மாலை 5 மணி.. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். நிலையத்தில் இலவச Wi Fi என்பதால் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு முகபுத்தகத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன்.
திடிரென 60 வயதைக் கடந்த பெரியவர் ஒருவர் எதிரே வந்து ஏதோ கேட்டார். ஹெட்செட் காதை வெளியுலகத்துக்கு செவிடாக்கியிருந்ததால் எதுவும் கேட்கவில்லை. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு ஹெட்செட்டை ஒருபக்கமாக கழட்டிவிட்டு, என்ன ஐயா..? சொல்லுங்க என்றேன்.
"நான் சொல்ற நம்பருக்கு ஒரு நிமிஷம் போன் போட்டு தறீங்களா" என்றார். அவர் கையில்போன் இல்லை.
ம்ம்ம். சொல்லுங்க.. என்றேன்
நம்பர் சொன்னார். முதல் முறை போகவில்லை. மீண்டுமொரு முறை முயற்சித்தப் போது இணைப்பு கிடைத்தது. போனை அவர் கையில் கொடுத்தேன்.
டேய்.! தாத்தா பேசுறேன் டா. நான் மதுரைக்கு வந்துட்டேன். இங்க இருந்து சென்னைப் போயிட்டு அப்டியே பாண்டிச்சேரி போயிடரேன். ஆயா'வ நல்லாபடியா பாத்துக்கோ டா. பாவமடா அவ. அவகிட்ட சண்ட போடதடா. ஹலோ..! ஹலோ..! ஹலோ..! இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..
போனை என் கையில் கொடுத்த போது அவரின் கண்கள் தெம்பில்லாமல் கலங்கி இருந்தன.. தாங்ஸ் தம்பி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அந்த மனிதர் யாரென்றுத் தெரியவில்லை. அவரின் உண்மையானச் சூழ்நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் வாழ்க்கையின் ஏதோ ஒரு இக்கட்டானச் சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோவொரு இயலாமை அவரைத் தனிமையில் தள்ளி தாழிட்டிருக்கிறது.
ஏனோ மனம் ஒருவித குற்ற உணர்ச்சியிலிருந்து இயல்பு நிலைக்கு வர சில மணித்துளிகளானது.
தினசரி வாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ மனிதர்களை, மிக எளிதாக காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கடந்து விடுகிறோம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment