ஒரே நேரத்தில் குறிவைத்து எய்யப்பட்ட ஆயிரமாயிரம் அம்புகளைப் போல உடலைக் குத்தித் துளைக்கின்றன மழைத்துளிகள். பகலெது இரவெது என்ற தகவல் அறியவிடாமல் பெய்யென பெய்யும் பேய் மழை. உடல் நடுங்குகிறது. "இருந்தாலும் இந்த மழை ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது". மழை தந்த ஈரத்தால் கனமான தலைமுடியை உதறிக் கொண்டே பேருந்தில் ஏறினேன். எப்பொழும் போல ஓட்டுநரின் பக்கவாட்டில் இருக்கும் முன் இருக்கைக்குச் சென்றேன். ஜன்னல் இருக்கை ஆளில்லாமல் தனித்திருந்தது. மழையில் நனைந்திருந்தது. மழைக்கால ஜன்னல் இருக்கையை போல என்றோவொருநாள் நானும் எல்லோராலும் கைவிடப்படுவேனோ.? ஆனால் அது என்னமோ தெரியவில்லை சாலையை மறைக்காத அந்த முன் இருக்கையில் அமரும் போது மனதிற்குள் ராணியைப் போன்ற ஓர் உள்ளுணர்வு. ஜன்னலில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள் உடலையும் உள்ளாடையையும் நனைக்கையில் உலராத ஈரம் உயிரின் மூலத்தைத் தொட்டுச் செல்கிறது. அணிந்திருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த வட்ட மழைத்துளிகளின் வழியே பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்த அந்த வயதான உருவத்தைப் பார்த்தேன்.வளைந்த கைத்தடியைப் போலிருந்தது. குறுகிய உடல்.குளிருக்கு நடுங்கும் கோழிக் ...