Skip to main content
மற்றவர்களைப் போல் சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து கண்டும் காணாமல் மணியால் இருக்க முடியவில்லை.. அவனுக்கு எப்போதுமே சமூகத்தின் மீது பரிதாபமும், தன் மீது ஒரு கோபமும் இருந்து கொண்டே இருந்தன...

தவறு/தகாதது என்று தெரிந்தே செய்யும் சமூகத்தின் மீது பரிதாபமும், தவறு என்று தெரிந்தும் அதை திருத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபமும் தான் அது... அந்த பரிதாப உணர்வும், கோப உணர்ச்சியும் அவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன..

அதுவும் காலையில் பத்து மணிக்கு, மதுபான கடையின் வாசலில் நின்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் நாட்டின் துரோகிகளாகவும், அரசின் தியாகிகளாகவும் கருதினான்... குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப் பார்க்கும் போது, அவன் குழந்தை எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறதோ என்று எண்ணி அஞ்சுவான்.. காலை வெயிலில் மது வாங்க வரிசையில் நிற்பவனைக் கண்டால், அவன் தாய் தள்ளாத வயதிலும் ரேஷன் கடையில் அரிசி வாங்க, முழங்கால் வலியில் தள்ளாடுவதாய் நினைத்து கண்ணீர் சிந்துவான்... மது அருந்திய ஒருவன் சாலையில் போதையில் தூங்குவதைப் பார்த்தால், அவன் குடும்பம் அங்கு பட்டினியில் தூங்காமல் தவிப்பதாய் நினைத்து இவன் தவிப்பான்...

மணிக்கு கிரக, ஜாதகங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் "மது தான் நாட்டை நாசமாக்கும் சனி" என்று உறுதியாக நம்பினான்... ஆனால் தன்னால் எதிர்த்து போராடும் போராளியாகவும் இருக்க முடியாமல், ஏத்துகிட்டு வாழும் ஏமாளியாகவும் இருக்க முடியாமல், நடுவில் கோபத்துடன் கூடிவாழும் கோமாளியாக இருப்பதை நினைத்து நடுராத்திரியிலும் எழுந்து கண்ணீர் விடுவான்...

அன்றும் தனது வழக்கமான மனப் புலம்பல்களுடன் உறங்கச் சென்றான்.... குடித்து குடித்து ஊரே அழிந்து சுடுகாடாய் இருப்பது போல் கனவு வந்தது...

மணி பயந்துப் போய் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தான்.. அதன் பின் அவனுக்குக் கொஞ்ச நஞ்சத் தூக்கமும் இல்லாமல் போயிற்று...

காலையில் வழக்கம் போல எழுந்து வேலைக்குச் சென்றான்.. அதிசயமாக மதுபானக் கடையில் யாருமே இல்லை... ஆச்சரியத்தில் சந்தோஷம் அடைந்தான்... அருகில் போய் பார்த்த அவனுக்கு பேரின்பமாய் இருந்தது... அரசு அதிகாரிகள் அந்த மதுபானக் கடையை காலி செய்து கொண்டிருந்தனர்...

அந்த அதிகாரி,கடை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக அங்கிருந்த சில "குடி"மகன்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்... நிரந்தரமாக கடை அகற்றப்பட்டதாக எண்ணிய அவனின் சந்தோசத்தில் கல் விழுந்தது... இருந்தாலும் இப்போதைக்குக் கண் முன்னே இருந்து அகற்றபட்டதே என்று எண்ணி நிம்மதி பெருமுச்சு விட்டுவிட்டு அலுவலகத்திற்கு நடந்தான்...

எப்போதும் அவன் அந்த சுடுகாட்டின் வழியாகத் தான் நடந்து செல்வான்.. அது தான் அலுவலகத்திற்குப் பக்கம் அவனுக்கு... அன்றும் அதே வழியாக சந்தோசமாக நடத்து கொண்டிருந்தான்...

சிறிது தூரம் தான் சென்றிருப்பான்... திடிரென்று பயந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. புதிதாக மதுபானக் கடை சுடுகாட்டின் வாசற் பகுதியில் திறக்கப்பட்டிருந்தது... அங்கேயும் மது வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது...

அதை விட அதிர்ச்சியாக, மதுவை வாங்கியவர்கள் சுடுகட்டிலுள்ள காலி இடங்களில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தனர்...

"கனவு பலித்து விடுமோ" அச்சத்தில் பதறிப் போய் நின்றான் மணி...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...