Skip to main content
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, இவனுக்கு புதன்கிழமை என்றாலே நெஞ்சம் படபடக்க துவங்கி விடும்... வயிறு கலக்க ஆரம்பித்து விடும்... புதன் கிழமை வந்தாலே அஞ்சி நடுங்கி, கடைசியில் ஒடுங்கியேப் போய்விடுவான்...

காரணம் அப்போது புதன் கிழமை தோறும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "கல்வி ஆலோசனை நேரம்" என்ற ஒரு மணி நேர நிகழ்ச்சி...!

அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக, இவன் புதன் கிழமைகளையே வெறுத்துக் கொண்டிருந்தான்... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இவன் அப்பா எங்கிருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.. அதை இப்படியும் சொல்லலாம்.. இவனும் எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்தாக வேண்டும்...

அடுத்த ஒரு மணி நேரம், அந்தப் பிரபல ஆலோசகர் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்... நடுவே நடுவே, "ஆவேசமாக 1000 மார்க்குகெல்லாம் எந்த காலேஜ்'ம் கிடைக்காது... 190 கட் ஆப் இல்லனா கவுன்சலிங் போறதே வேஸ்ட்... அது இது" ன்னு நேரலையிலேயே காகிதங்களைத் தூக்கி எறிவார்....

அந்த ஆலோசகர் பேசப் பேச, அதன் விளைவுகள் நேரடியாக வீட்டில் அரேங்கேறும்... இவன் அப்பா, அந்த ஆலோசகரையே மிஞ்சி விடுவார்... பாத்தியா.. 1100 மார்க் எடுக்கணும்...! கேட்டியா... 190 க்கு மேல கட் ஆப் எடுக்கணும்...! புரிஞ்சதான்னு ஆலோசனையும் அறிவுரையும் கோபமும் எரிந்து விழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்... ஒரு வாரம் மட்டுமில்லை.. ஒவ்வொரு வாரமும் இதே தான் நடக்கும்...

ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சி முடியும் தருணத்தில், இவன் இன்று சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்து கலங்கிய கண்களை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் மாடிக்குச் சென்று விடுவான்... எல்லாரும் உறங்கியப் பிறகு தான் கீழே வருவான்...

இத்தனைக்கும் இவன் ஓரளவுக்குப் படிக்கக் கூடியவன் தான்.. ஆனாலும் அப்பாவின் இந்த செயல்களால் படிப்பதில் எப்பவுமே வெறுப்படைந்து இருப்பான்...

ஒருவழியாக இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டான்... அப்பாவிற்கு அளவிட முடியாத மகிழ்ச்சி... இவனுக்கு அதைவிட பயங்கர மகிழ்ச்சி ...அந்த மகிழ்ச்சி இனிமேல் அந்த நிகழ்ச்சியிருந்து விடுதலை என்பதற்காக மட்டும் தான்...

அப்பாவின் இந்தச் செயல்களினால்தான் இவன் மதிப்பெண் அதிகரித்திருந்தது... அதில் சந்தேகம் ஏதும் இல்லை.. ஆனால் இவனுக்கு மதிப்பெண்ணின் மீதான மதிப்பு குறைந்திருந்தது... ஏற்கனவே இவனுக்கும் அப்பாவிற்கும் இடையே பல்லிலுத்துக் கொண்டிருந்த இடைவெளி, இதனால் பாய்ப் போட்டு நன்றாக கால்களை விரித்துப் படுத்துக் கொண்டது...

அந்த நாட்கள், இவன் வாழ்க்கையில் வெறுக்கப்பட்ட நாட்கள் பட்டியலில் என்றுமே இருக்கின்றன...

இப்பொழுதும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பார்க்கும் போது, இவன் இழந்த சந்தோசங்கள், உண்ண மறுத்த இரவு உணவு, கண்ணீர் தந்து தூங்க வைத்த கண்கள் என அந்த நாட்களின் நரகத் தன்மையை ஒரு நிமிடம் மின்னல் போல காட்டிவிட்டுச் செல்லும்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...