Skip to main content

Posts

Showing posts from 2022

யானை பொம்மை

அந்த  சிவப்பு கலர் யானை பொம்மை‌ தான் உனைக் குதூகலித்து உன் அழுகையை நிறுத்தியது எனக்குத் தெரியும் மற்றவர்கள் பெருமை பீற்றுகிறார்கள் நானே அழுகையை நிறுத்தினேன் என்னிடம் வந்ததும் அழுகை நின்றது எந்தக் குழந்தையும் என்னிடம்‌ வந்தால் அழுகையை முழுங்கிவிடும் மகளே! மன்னித்துவிடு பாவம் அவர்கள் குழந்தைகள்!

வழிப்போக்கன்

சத்திரத்தில்  தோதான ஓரமாய் பார்த்து உடலை சாய்த்தான்  எட்டி விடும் தூரத்தில் தான் இருந்தது  நட்சத்திரம் நிலவு உறக்கம் 

அழியாத முத்தம்

ஏதோ  அவசரத்தில்  மகளுக்கு முத்தமிட மறந்து  அலுவலகம் சென்றுவிட்டேன்  நாள் முழுவதும் காற்றில் எதையோ துழாவிக் கொண்டிருந்ததாக‌  இணைவி சொன்னாள் வீடு திரும்பியதும் கரங்களில் ஏந்தி கன்னத்தில் அழுந்த பதித்தேன்  எக்காலத்திற்கும் அழியாத  ஓர் முத்தம்

இடைவெளி

இணைபிரியாத எங்களுக்கிடையில் தவிர்க்க முடியாத ஓர் இடைவெளி கட்டிலின்  ஒரு புறத்திற்கும் மற்றொரு புறத்திற்குமான ஒரு மைல் தூரம் சுருங்கச் சொன்னால் ஓர் உயிரின்  தூரம் மத்தியில்  உறங்குகிறாள் மகள் 

என் கதை

அமிர்தம் தோற்கும் சொற்சுவையில் ஓலைக் குடிசையில் ஒழுகும் மழை நீராய் பலவித உணர்ச்சிகளும் சீரான‌ பாங்கில் சொட்டச் சொட்ட உடல் நரம்புகளைக் கிளர்த்தி  மனதை மிருக‌ வேட்டையாடும் மெல்லிய கித்தார் கம்பியின் அதிர்வலை போல்  கேட்ட மாத்திரத்தில் கண்ணீரைக் கீறும் உப்பு பரல் சொற்களைச் சேர்த்து உருக உருக ஓர் கதையைத் தயாரித்துவிட்டேன் கதை சொல்லும் முன்னேற்பாட்டின் தீவிர முனைப்பில் மற்றவர் கதையைக் கேட்கவில்லை அடுத்தது என் முறை வாசிக்கிறேன் சிற்சிறு முணுமுணுப்புகளின்  பெருங்கூச்சலில் கூர் பார்வை முகங்களின் அனாதரவான  கிழட்டுச் செவிகளில் மழையில் நனைந்த காகிதமாய் நசநசக்கிறது  என் கதை 

அழுகல்

பேருந்திலிருந்து இறங்குவதற்குள் செல் போனில் சேமித்துள்ள அனைத்து எண்களால் ஆகிய முகங்களிடமும் கேட்டுவிட்டேன் கடனாய் ஆயிரம் ரூபாய் இனி துழாவுவதற்கு எண்கள் இல்லை முகங்களும் இல்லை நெரிசலில் மூச்சு முட்ட ஊரைச் சுற்றிக் காட்டிய பேருந்தும் விருப்பமில்லா புழுக்கத்தில் கிடத்திவிட்டுக் கடந்துவிட்டது  கடன் போர்த்திய இருளுடன் மெல்லக் கவிகிறது இரவு சிறுக சிறுக அழுகிக்கொண்டிருக்கிறது நாளை

நெட்.........டி

உறக்கத்தில் பிஞ்சு கரங்களை  நீட்டி மடக்கி கால்களை  முடுக்கி நெட்டி முறிக்கிறாள் மகள் நிமிர்ந்த வானில்  நட்சத்திரங்கள் அரண்டு புரண்டு கடலில் வீழ்கின்றன எழுந்து நின்ற கடல்  அருவியாய் கொட்ட திமிலங்கள் காற்றில் பறக்கின்றன உருண்டு வரும் திமிலங்களை உருட்டி விளையாடும் பூனைகள்  நெளிந்த நிலவு அறுங்கோணமாகி    வாலறுந்த குரங்காய் திகைத்து  அந்தரத்தில் மிதக்கிறது  பிடிப்பின்றி அதுதது  அதனதன் இடத்தில் திகைத்து நிற்க இரவென்பதை மறந்து  இருள் உறியும் நேரம் மலர்ந்த முகத்துடன்  மறுபடியும் உறங்கிவிட்டாள் மகள் நீள்கிறது இரவு

நிஜக்கதை

காலம் தின்று மிச்சமான தளர்ந்த உடலில்  சிதையாத ஓர் சதை துணுக்கென மினுங்கிடும் மூப்பின் கரம் கோர்த்து  நிஜக்கதையைத் தொடங்குகின்றன யாவும்

சிராய்ப்பு

மறுத்துப் பேசத்‌ தெரியாதவன் காலங்காலமாக அவர்கள் கேட்டதெல்லாம்  அவன் பேச நினைத்தது அல்ல ஆற்றின் நீரோட்டத்தில் உருண்டு புரண்டு  முனை மழுங்கிய கூழாங்கற்கள் அவை பத்திரமாகப்  புதைந்து கிடக்கும் அதன் கூரிய சிராய்ப்புகளின் மேலே தான் விடம் தடவிய கத்தியைச் செருகிப் புன்னகைக்கச் சொல்லி இறைஞ்சும் முகத்துடன் அன்பு பாராட்ட வருகிறார்கள் வழியும் புன்னகையில் வடியும் குருதியின் வீச்சத்தை அவர்கள் அறியப் போவதே இல்லை எனும் சுட்டெரிக்கும் நிதர்சனமே அவன் புண்ணில் செருகிய நிரந்தர வாள் 

சுலபமல்ல

மிகச் சாதாரணமாகக் கடக்கும்  அறிமுகமற்றவரின் மரணத்தைப் போல் சுலபமில்லை உறக்கமற்ற ஓர் இரவைக் கடப்பது

அதே குரல்

அப்பாவின் வயதிருக்கும் அவருக்கு "சார் சேர்வா கலக்கி" இலையில் வைத்தார் ஒடுங்கிய ஸ்தாயில் ஒலிக்கும்‌  அப்பாவின் அதே குரல்  சட்டென்று பேய் மழையில் ஒதுங்கச் சிறு கூடாரம் தேடி அலையும் தெரு நாயைப் போல்  அப்பாவின் நினைவுகளில் நொண்டியது மனம் வீட்டிற்குச் சென்றதும் உறங்கிக் கொண்டிருந்த மகனை இறுகக் கட்டிக் கொண்டேன் சிறிது ஆறுதலாக இருந்தது

தொலைக்கவில்லை

எதையும் மறக்கவில்லையோ? நினைப்பதில்லை என்பது உறுதி மறக்கவில்லையா எனக் கேட்டால் தெரியவில்லை ஒரு வேளை அது சரியாகக் கூட இருக்கலாம் இன்னும் தொலைத்திடாமல்தான் இருக்கிறேன்  என்னை

துணை

கடைசி பேருந்தும் கைவிட்டுப் போன நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை வந்து சேர்ந்தது எல்லாமும் மறந்தது  விட்டுச் செல்வதைப் போலவே ஏந்திக் கொள்ளவும் ஏதோ ஒன்று இருக்கிறது 

விருது

உயரியதெனக் கருதப்படும்  ஓர் விருது  கிடைத்திருக்கிறது இழைத்த  எண்ணிலடங்கா குற்றங்களின் நிர்வாணத்தை இனி  நிம்மதியாக மூடி மறைத்துக் கொள்வேன்

நன்றியா? சாபமா?

சிறகொடிந்து மழைச் சாலையின் ஈரத்தில் வீழ்ந்து கிடந்த ஓர் தட்டானை மிதித்து விட்டேன் அதன்  விழிகளில் வழிந்தது நன்றியா? சாபமா?

சங்கதி

நீங்கள் நினைக்கிறீர்கள் காறி உமிழும்  கண்டதையும்  அன்பென நான் சொல்கிறேன் சகதியில் சிக்கிய பழைய சங்கதிகள் அவை

தேவதை

தூக்கத்தில்  சிரிக்கும் குழந்தையைக் கனவில் தேவதைகளோடு பேசுகிறாள்  என்கிறாள் பாட்டி  எனக்கென்னவோ யாரோ  தேவதையிடம் பேசுவது  போலிருக்கிறது

ஆழம்

ஆழமானவொன்றைத் தேடி  அருகிலிருந்ததைத் தொலைத்துவிட்டேன்  மனம் தவிர்த்து யாவும் அழுகி சீழ் வடியும் கட்டத்தில்  காலம் கனிந்திருக்கிறது அருகிலிருந்ததன்  ஆழம் அறிய

அவர்களே

அழுது தீர்த்துவிட்டேன் சொற்கள் தேயுமளவு புலம்பிவிட்டேன் மனமின்னும் மீளவில்லை  மரணப் படுக்கையில் உயிரைச் சீராக வெளியேற்றும் சுகமற்ற ஜீவனாய்  பேயறைந்து நின்றிருந்தேன் ஆறுதல் சொல்லவோ அரவணைக்கவோ ஆட்கள் இருந்தனர் ஆனால் முகங்களில்லை அவர்களுக்கு கண்முன்னே  உயிர் கசிய இறந்து கொண்டிருந்தது நானல்ல மனிதமும் அவர்களும் தான்
என்றோ கண் சிமிட்டிவிட்டுத் திக்குத் தெரியாமல்  தொலைந்த பறவையை தினந்தினம் தேடிச் சலிக்கும்  பஞ்சிதத்திற்கு பறவையிடம்  புகார்களில்லை

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலத்தைப் போலத் துரித நேரத்தில் உருவானதில்லை ஷோபனாவின் அன்பு நெடுங்கால பாசி போலக் கண்டுணரப் படாமல்  கூடவே படர்ந்து கிடந்தது மழலையின் கரங்களில் அகப்பட்ட விலையுயர்ந்த பொருள்  போன்றது அது இருப்பினும்  ஷோபனாவின் அன்பை உணர்ந்து கொள்ள தன் அன்பை துட்சமென கருதும் ஓர் உறவில் வீழ்ந்து நோக வேண்டியிருக்கிறது என்னவாயினும்  ஒரு கட்டத்தில்  தன்னைத் தேடித் திரும்பி வரும் அன்பை ஷோபனா வீம்புக்கேனும்  வெறுத்து ஒதுக்குவதில்லை யாராலும்  புரிந்து கொள்ளக்கூடிய  ஆனால் எல்லோராலும்  விளங்கிக்க முடியாத அன்பு ஷோபனாவின் பலவீனமல்ல தூய அன்பின் பலவீனம்

மகளதிகாரம்

நிலமும் மழையும்  மத்தளம் கொட்டி ஆர்ப்பரிக்கின்றன பெரும் பண்டிகைக்கான உற்சாகத்தில் மஞ்சள் குளித்து தயாராகிறது  மாநகரம் சோர்ந்து போன சோலையில்  புதிதாய் ஓர் வாசனை சுதந்திர உலகின் புது அத்தியாயம் எழுதிட வேர்களின் சாயலில் மலரொன்று பூத்திருக்கிறது

கவிதை

பசியானால் காம்பைத் தேடிப் பசியாறிடும் மழலை தனக்கான சொற்களைத் தானே நிறைத்துக் கொள்ளும்  கவிதை

தீட்டு

பெண்‌ மகவு ஈன்ற  ஈத்துக்காரிக்கு  தீட்டு கழிக்க வேண்டுமாம்.? தீவிரமாகத் தீட்டற்ற ஓர் உயிரைத்  தேடிக் கொண்டிருக்கிறேன் ஏனெனில் ஈன்றவள் தீட்டென்றால் ஈன்றதனைத்தும் தீட்டே இவ்வுலகில் 

நீலம்

சிறு வயதிலிருந்தே  கண்ணில் தென்படுவது காலில் உதைபடுவதென எல்லாமும் நீலம் மிகவும் பிடித்தமான நிறம் நீலம்  பிடிக்கக்  காரணமென்று நினைவடுக்கில் பதிவெங்கும் இல்லை ஆனால் இதர இத்யாதிகள் பிடிப்பதற்கு  நீலம் ஒன்றே போதுமான காரணம் ஒரேயொரு விலக்கு நீல நிறத்திற்காகக் கிருஷ்ணரைப் பிடித்திருந்தது அம்பேத்கரை  அறிந்திடும் வரையில்
சவுகரியமாக நிகழ்ந்தேறியது ஒரு மரணம்  என் கரங்களில் யுகமாய் எனக்காகவே காத்து தவித்திருந்ததை  போல
நனைந்து கொண்டே  பறக்கும் பறவை  மழையில் நீச்சல்  பழகுகிறது 
தாஜ்மகாலுக்கு முன் நின்று முத்தம் பகிரும் காதலர்களின்  படத்தைப் பார்த்தேன்  தாஜ்மகாலும் அவர்களை  பார்த்துக் கொண்டிருந்தது 
நண்பர்கள் தினத்தன்று  சந்திக்க வரவில்லையென அழுது‌‌ தீர்த்த நாள்  நினைவிருக்கிறதா?  அன்று பெய்த மழையில் இன்றுவரை நனைகிறேன் 
ஒவ்வொரு நாளும்   பழையதையெல்லாம் கழித்துவிட்டு கண்ணுக்குத் தென்படும் யாவையும்  புதியவற்றால் நிரப்பிடுவான் அவன் இல்லையேல் குறைந்தபட்சம்  இருந்த இடத்திலிருந்து மாற்றி  வேறொரு இடத்திற்குள்ளாவது   புகுத்திவிடுவான்   காலத்துக்கேற்ப  புதியதாக மறுக்கும்  அவனது சுயத்தை அம்மணமாக்கவே  இந்த ஏற்பாடு

அறிவிப்பு

இறுதிச்சடங்கு  உடல் அடக்கம்  உடல் தகனம்  வரி கிடையாது  ஏழை மக்களின் வலியறிந்த  அரசின் கரிசனம்   இனி  சாகும் நாள் குறிப்பது மட்டுமே  ஒரே வேலை  அதையும் அரசே செய்து  முடிக்கும்
நன்கறிந்த நண்பனுடன் விவாதம் விவாத மூர்க்கம் ஒருபுறம் கருத்தியல் கலகம் மற்றொருபுறம் மய்ய சரடிலிருந்து விலகி வாதம் வென்றிடும் முனைப்பில் அவனது குறைகளையெல்லாம் பட்டியலிட்டு  அவன் கால்களை உடைத்தேன் பதிலுக்கு எனது குறைகளைக் குறிப்பிட்டு என் மூக்கை உடைத்தான்  மாறி‌ மாறி குத்தி குருதிச் சொட்டச் சொட்ட மூன்றாம் நபர் தலையிட்டு வாதத்தை முடித்திடும் போதுதான் இருவருக்குமே உரைத்தது நண்பர்கள் நாங்கள்
சட்டென ஓர் பறவையைப் போல வந்தமர்ந்தாள் கடும் புழுக்கத்தினால் மனிதத் தன்மையை இழந்தவள் போலிருந்தது அதுவரையில் அமைதியாக நின்றிருந்த மரம் நீண்ட யோசனைக்குப் பிறகு அதிதியை வரவேற்கும் இன்முக தலையசைப்புடன் காற்றைத் தருவித்து நிழலை விரித்து குளுமையைப் பரப்பி மடியில் சாய்த்துத் தாலாட்டி இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்தது மலர்களின் சங்கீதம் காற்றில் மிதக்க நினைவு திரும்பி நிகழுக்கு வந்தவள் வெடுக்கென ஒரு மலரைப் பறித்துவிட்டுப்  புன்னகை வழியும் முகத்துடன் கிளம்பிவிட்டாள்  மரத்தின் ஓலமும் மலர்களின் ஒப்பாரியும் அவள் செவிகளில்  விழுந்திருக்க வாய்ப்பில்லை
அப்பாவை போலவே இருக்கும்  அவருக்கு நரம்பியல்  கோளாறு கவலைப்படாதீர்கள் சிகரெட்டை நிறுத்தினால் காப்பாற்றிவிடலாம் நம்பிக்கையோடு இருங்கள் கடவுள் இருக்கிறான் என்கிறார் மருத்துவர் மருத்துவருக்கேயுரிய பொய்யான சக்கை சிரிப்பைச்  சிந்தியபடி  அப்பா சிகரெட் பிடித்ததில்லை நல்வினையாக அவருக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை
எல்லா பறவைகளுக்கும் ஒரே வானம் வானுக்கோ ஒன்றை போலில்லை  பறவைகள் இருப்பினும் தனக்கு மட்டுமே என நம்பும்  எந்தவொரு பறவையையும் துளியும் ஏமாற்றுவதில்லை  வானம்
யாருக்கும் தேவைப்படாதென பொது வெளியில் வீசியெறிந்த ஓர் அன்பு எங்கோ ஒரு குழந்தையின் சொப்பு சாமானங்களில் உயிர்ப்போடிருக்கிறது
காதுகள் அசையாமல் வாலது ஆடாமல் கண்ணது இமைக்காமல்  அலங்கரிக்கப்பட்ட அட்டை யானையொன்று கோவில் வாசலில்  வருபவர்களை வெறிக்கிறது  உள்ளிருக்கும் சிலையைப் போலவே ஜீவனற்று இருப்பினும் யானை அட்டையானதில் ஓர் ஆறுதல்  யாரிடமும்  பிச்சையெடுக்க வேண்டிய  அவசியமில்லை  எவரும்  அதை‌ வைத்து பிச்சையெடுக்கவும் வாய்ப்பில்லை
பைத்தியம்  பிடிப்பதற்குள் எதையாவது எழுதித் தொலை பைத்தியம் பிடித்த  பேனாவின் கடைசி எச்சரிக்கை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் அவர் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடிக் கொண்டிருந்தன ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டார். வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்கொன்று தலைகுனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் தினக்கூலிகளைப் போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் கலையத் தொடங்கின மேகங்கள். யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் அவரும் நிலவும் தனியானார்கள். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கிறது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கிறது. சங்கிலித் தொடராய் நீளும் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு உற...
கல்யாண பந்தலில் எச்சில் இலைக்காகக்  காத்திருக்கும் பிச்சைக்காரனைப் போல உறக்கத்திற்கு ஏங்கித் தழுவும் இமைகளைப் பூட்டினால் வேலை முடிந்து வெறுங்கையுடன்  வீட்டிற்கு வரும் அப்பாவைப் போல உறக்கமற்று வந்த இரக்கமற்ற இருளாய் கவிழ்கிறது இரவு உறக்கம் இல்லா சாக்கிலோ சீராய் அடுக்கி வைத்த  நினைவடுக்கைக் கலைத்துப் போட்டு பிறாண்ட தொடங்குகிறது கூரிய நகங்கள் கொண்ட பூனை மனது இருள் ஓர் ஆசுவாசம் இரவு ஓர் நிம்மதி உறக்கம் ஓர் பெரும் ஆறுதல் முற்றுப் பெறாத இக்கவிதையைப் போலவே உறக்கத்தைக் களவாடிய இந்த இரவும் நீ...............ள்கிறது
இசையில் கொஞ்சம் தனிமையில் கொஞ்சம் போதையில் கொஞ்சம் கரைத்த யாவும்  மீளும் கொஞ்சம் இசையில் கொஞ்சம் தனிமையில்  கொஞ்சம் போதையில் 
மயானத்தில் அடுத்தடுத்த வரவுக்காகக் காத்திருக்கும் ஆழத் தோண்டிய குழிகளின் மத்தியில் கண்ணீர் வடிக்கும் எதிர்கால பிணங்களின் சில துளிகள் தத்தம் மரணத்திற்கானது
துளி சாரலைக் காட்டிலும் சன்னமாகிவிட்டது  வாழ்வு யாவும் விலகிவிட்டன - இல்லையில்லை யாவற்றிலுமிருந்து  விலகிவிட்டேன் மலை உச்சியில் தனியாக நிற்பது வேதனையாய் இல்லை பாரங்கள் தொலைத்த உச்சியில் லேசாகிப்‌ பறக்கிறது உலகு
மிதமான இசையில் மெல்லிய இருள் பரவிய அறையில் கோப்பையில் தளும்பும் மது விளிம்பைத் தடவி  நழுவும் காலம் புகையாய் வெளியேறி மதுவாய் உருமாறி  போதையாய் மிஞ்சிப் போன நினைவு சக்கைகள் தொலைத்து மீட்டெடுக்கும் இரவின் மடியில் திருவிழாவில் தொலைந்து போன  சிறுவனாய் இக்கணத்தில்  நான்
தூய அழகு பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள் தூய அழகு என்று ஏதேனும் உள்ளதா? அழகானது தூய்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே என்றேன்‌  அன்பானது தூய அழகுதானே என்றாள் தூய அன்பல்ல அன்பில் தூய்மையே பேரழகு என்றேன் இறுக்கி அணைத்துக் கொண்டாள் நிலவின் ரகசிய சிரிப்பொலி கேட்டதன்று
ஏன் இப்படி இருக்கிறேன்? விருது பெற்ற எழுத்தாளனின் கைகளைக் குலுக்கி  வாழ்த்து சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்  புன்முறுவலுக்கே தயங்குகிறேன்  என்னவென்று அறிமுகப்படுத்திக் கொள்வது வாசகன் என்றா? ரசிகன் என்றா? நானும் எழுதுவேன் என்றா? 'நானும் எழுதுவேன்' இதைச் சொல்லத்தான் எத்தனை கூச்சம் சுயதம்பட்ட சுழிப்பில் எழுத்து கேலியாகச் சிரிப்பது போலொரு காட்சிப் பேழை அந்தக் கேலிச் சிரிப்பு சத்தமாக  இன்னும் சத்தமாகக்  கூனிக் குறுகித் தலை தாழ்ந்திடும் வரை தொடரும் அழ வைத்து அவமானத்தில் சாம்பலாக்கும் அகோரி சிரிப்பது தருணங்களில் தயக்கமின்றி செய்ய முடிந்ததெல்லாம் யோசிக்காமல் ஒதுங்கிக் கொள்வது மட்டுமே

அமிர்தை

அந்த அழகான கனவு இப்படித்தான் இருந்தது வண்ண வண்ண பூக்களின் நடுவே தென்றலின் லயத்திற்கு சின்னஞ்சிறு சிறகுகளில் வயலின் மீட்டும் வண்ணத்துப்பூச்சியொன்று நங்கையவளின்  இதழ்களில் பதிந்தது மலரென நம்பி தேனினும் இனிய அமுதம் உண்ணக் கண்ட வண்ணத்துப்பூச்சி இவள் இதழ்களை விட மலரொன்றும் மெல்லியதல்ல என உச்சிக் கொட்ட நாணத்தில் உடலெங்கும் முளைத்தன இதழ்கள் அமிர்தையானாள் நங்கை

மறு சந்தர்ப்பம்

மறு சந்தர்ப்பம் வாய்த்தால் மாற்றிடலாம்  நடந்தததை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிடலாம் நிதானமிழந்த சுயத்தின் அநாதர  புலம்பலுக்கு வேடிக்கை பார்த்தே பழக்கப்பட்ட நிதர்சனமறிந்த மனத்தின்  வெற்று புன்னகை வாய்த்திட வாழ்வொன்றும் கசிந்த வினாத்தாள் அல்ல
கோடையில் ஓர் மழை நாளில் தான் முதல்முறை முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம் வானவில் தோன்றியதன்று கோடையில் பெய்யும் மழை அபூர்வமானது காதலின் சாட்சியைக் குறிப்பது குறைந்தபட்சம் எந்தன் காதலுக்கு
எந்தப் பக்கம் திரும்பினாலும் வாழ்வின் சுமைகள் சோதனைகள்  பற்றிய புலம்பல் பேச்சால்  நிரம்பிருக்கிறது  இன்று   பிறந்த குழந்தையோடு  புதிதாய் ஒரு உலகம் பிறந்திருக்கிறதே  அது யாருக்கும்  தெரியாதா?
சூல் விழிகளுக்குக் குடை பிடித்தது போல் அடர்த்தியான புருவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்  சீராய் கலைந்த இழைகள் பூரணத்தின் உச்சம் கம்பிரமும் கூர்பார்வையும் தனித்த அடையாளமென பெண்ணானவர்கள் பேசிக் கொள்வர் தெளிவானவள் என்ன வேண்டும் என்றறிந்தவள் ஆதலால் என்னை வேண்டாம் என்றதில் வியப்பில்லை
பரபரப்பான சாலையின் மத்தியில் தத்தி தத்தி நடை பயிலும்  மழலையைப் போல் சாவகாசமாய் சென்ற பிண ஊர்தி ஊருக்கென ஒரு பொதுவான தகவலைத் தாங்கியிருந்தது இப்போதைக்கு  நீ செல்லலாம் இப்படிக்கு  உன் மரணம்
உயிரானவர்கள் உதறித் தள்ளிய நிராதவரான நிலையில் கண்ணீர் மல்க தலைவிரி கோலமாய் நிற்கும்  ஓர் இளம் பெண்ணை நினைவூட்டும் அந்த மரம் சவத்தைப் போல் அசையாமல் நிற்கும் அதன் அமைதி பெரும் அச்சமூட்டியது புல்லோ புத்தனோ எல்லோரும் வாழவென ஒரு காலம் உண்டு வசந்த காலம் வரும் இலை  காய்  கனி‌  பூ என யாவும் தோன்றும் அன்று  பருவத்தில் காதலனுடன் முதல் முத்தம் பதிந்த நாணத்துடன் காற்றை தருவிக்கும் இந்த மரம் அப்போது  பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்களின் தேனை உறிஞ்சி என் காதலிக்கு ஓர் கவிதை வரைவேன்
கடினமாய் உழைத்துக்‌ கட்டமைத்த பிம்பம் கண்ணெதிரே சில்லு சில்லாய் உடைகிறது பதவி உயர்வு கிடைத்தமைக்கு பாராட்டு வாசித்த வயிற்றெரிச்சல் பீடித்த நொறுங்கிய நண்பன்  'உன்னிடம் இருக்கும் இரண்டு இல்லை என்னிடம்' எனப் பெருமூச்சு விடுகிறான் மார்பகமும் யோனியும்  அவ்வப்போது  சிறு சிறு ஒத்துழைப்பும் நல்கினால் பெண்ணானவள் எதையும் சாதித்து விடலாம்  வக்கற்றவர்களின் வாய் ஜாலம் பெண்ணின் தகுதியையும் திறமையையும் அவளது யோனிக்குள் புதைக்க முனையும் மூளையின் இடத்தில் குறியைச் செருகியிருக்கும் தற்குறி அவனிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது அத்தனைக்கும் மேலானது அறிவு
நட்சத்திரங்கள் இல்லாத வானம் பறவை அமராத கிளை மொட்டு விடாத செடி கரையை நனைக்காத அலை காதல் கூடாத பருவம் பெரும் புயலில் திசை  தொலைந்த சருகு நீ மற்றும் நான்

துப்புரவு

கணக்கு வாத்தியாரானது  சுயத்தின் சாதுரியமான  சூழ்ச்சி கூட்டலும் பெருக்கலும்  தினசரி பணி வகுப்பறையில் கரும்பலகையைத் தொட்டதும் அப்பாவின் ஞாபகம் வந்துவிடும் தினமும் காலத்துக்கும் கூட்டியும் பெருக்கியும் சாலையிலேயே  வாழ்நாள் கழிந்து போனவர் விட்டுப் போன சமன்பாடுகளுடன் வேறொரு பாதையில் கூட்டல் பெருக்கலோடு துரத்தியடித்த வாழ்வை வகுக்கிறேன் துப்பரவு புரிந்த  கணக்கு வாத்தியார் அவர் கணிதமறிந்த துப்புரவுத் தொழிலாளி‌ நான் ஆயுதம் மட்டும் வேறு
அம்மா தான் முதன்முதலில் சொன்னாள் "ஆம்பள பையன் அழக் கூடாது" கணக்கு வரவில்லையென டியூசன் டீச்சர் கண்டபடி திட்டியதில் தேம்பித் தேம்பி அழுத போது தங்கச்சி கண்டித்தாள் "பையனா பொறந்துட்டு அழுவாத அசிங்கம்" தொடர் வீட்டுப் பிரச்சினைகளினால் கசந்த பொழுதொன்றில் மனைவி அவமதித்தாள் "நீயெல்லாம் ஒரு ஆம்பளையா கண்ண கசக்கிட்டு ஒக்காந்திருக்க" ஒரே ஒரு ஆசை தான் அழுது தீர்க்க வேண்டும் அருவருக்கவோ ஆறுதலுக்கோ  அருகில் யாருமில்லாமல் அழ வேண்டும் மொத்த பிரபஞ்சமும் கண்ணீரில்  நனைய அழ வேண்டும் நானே மூழ்கிடும் வரை அழ வேண்டும் குறியும் மீசையும் அழுகிடும் வரை அழ வேண்டும் அன்றைய நாள் உளமார சிரிப்பேன் அழுதுகொண்டே
மஞ்சள் வெயிலில் தொப்பலாய் நனைந்து ஒளிக் கீற்றுகள்  சொட்டு சொட்டாய் சொட்டிக் கொண்டிருக்கும் பசுமையான வெளியில் மனம் கரை(மறை)ய நின்றிருந்தேன் பக் பக் பக் மெல்லொலியுடன் வெண்ணிற வாத்து ஒன்று அருகில் வந்து முறைத்தது முகமன் கூறினேன் 'இங்கு உனக்கென்ன வேலை' வாத்து கேட்டது அனுபவிக்க வந்தேன் எதை? உன்னை மஞ்சள் வெயிலை மோனம் உறைந்த இந்த பசுமையான வெளியை முகம் மலர்ந்த வாத்து தன்னிலை வழுவாமல் பாயும் நீரோடையைக் காட்டியது குளத்தில் நீச்சலடிக்கும் பறவையைக் காட்டியது முடிவில்லா எல்லையில் சாந்தமே‌ எல்லாமுமாய்  அமர்ந்திருக்கும் பல்லடுக்கு மலையைக் கதிரவனின் கெஸ்ட் ஹவுஸ் எனக் காட்டியது இலைகளின் சரச ஒலியை  இனிய சுவரங்களெனச்  செவிகளில் ஊட்டியது குட்டி யானையின் மேல் பல வண்ண தட்டான்களைக் காட்டியதும்  யாரோ ஒருவர் வீசி உடைந்த பீர் பொத்தலில் குத்தி   உயிர்விட்ட கூரலகு பறவையின்  சிதறிக் கிடக்கும் குருதித் தடத்தில் நின்று தான்  இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறாய்  சொல்லிவிட்டுச் சட்டென்று மறைந்தது   வாத்து    பாதத்தில் ஒட்டிக் கொண்ட பறவையின்...
ஒரு வார்த்தையில் என்ன இருக்கிறது? ஒரு வார்த்தையில் தான் எல்லாம் இருந்தது நானும் இருந்தேன் நீயும் இருந்தாய்!
சுருக்கு பை அளவுக்குச் சுருங்கிவிட்டது தூரமெல்லாம் உலகில் எந்த மூலையிலிருந்தால் என்ன தொழில்நுட்பத்தின் கரம் பற்றி முகத்துக்கு முகம் நோக்கி நினைத்த மாத்திரத்தில் கதைக்கலாம் என்கிறாய் எனக்கிருப்பது ஒரே சந்தேகம் தொடுதிரையில் முத்தமிட்டால் நின் நெற்றியில் ஈரம் படிந்திடுமா?

யாரவள்

அவள் யாரென்று கேட்பவர்களுக்கு என்னவென்று சொல்வது எழுதி முடிப்பதற்குள்  நினைவிலிருந்து அகன்ற  கவிதை 
துயர மசி  நிரம்பிய எழுதுகோலினால்  ரோஜாவிலும்  இழவு வாசம்
கருவறையிலிருந்தது நினைவில்லை கல்லறையில் இருக்கப் போவது பற்றி போதிய புரிதலில்லை இருக்கும் இடத்தில் இருளையும் புழுக்கத்தையும் நிறைத்துக் கொள்கிறேன் வாழ்வையும் மரணத்தையும் ஒருசேரத் தழுவிய படி

நிராதரவு

நாளைக்குப் பயணம் மறுபடியும் பார்க்க இயலுமோ இயலாதோ இதுவரையில் சொல்ல நினைத்துத் தவிர்த்ததையெல்லாம் அடை மழையாய் கொட்டித் தீர்த்திருக்கிறாள் கடிதத்தில் இருபது வருடத் தவிப்பை இரண்டு பக்கங்களில் இளைப்பாற முயலும் கூச்சமற்ற அழுகையின் விசும்பல் ஒரே மூச்சில் படித்துவிட முடியுமென்னால் ஆனால் நிறுத்தி நிறுத்தி அனுபவிக்கிறேன் காதலின் பெருஞ்சுகத்தை வழிந்தோடும்‌ கண்ணீரினூடே எத்தகைய உறவு எவ்வளவு காதல் எல்லாவற்றையும் பொய்யாயேனும் கடக்கக் காலத்திற்கும் ஓர் கடிதம் போதுமானதா நிராதவரான காதல் அநாதையாய் புரள்கிறது காற்றில் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் நேற்றே கிளம்பிவிட்டாள் அவள்

ஒரு கவிதை என்ன செய்துவிடும்

ஒரு கவிதை என்ன செய்துவிடும் நொடி நேரத்தில் காலங்காலமாய் சுமந்து திரிந்த வெத்து பிம்பங்களைச் சுக்கு நூறாக்கி சுயத்தை நிர்வாணமாக்கும் கர்வத்தின் கூடாரத்தைச் சம்மட்டி அடியாய் வீழ்த்தும் ஆதிக்கத்தின் கொடுங்கோலைக் கட்டெறும்பு கடியால் அசைத்துப் பார்க்கும் உலகத்தில் இல்லை உயிர்களில் புது உலகம் பிறக்கும் புதிர் விளங்கும் குழந்தைமை முதுமை வாலிப பருவங்களைக் கைகோர்த்து ஒன்றாய் நடை பழக்கும் சமயங்களில் தற்கொலை எண்ணத்திலிருந்தும் காக்கும் கேளாத மனதின் குரலுக்குச் சோராமல் செவி சாய்த்து ம் கொட்டும் குறைந்தபட்சம் வாழ்வதற்கு ஒரு காரணத்தைத் தரும்

நகல்

வேரை  விஞ்சி நிற்கும் கனி கடலை விஞ்சி நிற்கும் அலை நிஜத்தை விஞ்சி நிற்கும் நகல் படைப்பை விஞ்சி நிற்கும் படைப்பாளி

நினைவூட்டல்

என் மரணத்தைப்‌ பற்றி  யோசித்ததே இல்லை இதுவரை மதியம் நெருங்கிய நண்பனொருவன் இறந்துவிட்டான் சீக்கிரம் போய்விட்டான் என சக நண்பர்கள் அழுகிறார்கள் புலம்புகிறார்கள் சபிக்கிறார்கள் இல்லாதவொன்றை ஆனால் நண்பனின் மரணச் செய்தியில் ஓர் குறிப்பு இருந்ததை யாருமே கவனிக்கவில்லை தத்தம் மரணத்திற்கான நினைவூட்டல் அது ராகவி

நாஞ்செலியன்

கொழுத்த மார்புகளைத் தூக்கிச் சுமக்கும் வலி சொல்லி மாளாது பாறாங்கல்லைத் தொங்கவிட்டது போல சமயங்களில் முகத்தைக் காணாமல் வன்மத்தைக் கக்கியிருக்கிறேன் பொருத்த அளவிலான மார்புடல்களில் மாநகர பேருந்தில் தினசரி கசங்கும் முலைகளின் கணக்கில் எனதிரு முலைகளுக்கும் 'அழுத்தமான' இடமுண்டு பால்மடியெனப் பகடி செய்யும் ஆண்களிடம் வருத்தமில்லை ஆனால் பெண்களின் இழிவான பார்வைச் சீண்டலில் குறுகி அம்மணமாகிறேன் முலைவரிச் சட்டம் ஆண்களுக்குப் பொருத்தமெனில் அறுத்தெறிந்திருப்பேன் நாஞ்செலியின் ஆண் உருவாய் ராகவி

வழி

நீ கடந்து போகச் சொன்ன பாதையில் செல்கிறேன் சொன்னபடியே உன்னை நினைவூட்டும்படியாக ஒன்றுமில்லை நானும் கூட மறக்கவே முயல்கிறேன் ஆனால் பார் பிடித்த சட்டையில் நேற்று தேநீர் கொட்டிவிட்டது கறையில் திட்டு திட்டாய் உன் பிரிவின் சாயம் கடைசி வார்த்தை எழுதிடாமல் மசி தீர்ந்திட்ட பேனா விரலிடுக்கில் நின் விரல் விட்டுச் சென்ற பிசுபிசுப்பு ஈரத்தோடு சாய்ந்தாடுகிறது உன் பெயர் கொண்ட நட்புகள் பாவம் அவர்களறியாமல் உன்னைச் சுமந்து வருகிறார்கள் என்னிடம் கழுவிடும் போது பாத்திரம் கீறிக் கசிகிறது இளஞ்சிவப்பில் ஒரு சிறு துளி நம்மிருவருக்கும் ஒரே வகை இரத்தம் உன்னை நினைவூட்டும் என்பதால் பாடல்கள் கேட்பதில்லை இப்போதெல்லாம் இருப்பினும் தென்றலையும் மழையையும் என்ன செய்வதென்று தெரியவில்லை நாம் எடுத்த நிழற்படங்களை அழித்துவிட்டேன் தன் வண்ணத்தை ஒட்டிவிட்டுப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியைத் தடுக்க முடியவில்லை பஞ்சாரத்திற்குள்ளேயே இருந்தாலும் பாம்பின் கண்களைக் கொண்டு நீளும் இரவில் நிம்மதியாய் உறங்கிடுமா கோழிக் குஞ்சு சிதறிப் போன மனம் சிறுசிறு இழப்புக்கெல்லாம் உந்தன் இழப்பையே பிரதிபலிக்கிறது பூதாகரமாக உறக்கத்தை உனக்கும் கனவுகளை நமக்க...

அலைவுறுதல்

ஒரே சமயத்தில் தனிமையை விரும்புபவளாகவும் அதேசமயம் தனிமையைக் கண்டு அஞ்சுபவளாகவும் அதன் பகடியில் சுயத்தை அருவருப்பவளாகவும் தன்னிலே வெறுப்பை உமிழ்பவளாகவும் இருக்கிறேன் எப்போது கிடைக்குமெனக் கிடையாய் கிடந்து கிடைத்த மாத்திரத்தில் விரும்பியதையே வெறுத்துத் தள்ளுகிறேன் ஏனிந்த அலைவுறுதல் அவசியமற்ற மெனக்கெடல் முடிந்திடுமே என பதற்றமா விலகிடுமே எனப் பாதுகாப்பின்மையா? முடிந்தாலும் விலகினாலும் வலித்திடும் நெஞ்சை வலிந்து சுமந்திடும் பாரமே ராகவி

சனியனே

சனியனே... குழந்தையைத் திட்டினார் குழந்தை சிரித்தது திட்டியவர் சனியனானார் ராகவி...

நான்களாகிய நான்

எழுதி அழிக்கப்பட்ட வார்த்தையைப் போல் அடுத்த நொடியில் அடையாளங்களைத் துறப்பது ஆடைகளை அவிழ்ப்பது போல் அவ்வளவு எளிதாய் இல்லை பெயரும் முகமும் பதிவில்லாத இடத்திலும் அடையாளமற்று அலைந்திடும் வேளையில் என்னுடனே என் சட்டைப் பையிலே தங்கியிருக்கிறது ஒரு நான் ஒவ்வொன்றாய் தொலைத்தாலும் புதிதாய் முளைத்துவிடுகிறது ஒரு நான் தீர்ந்தபாடில்லை பிறகு தான் புரிந்தது நான் என்பது ஒரு நான் அல்ல அது நான்களின் தொகுப்பு கடைசி நான் தீர்ந்தாலும் வேறொரு நானாய் இருந்தே தீருவேன் நான் ராகவி
இல்லாமல் இருப்பதில்  என்ன வலி இருந்துவிடப் போகிறது இருந்தும் இல்லாமலானதைக் காட்டிலும் கார்த்திக் பிரகாசம்...

வாழ மறந்த வாழ்வு

குழந்தைகளின் கதைகளில் கெட்டவர்கள் இல்லை பூ பூச்சி ட்ராகன் டைனோசர் எல்லாம் மனிதர்கள் திருடியவன் தீங்கிழைத்தவன் என எல்லோருக்கும் மன்னிப்பு உண்டு கண்டிப்பாக சட்டம் இல்லாத சாட்சியம் அவசியமில்லாத முகம் கோணியதும் வெள்ளந்தி சிரிப்புடன் பழம் விடும் சிறு குழந்தையே வாழ மறந்த வாழ்வுக்கான பெரும் ஆறுதல் கார்த்திக் பிரகாசம்...

நான் மறந்துவிடுவேன்

யாரும்‌ ரசிப்பதற்குள் நான் ரசித்திட வேண்டும் யாரும் கருத்திடுவதற்குள் நான் கருத்திட வேண்டும் யாரும் எழுதிடுவதற்குள் நான் பதிவிட வேண்டும் யாரும் சொல்வதற்குள் நான் சொல்லிவிட வேண்டும் இப்படி முனைப்புடன் செயல்படுபவன் ஆனாலென்ன வந்த வேகத்தில் தொலைத்து அடைந்த சுகத்தில் அலுத்து யாரும் மறப்பதற்குள் நான் மறந்துவிடுவேன் என்னையும் சேர்த்து கார்த்திக் பிரகாசம்...

போலவே

இந்தப் பாடலும் அந்தப் பாடலை போலவே உள்ளது உனக்கென்ன பிரச்சனை..? இந்தப் பாடலும் அவளை அந்தக் காதலை நினைவூட்டுகிறதே கார்த்திக் பிரகாசம்...

மற்றுமொரு முறை

அவள் பிறந்து  முப்பது வருடங்களாகிவிட்டன இன்றைய திகதிக்கு இறந்தபின் வரும்  மூன்றாவது பிறந்த நாள்  வாழ்த்து மடலாகத் தொடங்கி   நினைவஞ்சலியாக  மாறி அழுகிறது அவளுக்கான பிறந்தநாள் கவிதை  வாடிய பின்னும் மலரும்  பிரியமானவளின் பிறந்தநாள் மலர்க் கொத்துக்குள் மறைத்து வைத்து அவளின் மரணச் செய்தியை கரங்களில் திணிக்கிறது மற்றுமொரு முறை கார்த்திக் பிரகாசம்...

தானாய் மலரும் கவிதை

குழந்தைகள் வெகு இயல்பாய் இறைக்கிறார்கள் கவிதையை எழுதுவதை நிறுத்திவிட்டுத் தானாய் மலரும் கவிதையை ரசிக்கத் தொடங்கிவிட்டேன் நான் கார்த்திக் பிரகாசம்...

வெற்று புன்னகை

உன்னில்  எனக்கே எனக்கென்று ஓர் இடம் வைத்திருந்தாய்? அது காதலுக்கான இடம் தானென்று சூளுரைக்கவில்லை நான் ஓர் வளர்ப்பு நாயிக்கான இடமாகவோ பூனைக் குட்டிக்கான இடமாகவோ மலரின் இடமாகவோ பேனாவின் இடமாகவோ மது பொத்தலின் இடமாகவோ சிகரெட் துண்டின் இடமாகவோ கூட இருந்திருக்கலாம் அது ஆனால் அடிக்கடி நீயென்னை அழைக்கும் "கண்ணு" காற்று வெளியிடையில் உதடுகள் தீண்டிடாமல் நித்தம் நீ பரப்பிட்ட பேரன்பின் முத்தமில்லையா? நம்மிருவரை மட்டும் சுமந்து செல்லும் இருசக்கர வாகனமல்ல காலம் நீயின்றி என்னால் வாழ இயலும் நானின்றியும் உன்னால் முடியும் மறுப்பதற்கில்லை இருப்பினும் என் பிரியத்தின் இடத்தை பிறிதொன்றால் எளிதாக நிரப்பிடுவேன் என்றாயே அன்று தான் முடிவு செய்தேன் சலனப்படுத்தாத என் அன்பின் இடம் உன்னுள் சமாதியாவதற்குள் வெற்று புன்னகையுடன் விலகிச் செல்வதென்று கார்த்திக் பிரகாசம்...

க்கா

க்கா... க்கா... கிளையில் வந்தமர்ந்தது ஓர் காகம் உறவினர்கள் வருகிறார்களா? விருந்தோம்பும் சூழலில் நானில்லை என்றேன் உந்தன் உறவினர்கள் வருவது எனக்கெப்படி ஐயா தெரியும் திறந்தே கண்டிராத கதவுகளையும் சாளரங்களையுடைய உன் செங்கல் குவி(டி)யலுக்கு நானென்ன காலிங் பெல்லா போன வாரம் தான் பித்ருக்களின் கும்பிடு தேதி முடிந்தது அமாவாசை அடுத்த வாரம் விஷேச நாளும் இன்றில்லை பிறகென்ன.? வயிற்றுடன் வன்மம் பசி பொறுக்குதில்லை பழி தீர்க்க பார்க்கிறது சில பருக்கைகளைத் தூக்கியெறி ஆற்றிக் கொள்கிறேன் இப்போதுதானே சொன்னேன் விருந்தோம்பும் சூழலில் நானில்லை என்று உனக்கும் பொருந்தும் அது மௌனத்துடன் கூரலகு முகத்தைக் கீழ் நோக்கித் திருப்பி பறக்க எத்தனிகையில் சொன்னேன் "கோபித்துக் கொண்டு அடுத்த வாரம் அமாவாசைக்கு வராமல் இருந்திராதே வடை பாயசம் உண்டு" மோனத்தின் திசையறியா மூலையில் தான்தோன்றித்தனமாகத் திரிந்திருக்கையில் உதிர்ந்த ஓர் இலை உடலை உரச விழித்தேன் கண்முன்னே காக்கைக்கான வடை பாயச படையல் காய்ந்த நரகலின் நிறத்தில் நாறிக் கொண்டிருந்தது கார்த்திக் பிரகாசம்...

கவலை

ஏமாந்ததில் இல்லை சுளுவில் நம்பியதில்தான்    பெரும் கவலை கார்த்திக் பிரகாசம்...

இரண்டு மரங்கள்

இறங்கிப் போகாத தன்மானம் சிடுசிடுக்கும் முகத்தில் விரைப்பான மிலிட்டரி மீசை கடுகு பொரியும் தொனியில் கொப்பளிக்கும் கோபம் வெள்ளையைத் தவிர வேறணியாத உடல் அந்த கருத்த உதடுகள் புன்னகைத்துப் பார்த்த சாட்சி இல்லை ஊருக்குள் நாளிதுவரை ஓட்ட பந்தய விளையாட்டில் பேரனிடம் தோற்றுச் சிரிக்கும் தாத்தாவைக் கண்டு இவ்வாறு புறம் பேசின அவரின் வயதையொத்த இரண்டு மரங்கள் கார்த்திக் பிரகாசம்...

விடுபட அல்ல

இசையில்  கவிதையில்  வலியைக்  கொணர்வதும் உணர்வதும் அதிலிருந்து விடுபடுவதற்காக அல்ல விட்டுச் சென்ற காலத்தோடு எட்டி நின்று வேடிக்கை பார்க்க கார்த்திக் பிரகாசம்...

அந்தவொன்றாக

புரிந்திடாதவர்களின் மத்தியில் பிணமாய் வாழும் மனிதன் ஒருவனிடம் உரையாடினேன் சமீபத்தில் பல வருடங்களாகிவிட்டன அவனுக்கு அழுகை வருவது நின்று செவிகள் கிடைக்காமல் செத்தேவிட்டன அவன் எண்ணங்கள் காதல் ~ அன்பு ~ பிரியம் போன்ற சொல்லாடல்கள் மக்கிப் போன கழிவாகி மனதிலோ சாக்கடை துர்நாற்றம் தூங்காமலே விடிந்துவிடும் இரவுகளும் விரக்தியிலேயே வடிந்துவிடும் பகல்களுமே அவனுக்கு வாய்த்தவை எல்லாவற்றையும் உதறிவிட்டுப் பறந்திட வேண்டியதுதானே என்றேன் யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டுப் பறந்திட எந்தவொன்று தடுக்கிறதோ அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்றான் கார்த்திக் பிரகாசம்...

மரணத்துக்கு அருகில்

மாலை ஐந்து மணி. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். வழக்கமாக தாமதமாய் வரும் ரயில், அன்று வழக்கத்தை விட தாமதம். மிகவும் பழகிப் போன விஷயம் தான். ஆதலால் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. மக்கள் வெள்ளம் நடைமேடையை தொப்பலாய் நனைத்து ஆங்காங்கு குட்டை போல் தேங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எத்திசையில், எந்த நேரத்தில் நின்றாலும் சென்னைச் செல்லும் கூட்டத்திற்கு மட்டும் குறைச்சலே இருக்காது என தோன்றியது. உடன் யாரும் இல்லாததால், ஓடை நீர் நனைக்காத காட்டுச் செடியை போல ஓரமாய் ஒதுங்கி அமர்ந்து கொண்டேன். பொருத்தமான உத்தேசமறிந்து அரசாங்கம் செயல்படுத்திய அதிமுக்கியத்துவமான திட்டங்களில் முதன்மையானது இரயில் நிலையங்களில் இலவச வைஃபை. சரியான நேரத்திற்கு வந்த பயணிகள் மட்டுமல்லாமல் தாமதமாக வந்த பயணிகளும், இன்னும் வராத இரயிலைக் கோபத்தில் திட்டி, ஒருகட்டத்தில் முற்றிலும் பொறுமையிழந்து அரசாங்கத்தை சபிப்பதை முழுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தது இந்த இலவச வைஃபை. கூட்டத்தோடு கூட்டமாக நானும் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு முகப்புத்தகத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தோள்பட்டையின்...
நடிகையின் கண்ணீரில் போலியாக வடிகிறது மெய்மை கார்த்திக் பிரகாசம்...
புதிதாய் அடையுமொன்றில் எப்போதோ இழந்ததை இனி ஒருபோதும் அடைய முடியாதொன்றை பாலையில் அவிழ்த்துவிட்ட மேய்ச்சல் மாடு கணக்காய் தேடித் திரியும் மனத்தில் கடும் பாறையாய் உறைந்து கிடக்கும் பருவத்தின் ஓர் பகுதி உடைவதில்லை அது உருகுவதுமில்லை கார்த்திக் பிரகாசம்...