"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!" பியாவின் அந்த மழலைக் குரல் ராகவியின் காதுகளில் ஒலித்திடாத நாளில்லை. மலையாள மொழி ஆனந்தப் பூரிப்படையும் அந்த மழலையின் வாய்மொழியில், தனது அத்துனை துயரங்களையும் தூக்கியெறியும் தைரியம் வந்துவிடும் அவளுக்கு. அந்த மழலையின் முகத்தைக் கண்டாலே ராகவியின் மனம் எடையிழந்து லேசாகிப் போகும். முடங்கிப் போன வாழ்க்கையை மீட்டுத் தர வந்த தேவனின் தூதாகவே பியாவை நினைத்தாள் ராகவி. புயல் போல, எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு; கசப்புகளையும் காயங்களையும் மட்டும் நிறைய தந்து; தடம் தெரியாமல் சென்றுவிட்ட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ராகவிக்கு அமைந்த ஒரேயொரு ஆறுதல் தன்னுடைய அண்ணன் மகள் பியா மட்டும் தான். சிம்பா, அதுவொரு அழகிய சிங்க பொம்மை. ராகவி பியாவுக்கு வாங்கித் தந்தது. பியாவிற்கு அந்த பொம்மை என்றால் உயிர். தூங்குவது, குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என நாள் விடிந்தது முதல் பொழுது மடியும் வரை எல்லாமே சிம்பாவோடு தான். பெரிதும் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை சிறிதும் எதிர்பாராத விதமாக முடிந்துவிட, அமெரிக்கா சென்றுவ...