உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்துக் கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய பண்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை; நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம். ஒரு டைரியை மேஜைமேல் வைத்தான். பேனாவை என் கையில் கொடுத்து "எழுதுங்கள்" என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன எழுத" என்று கேட்டேன். " 'என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு' என்று எழுதுங்கள்"