகளின் வழியே  பிரபஞ்ச பெருவெளியின் ஒளிக் கீற்று மோனமாய் கவிழ்கிறது பகலில் இருட்டையும் இரவானால் ஒரு சொட்டு வெளிச்சத்தையும் தேடியலைகிறது பேய்மனம்  சீக்கிரமாய்  இன்று சென்று நேற்றில் வருவாயா?
கண்ணீரின் பொருட்டு  நீ ள் கி ற து ஓர்‌ இனிய‌ சந்திப்பு
தொடர்ந்து தோற்கிறேன் கருணையே இல்லாமல் தோற்கடிக்கப்படுகிறேன் எனச் சொல்வது இன்னும் பொருத்தம்  துளிர்க்கும் கண்ணீரை மறைத்துக் கொண்டு வலியறியாததாய் நடிக்கும் ரகசியங்களின் ஊற்றான அந்த மனத்தை இதுவரையில் அவதானிக்க முடிந்ததே இல்லை ஒவ்வொரு தோல்வியையும்  வயிறார உண்டு புசிக்கும் வளர்ப்பு மிருகமது தொலைவோ அருகாமையோ  தொடர் உரையாடலின் சிறு இடைவெளியில் நால்விழிகளும் மோதி வார்த்தைகள் மோனமாகும் தருணம்  மௌனமே வெட்கும் அந்த மனமோ ஆழ்கடலைக் கடக்க முயலும் ஓடமெனச் சிறு புன்னகையோடு தவழ்ந்திடும் ஆசை ஆசையாய் ஓடிவந்து கன்னத்தில் அறையும் பிரிந்து போன தூரங்களை நிரப்பக் காற்றில் முத்தங்களைப் பறக்கவிடும் புதிரிலும் புதிரான அது விலகியதுமில்லை விரும்பி அணைத்ததுமில்லை தாயின் சேலைக்குள் ஒளிந்து தாயையே கண்டுபிடிக்கச் சொல்லும்  மழலையிடம்  ஜெயிப்பதில் என்ன இருக்கிறது பிரபஞ்சத்தின் பேரன்பால் தலையைக் கோதி வருடிடும் அதன் காலடியில் வீழ்ந்து கிடக்கும்  பரம சுகத்தைக் காட்டிலும் அவதானிக்க இயலாத அந்த மனம் தந்திடும் தோல்விகளில் பொதிந்திருக்கிறது என் ஜென்மத்துக்குமான அத்துணை  தாகமும் உயிர்ப்பும்...

அபயம்

ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல்  ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில்  தயவுசெய்து  தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும்  நசுக்கிய பாதங்களை  மறுபடியும் வந்து நக்காது என்னைப் போல் 

அயற்சி

சின்ன சின்ன  பாராட்டிற்காக ஏங்கிப் புழுங்கும்  அற்பமான மனதின்   தொடர் அயற்சி தாளாமல்  எடுத்த முடிவே தற்கொலை  சாவதற்கு முன் கடைசியாக நீண்டதொரு கடிதம் எழுதினேன்   தற்கொலை கடிதம்  ஆசுவாசமாய் இருந்தது வாசித்து முடித்ததும்  "என்னவொரு அழகான கையெழுத்து" என்று யாரேனும் பாராட்டுவார்கள் தானே