காலையில் இருந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. வெகுநாட்களுக்குப் பிறகு வாசலில் பெரிய ரங்கோலி கோலமாகப் போட்டு, அமர்க்களமாக கலர் பொடிகள் தூவி மத்தியில் சாணியை பிள்ளையாராக மாற்றி அமர வைத்திருந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தை முழுவதும் துவட்டாமல் துண்டுடன் சேர்த்துக் கூந்தலைச் சுற்றிக் கொண்டை போட்டிருந்தவள்,இத்தனை நாளாய் ஒளித்து வைத்திருந்த ஏதோவொரு அழகை இன்று அனிச்சையாக அள்ளித் தெளித்தாள். நிரந்தரமாக பதிந்துவிட்ட அந்தக் கருவளையத்தை மறைத்துக் காட்ட பெரும் சிரமப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. பெரும் வெற்றிக் கிட்டிருக்கிறது. மஞ்சள் பூசிய முகத்தில் முன்னெப்போதும் கண்டிராத குதூகலமும், பிரகாசமும் பொங்கி வழிந்தன. தேங்காய் சில்லுகள் மிதக்கும் வெண்டக்காய் புளிக் குழம்பு, முட்டைகோஸ் கூட்டு, அவரைக்காய் பொரியல், கத்திரிக்கா முறங்கா சாம்பார், ரசம், அப்பளம் என சமையற்கட்டில் இருந்து மிதந்து வந்த வாசம் வீடு முழுவதும் பரவி தூசி துரும்பென யாவற்றுக்கும் வந்தனம் சொல்லியது. "இன்னைக்கு ஏதாவது விஷேசமா மா" 'இல்லடா கிருஷ்ணா' "அமாவாசை பௌர்ணமி ஏதாவது" 'அதெல்லாம் ஒண்ணுமில்லடா...