இந்தப் பெயரைக் கேட்டாலே மனதிற்குள் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறதே. ஏன்.? இந்த மனுசனின் பெயரைத் திரையில் பார்த்தாலே கண்கள் கலங்குகின்றதே. ஏன்.? யாரோ இவரைத் திட்டினால் என் இரத்த உறவைத் திட்டியது போல் கோபம் பீறீடுகிறதே. ஏன்.? எந்தவித பூர்வஜென்ம சம்மந்தமும் இல்லாமல் இந்த மனிதன் எனக்குள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறாரே. ஏன்.? என் தினசரி வாழ்க்கையில் இந்தப் படிக்காதவனின் ஆளுமை அடர்ந்து நிற்கிறதே. ஏன்.?
இந்தக் கேள்விகளைப் பலமுறை எனக்குள் கேட்டுக் கொண்டதுண்டு.. ஆனால் இதற்கான பதில்கள் மனத்தில் எதிரொலித்ததில்லை.
ஆனால் நடிகன் என்பதைத் தாண்டி இந்த மனிதன் ஏதோ ஒரு வகையில் அல்ல பல வகைகளில் என் வாழ்க்கையை வெகுவாக பக்குவப்படுத்தி இருக்கிறார். இன்னும் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த மனிதனைப் பற்றி நினைத்தால் எத்தணை ஆச்சரியங்கள்.
ஆட்சியும் அதிகாரமும் தேடி வந்தப் போதும் அதை ஒருபோதும் நாடி செல்லாத இந்த மனிதனை என்னவென்று சொல்வது.. புகழின் உச்சாணிக் கொம்பில் நிற்கும்போதும் வெறிக் கொண்டு ஆடாமல் புத்தர் போல எப்படி இந்த மனிதனால் மௌனமாகப் புன்னகைக்க முடிகின்றது.
இவரை வைத்து வியாபாரம் செய்து பெரும்பணம் பார்த்தவர்களே, இழிவாகப் பேசும் போதும் "எல்லாம் சாயா" என்று எப்படி எளிதாகக் கடக்க முடிகிறது.
இந்த மனிதனை விமர்சனம் செய்பவர்கள் கூட இவரின் படம் வெளியாகும் நாள் , டிக்கெட்டிற்காகத் திரையரங்கத்தின் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்களே.. என்ன செய்ய..!
ரஜினி'யானபின்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்டை இழக்காமல் இருக்க முடிகிறதே... என்ன சொல்ல..!
ஒவ்வொரு முறை சோர்ந்து போய் அமரும்போது இந்த மனிதன் பேசிய வார்த்தைகள் இதுவரைக் கண்டிராத புத்துணர்வைக் கொடுக்கின்றன.
மகிழ்ச்சியில் கேட்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாக்கிறது. ஆன்மிகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்தவன், "படைப்பு இருந்தால் படைப்பாளி இருந்து தான் ஆகணும். படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை" என்று இந்த மனிதன் சொன்னதைக் கேட்டதும் மனம் மாறி நின்றது. அதற்காகக் கடவுளை வெளியில் தேடி அலைய வேண்டாம் அது நம் உள்ளுணர்வு நமக்குள் தேடி அலைய வேண்டியது என்று சொன்னது ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது
இவர் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகள் யதார்த்தத்தை உணர வைக்கின்றன. இவரைப் பார்த்து புகழ் என்ற மாய போதையை புறந்தள்ள முடிகிறது. இந்த மனிதன் பேசிய வசனங்கள் மட்டும் பல சூழ்நிலைகளுக்கு மருந்தாகின்றன.
ராகவேந்திரர் 'ஆயினும், ராணா'வாயினும் ரஜினி சித்தர் தான் நிறைந்திருக்கிறார்.
தலைவா.. உங்கள் வழி தனி வழி. என் வழி என்றும் உங்கள் வழியில்..
மாதா பிதா குரு ரஜினிகாந்த்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment