Skip to main content

Posts

Showing posts from 2020

பரிதாபம்

பணம் இல்லாதவனின் பெருந்தன்மை பரிதாபத்திற்குரியது ஏனெனில் எளிமை கடினமில்லை ஏற்றுக்கொள்வது தான் கார்த்திக் பிரகாசம்...

ஆயாசம்

என்றைக்குமே வெயிலை மறைத்திடாத மழையைத் தவிர்த்திடாத பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைக்குள் பழைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள் மீட்டுக் கொண்ட அடையாளங்களில் துருத்தி நிற்கும் அந்நியத்தை ஒளித்து உரையாட முற்படுகிறார்கள் ஒடிந்த சுய உருவைத் தொலைத்த ஓரிரு நாற்காலிகள் இருந்தன உடலை நீட்டி மடக்கி என்ன முயன்றாலும் அவற்றில் ஒருவராலும் மனமுற ஆசுவாசமாக அமர முடியவில்லை பசையிழந்த அவர்களின் பால்ய காலத்தைப் போலவே கார்த்திக் பிரகாசம்...

அதன் பெயர் சுதந்திரம்

கனவெல்லாம் கண்டிருக்கிறேன் நான் பார்த்ததில்லை நண்பர்களில் சிலபேர் பார்த்ததுண்டு அனுபவித்ததில்லையென்று சொல்லியிருக்கிறார்கள் பறக்க முயன்ற பலமுறை சிறகுகள் வெட்டப்பட்டன எழுத முயன்ற எத்தனையோ சமயம் விரல்கள் உடைக்கப்பட்டன அச்சத்தால் அடக்கி ஒடுக்கி அழுத்தப்பட்டன உனக்கெல்லாம் எதற்கு அது.? உனக்கெல்லாம் இதுவே அதிகம்.? சிரைக்கும் மயிருக்குக் கிடைக்கும் மரியாதை சிந்திக்கும் மனிதனுக்கு இல்லை சிந்திய கண்ணீர்த் துளிகள் சாக்கடையில் மிதக்கின்றன கனவுகளின் குரல்வளையை நெரித்த அப்பாவின் அதிகார கரங்களில் முதன்முறை பறிக்கப்பட்டது இன்றுவரை கிடைக்கவில்லை கார்த்திக் பிரகாசம்...

என்னைச் செதுக்கிய காதல்

நட்பே யாவற்றுக்கும் தொடக்கப் புள்ளி நீண்ட பேச்சுகள் அக்கறையில் தோய்த்தெடுத்த வார்த்தைகள் அழுகையில் உடன் அழும் அன்பான மனம் நட்பின் ஊடுருவலிலே சிறகுகளுடன் காதல் முளைத்தது பகிர்ந்திட வேண்டிய நிர்ப்பந்தமின்றி பாரமில்லாமல் பறந்தது எதிர்பாரா திருப்பத்தில் எந்த சமிக்ஞையும் இல்லாமல் பிரிவெனும் சகபயணியை சுமந்து வந்த காலம் பகிர்தலின் அவசியத்தைத் தாமதமாய் உணர்த்தியது அதற்குள் தொடர் பகிர்தலினால் பிறிதொரு வானத்துக்குள் வலம்வர இசைந்துவிட்டது அந்த காதல் புதிதாய் அடையப்போகும் ஒன்றின் மகிழ்ச்சியைக் காட்டிலும் இருப்பதை இழத்தலின் வலியே பெருந்துயர் நிராகரிக்கப்படும் அச்சத்தில் நட்பிற்குள் புதைந்தது மற்றொரு  காதல் கார்த்திக் பிரகாசம்...

அன்பின் அன்பு

உடைந்த மனதை உடையாத வார்த்தைகளால் பூசி மொழுகி மீண்டுமொருதரம் உயிரின் ஈரத்தை உயிர்ப்பித்துக் கசிகிறது அதே அன்பின் அன்பு கார்த்திக் பிரகாசம்...

உணர்ச்சி கூண்டு

நீ இவ்வளவிற்கு உணர்ச்சியின் வசமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை மனதைச் சுதந்தரமாக வைத்துக் கொள் எதற்குள்ளும் நீயாகச் சென்று அடைபடாதே வானம் தொடும் பறவை ஒருபோதும் கூண்டை விரும்புவதில்லை கார்த்திக் பிரகாசம்...

மனச்சுழல்

பருவநிலை மாற்றம்  மழை குளிர் வெயில் நன்கறிவாய் பாங்கியின் மனச்சுழல் உணர்வாட்டம் அறிவாயா காரணமே இல்லாமல் கோபம் வரும் சுவரைக் கூட திட்டித் தீர்க்கத் தோன்றும் கிச்சு கிச்சு மூட்டினால் எரிச்சலாய் இருக்கும் குரலை ஒசத்தினாலே அழுகை கொட்டும் இதழ்கள் விரியும் புன்னகை இருக்காது அழுக்கு ஆடை அரக்காய் மணக்கும் சோம்பல் உடம்பில் சுறுசுறுப்பாய் இயங்கும் தலையணை தனிமை விரும்பும் படுக்கையோ மிஸ் யூவை கேட்கும் கொசுக் கடிக்கும் ஆறுதல் தேடும் மௌனம் பேரிரைச்சலாய் மொய்க்கும் சகலமும் சலனம் சங்கடமுமாய் நீளும் இதற்கெல்லாம் கவலைப்படாதே பெண்ணைச் சிக்கலாய் நினைக்காதே நீ ஒன்றும் செய்ய வேண்டாம் மூச்சடைக்காத முத்தமொன்றைத் தந்துவிட்டு மௌனமாக நகர்ந்துவிடு கார்த்திக் பிரகாசம்...

அடுத்த நிறுத்தம்

துணையை மட்டும் நம்பிய  போகும் இடம் அறியா  ஏதிலி நான் எங்கே போகிறதென்று எனக்குத் தெரியாது அவசரத்தில் வெவ்வேறு பெட்டிகளில் ஏறிவிட்டோம் பெட்டிகளில் நாங்கள் மாறி ஏறிய சமாச்சாரம் இரயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அதன் போக்கில் வேகம் குறையாமல் செல்கிறது என் பயத்தைப் புசித்தவாறு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி துணை இருக்கும் பெட்டிக்கு மாறிக் கொள் என்றவாறே நகர்கிறார்கள் அருகிலிருப்பவர்கள் போகும் இடமே அறியாத பாதையைத் தொலைத்தவளுக்கு அடுத்த நிறுத்தம் எப்படி தெரியும் கார்த்திக் பிரகாசம்...

நிரந்தர சிலுவை

பாவ மன்னிப்பு கோரி  நின்ற சாத்தான்களுக்கும் மன்னிப்பு வழங்கிய பெரும் பாவத்திற்காக நிரந்தர சிலுவையில் கர்த்தர் கார்த்திக் பிரகாசம்...

குழந்தையாகவே

அவள் குழந்தையாக நினைப்பதாலோ என்னவோ நான் இன்னும் குழந்தையாகவே இருக்கிறேன் குறைந்தபட்சம் அவளிடம் மட்டுமாவது கார்த்திக் பிரகாசம்...

தலைமகன்

பிறப்பை ஒத்திப் போடும்  சக்தி மட்டும் இருந்திருந்தால் தாமதமாய் பிறந்திருக்கலாம் தலைமகனாய் பிறந்ததற்காக பெருமிரவுகள் வருத்தமடைந்திருக்கிறேன் ஒரேயொரு அக்கா இருந்திருந்தால்...! ஒரு அண்ணன் இருந்திருந்தால்... ! எவர் கண்ணிலும் படாத மற்றவர்களுக்கு மதிப்பில்லாத சின்ன சின்ன தியாகங்கள் இளம் நரையின் கன்னத்துச் சுருக்கங்களில் சொல்லாமல் தொலைத்துப் போன குழந்தைத்தனம் ஏற்றி வைக்கப்பட்ட பொறுப்புகள் சூழ்ந்து நின்ற சுமைகள் மூழ்கிப் போன இளமை பல பொழுதுகள் ஏக்கப்பட்டிருக்கிறேன் பின்னொரு நாளில் சாதிச்சு காட்டிட்ட கண்ணு குடும்பத்த தல தூக்கவச்சிட்ட இனி நான் சந்தோசமா கண்ண மூடுவேன் என்று மரணப் படுக்கையில் அப்பா தேம்பித் தேம்பி அழும் வரை காலம் கண்ணீராய் உடைந்தது கார்த்திக் பிரகாசம்...

மகள்

குளிர் காலத்தில் தாமதமாக வந்துச் சீக்கிரமாகச் செல்கிறது வெயில் திருமணத்திற்குப் பின் அம்மா வீட்டிற்குச் சென்று திரும்பும் மகள்களைப் போல கார்த்திக் பிரகாசம்...

கருணை

விட்டு விட்டுப் பெய்த மழையில்  விடாமல் நனைகிறது தாயைத் தொலைத்து வழித் தவறிவிட்ட நாய்க்குட்டி பெரும் உயிர்களுக்கான வெளியில் சிறு உயிர்களுக்கு மதிப்பில்லை தாயில்லாத உலகம் கருணை அற்றது வெம்புகிறது நாய்க்குட்டி டயர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடுமென வந்து நின்றான் எங்கிருந்தோ வந்த மழையைப் போல   கிழிந்த சட்டையின் கிழியாத ஓரத்தைக் குடையாக்கி நாய்க் குட்டியை ஏந்திக் குடிசைக்கு ஓடினான் இருவரையும் கருணையோடு அணைத்துக் கொண்டது கூரையிலிருந்து வழிந்த ஒரு மழைத் துளி கார்த்திக் பிரகாசம்...

நிர்கதி

பெண்மக்கள் பிறந்தால்  பேருவகை அடையும் பெண்களைக் கொண்டாடி வணங்கும் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்தேன் சீவி சிங்காரித்து வெளிக் காட்டாமல் கூண்டுப் பறவையைப் போல் பொத்தி பொத்தி வளர்த்தார்கள் வாலிபத்தில் வேற்றுச் சாதிக்கார பையனைக் காதலித்ததற்காகக் கண்ட துண்டமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார்கள் வாழ விடாமல் பின் வருடத்திற்கொரு முறை படையலிட்டு வணங்கிச் சாமியாக்கிவிட்டார்கள் பெண்மக்கள் பிறந்தால் பேருவகை அடையும் பெண்களைக் கொண்டாடி வணங்கும் குடும்பம்தான் அது கார்த்திக் பிரகாசம்...

தவிப்பு

வெளியே  சிணுங்கிய பூனைக்குட்டியின் குரலில் திடுமென குளிர் உரைத்தது இறுகப் போர்த்திக் கொண்டு உறங்கிவிட்டோம் நாங்கள் கார்த்திக் பிரகாசம்...

ஊர்க்குருவி

ஊர்க்குருவி பருந்தாகட்டும் அதே சமயம் பருந்தும் ஊர்க்குருவியாக வேண்டும் ஓர் நாளாவது ஊர்க்குருவியாய் இருப்பதன் கஷ்டம் ஊர்க்குருவிக்குத் தான் தெரியும் கார்த்திக் பிரகாசம்...

விடியல்

அதிகாலை சாரலில் ஆங்காங்கே நனைந்திருக்கிறது சாலை தகரக் கூரைகளில் மழையின் தாளம் காற்றில் மிதக்கிறது  கடாயில் வேகும் மெதுவடையின் வாசம் தொண்டைக் குழியில் குளிருக்கு இதமாய்  இறங்குகிறது தேநீர்  இந்த விடியல்தான் எவ்வளவு  ரம்மியமானது  கார்த்திக் பிரகாசம்...

ஒரு சொல்

மிகச்  சாதாரணமாகத்  தான்  வந்து விழுகிறது  ஒரு சொல் எப்படி ஒரு சொல்லால்  எளிதாகக்  கத்தியாய் உருமாறி  மனதைக் குத்திக் கிழிக்க  முடியும் முன்னோரு  நாள் சம்பவித்த சந்தோஷங்களைச்  சவக்குழியில்  கிடத்துகிறது ஒரு சொல்  எதிரியின் ஆயுதமும்  துரோகியின் சூழ்ச்சியும் அன்பில் பிரியமானவர்களின்   ஒரு சொல்லும் கார்த்திக் பிரகாசம்...

அம்மா தான் சொன்னாள்

பண்டிகைக்கு அடுத்த நாள் பிளாட்பார கடைகளில் புது துணி மணிகள் நேற்றில் பாதி விலைக்குக் கிடைக்கும் என்பதை அம்மா தான் சொன்னாள் தங்க நகைக் கடைகள் பெரும்பாலும் மூடியிருக்கும் இருப்பினும் அவற்றின் அலங்கார ஒளி விளக்குகள் எரிய விடப்பட்டிருக்கும் அவ்வொளி சாரலிலே கவரிங் நகைக் கடைகளில் வியாபாரம் நடக்கும் எளிய மக்களைக் கவர்தலால் கவரிங் எனப் பெயர் வந்திருக்கலாம் அம்மா தான் சொன்னாள் புயல் வந்து ஓய்ந்தது போல் வெறிச்சோடி இருக்கும் சாலைகளில் நடக்க நடக்க ஆசையாக இருக்கும் ஆனால் யாரோடு நடப்பது அரக்கப் பரக்க இல்லாமல் செவிகளற்று கிடக்கும் கை கால்கள் பரம சுகமாக இருக்கும் அன்று ஒரு நாளைப் போல் நிம்மதியாக உறங்கியதில்லை பாரமான நெஞ்சில் ஊருக்குப் போய்விட்ட பிள்ளைகளின் முந்தைய நாள் சிரிப்பு நினைவுகளோடு நீண்ட நெடிய தனிமை வீட்டில் படுத்துறங்கும் பண்டிகைக்கு அடுத்த நாள் அம்மா தான் சொன்னாள் கார்த்திக் பிரகாசம்...

வெள்ளிக்கிழமை இரவு

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் புத்தாண்டிற்கானக் கொண்டாட்டம் மனதிற்கு நெருக்கமானது வெள்ளிக்கிழமை இரவு கவலை அறியாதது அது கனவுகளுக்கானது வெள்ளிக்கிழமை இரவு நிம்மதியோடு வருவது நம்பிக்கையோடு விடிவது வெள்ளிக்கிழமை இரவு ஓய்வளிக்க வருவது உறக்கத்திற்கு ஒத்தாசையாக இருப்பது இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவுக்கு ஆயுள் அதிகம் கார்த்திக் பிரகாசம்...

இரகசியம்

கவிஞனின் இரவுகள்  இரகசியமானவை  அவை ஆந்தையின்  கண்களுடையவை  ஆழ்ந்து உறங்கும்  கனவுகள் கொண்டவை ஆனால் அற்ப நேர உறக்கத்திற்காக ஏங்குபவை  கார்த்திக் பிரகாசம்...

வேடம்

வேளாவேளைக்கு  வேடம் தரிக்கும் வேலையில்  வந்தது சன்மானம்  செத்தது தன்மானம்  கார்த்திக் பிரகாசம்...

வாசனை

கிழிந்து போன  ரூபாய்த் தாள்களில்  அப்பாவின் வாசனை மீந்துப் போன  உணவுப் பண்டங்களில்  அம்மாவின் வாசனை பயனற்றுப் போன  பழைய குப்பைகளிலெல்லாம்  நான் மட்டும் அறிந்த  எந்தன் வாசனை   கார்த்திக் பிரகாசம்...

மீண்டும் அவள் தொட்டிலுக்கு

உறுதியாக மறுத்தாள். ராஜரத்தினத்தின் மறைவிற்குப் பிறகு ராணியம்மாள் வெளியிடங்களுக்கு எங்கும் செல்வதில்லை. இன்று எப்போதும் இல்லாதவனாக மோகன் கட்டாயப்படுத்தினான். "அம்மா. வாம்மா போலாம். உனக்குத் தான் சினிமானா புடிக்கும்ல" அழாத குறையாகக் கெஞ்சினான். "பாட்டி பாட்டி வாங்கப் பாட்டி நாமலாம் ஜாலியா தீபாவளி ஸ்பெசல் சினிமாக்கு போலாம்" அப்பா கெஞ்சுவதைப் பார்த்ததும் அம்முவும் சேர்ந்து கொண்டாள்.. மகனும் பேத்தியும் போட்டிப் போட்டுக் கொண்டு வற்புறுத்தி அழைத்ததும் ராணி அம்மாவினால் மறுக்க முடியவில்லை. ராணி அம்மாளுக்குச் சிறு வயதிலிருந்தே ரஜினி என்றால் உயிர். புதிதாக வெளிவரும் ரஜினியின் அத்தனைப் படங்களையும் தியேட்டரில் பார்த்து விடுவது வழக்கமான வழக்கம். படம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். படத்தில் ரஜினி இருந்தால் போதும். பார்த்துகிட்டே இருக்கலாம். குடும்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையெல்லாம் கூட ரஜினி படம் வெளியான வருடங்களைக் கொண்டே நினைவில் வைத்திருப்பாள். ராஜரத்தினத்தை முதல் முறையாகக் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் புத்தகத்திற்கு நடுவே ஒளித்து வைத்துப் பார்த்தது ...

பிரதி

ழ'கரத்தை உச்சரிக்கும்  பதற்றம் இருந்தது முதல் கலவியில் ஆர்வமும் ஆசையும் அறியாமையில் மறைந்து அச்சத்தில் ஊறியது காகிதத்திற்கு வலிக்காமல் எழுதுவது சாத்தியமா? கசங்கும் காகிதத்தின் ஓசை வலியின் முனங்கல் வசவா? சுகத்தின் பிதற்றல் மொழியா? தூவலின் சிதறல் துளிகள் எழுத்துரு பெறவில்லை வலி மிகா இடங்களுக்கும் வலி மிகுந்தது அச்சுப் பிழைகளுடன் அச்சானது முதல் பிரதி ஓர் நன்மழை நாளில் காற்றின் சுழலுக்கு அசைந்தாடிய பக்கங்கள் சில உண்மைகளைப் புலப்படுத்தியது மெல்லிய உரசல்களில் மின்சாரம் பாய்ந்த தூவல் தானே பக்கங்களைத் தீண்டியது வார்த்தைகளை வடித்தது வலி மிகும் மிகா இடங்கள் ஒருவாறு வழிக்கு வந்தன வலியும் சுகமும் வேறு வேறில்லை வசவு வசமானது பிதற்றலும் புரிந்தது தீராப் பக்கங்களில் தேடுதல் தொடர்கிறது பிரதி நீள்கிறது கார்த்திக் பிரகாசம்...

மனதை மட்டும்

சமயங்களில் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன் செவிகளை கரங்களால் அடைக்கச் செய்கிறேன் நாவையும் கூட அடக்கி விடுகிறேன் இருப்பினும் இந்த மனதை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

கவர்ச்சி

கடுகளவும் கவர்ச்சியற்று இருப்பதுவே பெருங் கவர்ச்சியாய் இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

அன்பின்வழிகள்

அன்பின்வழிகள் அடைக்கப்படுகின்றன ஆறுதல்கள் அதிகாரத்துக்கு உட்படுகின்றன ஆலோசனைகள் யாவும் சந்தேகத்துக்கு ஆளாகின்றன மௌனங்கள் கேள்வியாக்கப்படுகின்றன எளிமை ஏளனமாக்கப்படுகின்றன அமைதியும் பண்பும் கோழையாக்கப்படுகின்றன செயல்கள் அனைத்தும் நேற்றோடு ஒப்பிடப்படுகின்றன முத்தங்கள் யாவும் மறக்கப்படுகின்றன சுயத்தை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை அவர்களால் கார்த்திக் பிரகாசம்...

கனவு

கண்ட கனவெல்லாம்  நனவானது  கடைசியாகக்  கண்ட  கனவில்...!!! கார்த்திக் பிரகாசம்...

அடையாளம்

இப்பொழுதெல்லாம் யாருக்கும் என் முகம் தேவைப்படுவதில்லை குரல் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது குரலை வைத்து நான் தான் என அறிந்து கொள்கிறார்கள் என்றோ ஒரு நாள் சந்திக்கும் வேளையில் என்னை அடையாளம் தெரியாமல் போகலாம் ஆதலால் என் குரலைப் பத்திரப்படுத்த வேண்டும் என்னிடம் இருக்கும் உங்கள் குரல்களையும் தான் கார்த்திக் பிரகாசம்...

மௌனி

சலனமே இல்லாமல் மிக எளிதாக ஓர் இறப்பை ஏற்படுத்துகிறாய் மௌனிக்கிறேன் சிரிப்பைக் கொல்கிறேன் வெற்று உடலாகிறேன் மெல்லிய முத்தமொன்றை இதழ்களில் பதித்துவிட்டு உன் முகம் பார்க்காமல் நகர்கிறேன் கார்த்திக் பிரகாசம்...

மழை பெய்கிறது

நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள்  உங்களை மகிழ்விக்கவே மழை பெய்கிறது நீங்கள் சோர்வுற்று இருக்கிறீர்கள் உங்களை உற்சாகப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள் உங்களை ஈரப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் உணர்வற்று இருக்கிறீர்கள் உங்களை உய்விக்கவே மழை பெய்கிறது நீங்கள் நம்பிக்கையற்று இருக்கிறீர்கள் உங்களை ஆற்றுப்படுத்தவே மழை பெய்கிறது நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் உங்களைக் கொஞ்சவே மழை பெய்கிறது நீங்கள் நினைக்க ஆளில்லாமல் இருக்கிறீர்கள் உங்களை நனைத்துப் பார்க்கவே மழை பெய்கிறது நீங்கள் சிரிக்க மறந்தவராக இருக்கிறீர்கள் உங்களைச் சிரிக்க வைக்கவே மழை பெய்கிறது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கவே மழை பெய்கிறது கார்த்திக் பிரகாசம்...

இழப்பு

எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியவில்லை அவ்வப்போது எறிந்துவிடுகிறேன் சிலவற்றைத் தூக்கி எறிகையில் என்னில் கொஞ்சம்  இழக்கப்படுவதை மட்டும் என்னால் ஒருபோதும் தடுக்க முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

தாய்மையின் கருணை

கடனுக்குக் காய்கறி அரிந்து வெறுமனே எண்ணெய்யில் பொரித்துப் படைக்கப்படும் உணவு பண்டங்கள் அல்ல அவளின் நோக்கம் உயர்ந்தது பசி தீர்ந்தால் மட்டும் போதாது வாழ்வில் பசியோடு கழித்த நாட்களுக்கும் சேர்த்து வயிறார உண்ண வேண்டும் பட்டினியால் ஒடுங்கிப் போயிருக்கும் உதரம் உயிர்த்தெழ வேண்டும் உணவின் சுவையை உப்பு காரம் புளி மட்டும் தீர்மானிப்பதில்லை அள்ளி வைக்கும் கைகளும் அந்த கைகளில் உரிமையான அதட்டல் இருக்கும் உண்மையான அன்பு இருக்கும் தாய்மையின் கருணை இயல்பாகவே நிரம்பி இருக்கும் கார்த்திக் பிரகாசம்...

நான் எப்போது...?

நான் எப்போது 'உன்னைக் காதலிக்கிறேன்'  என்று சொன்னேன்.? 'எதற்காகவும் கவலைப்படாதே நீ தனியாக இல்லை நான் உன்னோடு இருக்கிறேன்' என்று சொன்னாயே அது போதாதா.? கார்த்திக் பிரகாசம்...

வார்த்தைகள் தான் எல்லாம்

எச்சிலாய் வார்த்தைகளைத் துப்பி விடுகிறார்கள் எளிதில் உலர்வதில்லை வார்த்தைகள் எச்சில் போல் ஆயிரம் கத்தி குத்தல்களின் பலம் கொண்டவை உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் கூர்மையை ஒத்தவை 'ஒரு வார்த்தையில் என்ன குடியா முழுகிவிட்டது' என்று மீனைப் போல நழுவிட முடியாது உடல் முழுதும் காதுகள் கொண்ட மனிதனுக்கு வார்த்தைகள் தான் எல்லாம் வார்த்தைகள் தான் வாழ்க்கை கார்த்திக் பிரகாசம்...

புதிய நான்

பிறப்பதற்கு முன்பே  வாழ வேண்டிய மதத்தை வகுத்துவிட்டார்கள் பிறப்பதற்கு முன்பே வளர வேண்டிய சாதியை விதைத்து விட்டார்கள் பிறப்பதற்கு முன்பே படிக்க வேண்டிய படிப்பை புரிய வேண்டிய வேலையை முடிவு செய்துவிட்டார்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறேன் நான் கார்த்திக் பிரகாசம்...

அதே முகம்

ரசம் போன கண்ணாடியில்  ரசித்துப் பார்த்த முகம்  பளிங்கு கண்ணாடியில்  பளிச்சிடும் குறைகளோடு தெரிகிறது  கண்கள் கடத்திய கடைசி பொய்மையின் கண்கூடாய்  கார்த்திக் பிரகாசம்...

ஏதாவது பேசு

ஏதாவது பேசு..!  என்ன பேச..? ஏதாவது..! அதான் என்ன பேச...! அதெல்லாம் தெரியல ஆனா ஏதாவது பேசு..! சரி நீ பேசு...! என்ன பேச..? ஏதாவது பேசு..! உரையாடல்கள் தீர்ந்த ஓர் மாலைப் பொழுதின் உரையாடல்...! கார்த்திக் பிரகாசம்...

அன்புள்ள பாரதிக்கு

இந்தக் காலகட்டத்தில் நீ வாழ்ந்திருந்தால்... வாழ்ந்து... இறந்திருந்தால்... நீ இறப்பதற்கு முன்பே மரணச் செய்தியை முந்தித் தருவதற்கு உன் விட்டு வாசலில் ஈக்களுக்கும் இடமில்லா அளவிற்குத் தொலைக்காட்சி படமிகள் சூழ்ந்திருக்கும் படமி வெளிச்சம் படும் போதெல்லாம் உன் நண்பர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கண்ணைக் கசக்குவார்கள் விளம்பர இடைவெளியின்றி இருபத்தி நான்கு மணி நேரமும் உன் இறுதி நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கும் சொற்ப ஆண்டுகளிலே அற்ப ஆயுளில் இறந்தது ஓர் சகாப்தம் என புது கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் நீயே மறந்து போன உன் பழைய கவிதைகள் வாசிக்கப்பட்டிருக்கும் உன்னோடு பழகியவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்திருப்பார்கள் உன் முதல் கவிதை எது என்று விவாதம் நடந்திருக்கும் அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்திருப்பார் எல்லோருடைய அலைபேசியின் கட்செவி அஞ்சலிலும் உன் படம் பகிரப்பட்டிருக்கும் நீயும் உன் இறப்பிற்கு இறுதி வழியனுப்புதலுக்கு ஆட்கள் கூடவில்லையென வருத்தமடைய வேண்டிய அவசியமிருந்திருக்காது என்ன செய்ய உனக்கு வாய்த்தது அவ்வளவு தான் கார்த்திக் பிரகாசம்...

ஒரே கனவு

அவள் உறங்கியதும் ஏற்கனவே திட்டமிட்டபடி அவளின் கனவிற்குள் சென்றேன் கனவிலும் நான் பார்த்திடாத உலகமாக அது இருந்தது அங்கு ஒரே ஒரு மனித உயிர் அது அவள் மட்டும் தான் பதுங்கு குழிக்குள்ளிருந்து பாம்புகளும் முதலைகளும் ராட்சத பல்லிகளும் துரத்துகின்றன முகங்களற்ற உடல்களற்ற வெறும் கரங்கள் அவளது உடலில் ஊற நீள்கின்றன கரப்பான் பூச்சியின் கண்கள் கத்திகளை வீசுகின்றன பெரும் ஓலத்துடன் விழுந்தடித்து ஓடுகிறாள் காப்பாற்ற பின்னாடியே நானும் ஓடுகிறேன் தடுமாறி விழுந்த குழிக்குள் ஐந்து தலைகளுடன் சிவப்பு எறும்புகள் பயத்தில் விழித்து வெளியேறிவிட்டேன் நடுக்கத்தில் உடல் வியர்த்து உள்ளாடைகள் நனைந்துவிட்டன இத்தனை கொடூர கனவிலும் பக்கத்தில் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் பெண்ணாய் இருப்பது கடினமென்றால் பெண்ணில் அவளாய் இருப்பது அதனிலும் கடினம் கார்த்திக் பிரகாசம்...

மூப்பு

இருளில் நெருங்கி வரும் பூனைக் குட்டியின் மிரட்சியான கண்களைப் போல் பயமுறுத்துகிறது மூப்பு மூப்பின் சாயலில் மரணம் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் மெல்ல மெல்லப் படருகிறது உடலும் மனதும் ஒன்றாக அதிர்வுறுகிறது சுமந்த பிள்ளைகளுக்குச் சுமையாகிறது உடல் மக்கிப் போன நினைவுகளின் நிரந்தர குப்பைத் தொட்டியாகிறது மனது கேட்க நினைத்த இசை இழவு வீட்டின் ஒப்பாரியாய் ஒலிக்கிறது புரியாத வார்த்தைகளை விடப் புரிந்த மௌனம் போதுமானதாக இருக்கிறது எறும்பின் நகர்வும் ஈக்களின் மொய்ப்பும் கவனத்தில் பதிகிறது மகனும் மகளும் நான் பார்க்க மறுத்த இளம் பருவத்தின் பிம்பங்களாய் இருக்கிறார்கள் பேத்தியும் பேரனும் நான் கவனிக்க மறந்த உலகத்தின் பிரதிகளாய் வளர்கிறார்கள் மிகச் சிக்கலான எளிமையாய் நீள்கிறது தலைமுறை இடைவெளி இறுக்கமும் வெறுமையும் இனியா நண்பர்களாகிவிட்டன பயணத்திலிருந்து என்னை இறக்கிவிட முற்படுகிறது வாழ்க்கை முடிவெடுப்பதற்குள் முடிந்துவிட்டது பயணம் எல்லாமும் என்னைவிட்டு விலகுகிறது ஒருகட்டத்தில் நானும் என்னைவிட்டு விலகிவிடுவேன் கார்த்திக் பிரகாசம்...

முற்றுப் பெறாத ஓவியம்

கண்கள் இரண்டும் ஒன்று போல் இல்லை புருவங்கள் கம்பளி புழுவைப் போல் இதழிலும் கூட விரிந்திருந்தும் புன்னகை மொட்டுகள் இல்லை எந்தக் கோணத்திலும் முற்றுப் பெறாத முகம் இருப்பினும் பெரும் ஆறுதல் பொய்யைத் தீட்டி துரோகம் திரட்டவில்லை தூரிகை கார்த்திக் பிரகாசம்...

இரவு

கண்ணீரில் நனையாத  இரவைத் தாருங்கள் உங்களுக்கு ஓர்  மழைக்காலத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன்  கார்த்திக் பிரகாசம்...

நம்பிக்கையின் துளிர்

காத்திருப்பின் களைப்பே காலமாய் வியர்க்கிறது தேடுதலின் சுகமே தொலைவாய் நீள்கிறது வீண் அச்சமே விதியாய் மொய்க்கிறது வேதனையின் மிச்சமே விழிகளில் வழிகிறது இருத்தலின் பயமே இல்லாமல் ஆக்குகிறது நம்பிக்கையின் துளிரே நாட்களை நகர்த்துகிறது கார்த்திக் பிரகாசம்...

சுய விசாரணை

எல்லா புத்தகங்களும் ஒரே புத்தகமே சிலதை அலசுகிறது சிலதை அகற்றுகிறது சிலதை அறிக்கிறது சிலதை அரிக்கிறது தெளிந்தும் குழப்பியும் பக்கங்களில் தோய்கிறது கனவை வளர்க்கிறது கற்பனை தூண்டுகிறது சிறையை உடைக்கிறது துரோகம் தியாகம்  தற்பெருமை அனுசரிப்பு கழிசல் கழிவிரக்கம் சுய விசாரணை செய்கிறது மனக் கூண்டில் அமர வைத்து கேள்வி கேட்கிறது முடிவை நம் பொறுப்பில் ஒப்படைத்து விட்ட இடத்திலிருந்து விடுபட்ட விசாரணையை தொடர்கிறது அடுத்த புத்தகம் கார்த்திக் பிரகாசம்...

அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்

உணர்ச்சியே இல்லாமல் உற்றுப் பார்ப்பார்கள் உன்னால் முடியும் உதவிக்கு இருக்கிறேன் என்பார்கள் ஊக்கமளிப்பதாய் சொல்லி உடைந்த காலை மறுபடியும் உடைப்பார்கள் வெற்று வார்த்தைகளை விற்று வெயிலிலும் குளிர் காய்வார்கள் ஆறுதல் கூறியே அகம் மகிழ்வார்கள் அசந்த வேளைகளிலெல்லாம் அனுதாபம் காட்டியே ஊனமாக்கிவிடுவார்கள் அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள் கார்த்திக் பிரகாசம்...

வெற்று நிஜம்

கேட்கக் காதுகள் கிடைத்ததும் ஞானியாகிவிட்டேன் யாசிக்கும் கரங்கள் நீண்டதும் வள்ளலாகிவிட்டேன் இறைஞ்சும் கண்ணீர் கண்டதும் இரக்கமானாகி விட்டேன் மன்னிப்புக் குரல்கள் கேட்டதும் கடவுளாகிவிட்டேன் காட்சிகள் முடிந்து ஒப்பனை கலைத்ததும் உரித்தெறிந்த பாம்புச் சட்டையைப் போல் யாதுமற்ற வெற்று நிஜமாகிவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

நாளை வரை எதற்கு

கம்பீர கண்களில் கருணைக் காட்டு  கண்ணம்மா இசை மதுவினால் தள்ளாடுகின்றன என் இரவுகள் கோப்பையில் ராஜாவும் ரஹ்மானும் வண்ண வண்ணமாய் கண்முன்னே விரிந்திருப்பது வானவில் அல்ல உனக்கு நீயே பூட்டிக் கொண்ட அலங்கார சிறைக் கம்பிகள் உனக்கு நினைவிருக்கிறதா மழைக் காலத்தின் ஓர் மாலைப் பொழுதில் நோயுற்றிருந்தேன் உள்ளங்கையிலும் புறங்கழுத்திலும் முத்தங்கள் தந்தாய் எப்போதும் நோயுற்றே கிடக்கலாம் மழை நின்ற பின் மனம் சொட்டியது கடைசி சொல்லுக்காகக் காத்திருக்கும் கவிதையே உடைத்தெறி விலங்கை வா சிறை விட்டு அரவணை என்னை வீழ்த்து முட்டாளாக்கு அன்பு செய் நாளை வரை எதற்கு இன்றே வாழ்ந்துவிடுவோம் கார்த்திக் பிரகாசம்...

வெளுத்துப் போன சாயம்

அரைக்கால் டவுசர் காலத்தில் அரசியல் தெரியாது மதம் தெரியாது குறிப்பாகப் பக்தி கிடையாது திருவிழா பண்டிகை - அதெல்லாம் கொண்டாட்டம் கவலைகளை மறப்பதற்கு ஓர் காரணம் அன்பைப் பகிர்வதற்கு ஓர் வாய்ப்பு நினைத்துப் பார்த்தால் விசேசம் விநாயகருக்கோ ஏசு நாதருக்கோ நபிக்கோ பெரிய நாயகி அம்மனுக்கோ அதெல்லாம் பிரச்சனையில்லை ஒருவீட்டில் சுண்டல் ஒருவீட்டில் கொழுக்கட்டை ஒருவீட்டில் கேக் ஒருவீட்டில் கோலம் நண்பர்கள் காசு சேர்த்து ஓலைக் குடில் வேய்ந்து சிலை வைத்து நாள் முழுவதும் அமர்க்களம் பெருக்கெடுத்த அறியா வயதின் ஆனந்தம் இன்று தெருவோர கடையின் தரையில் கூட்டமாக அமர்ந்திருக்கும் களிமண் விநாயகரின் கண்களில் கலவரம் களிமண் உருவில் வளர்ந்திருக்கும் மதம் விநாயகரின் சாயலில் மறைந்திருக்கும் வெறி மத வியாபாரத்தில் பண்டிகைகள் லாபம் வெளுத்துப் போன சாயம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார் பிள்ளையார் கார்த்திக் பிரகாசம்...

மரணம்

சர்வ சாதாரணமாக நிகழ்கிறது ஓர் மரணம் ஏதோவொரு கடையில் தயாராய் தொங்குகின்றன இழவு வீட்டின் வாசத்தில் தொடுக்கப்பட்ட பூ மாலைகள் சம்பிரதாய ஒப்பாரியும் அழுகையும் சகிக்கவில்லையெனினும் அவசியமாகிறது கண்ணீருக்கு மத்தியிலும் சடங்கு சீர் செலவுகளை மதிப்பிடுகிறது காசுள்ள கல்நெஞ்சம் நீளும் ஆறுதல் கரங்களின் முடிவில் முகங்கள் இல்லை மழிக்கப்பட்ட மயிர்க் கற்றையின் ஈரத்தில் கடைசியாய் ஒருமுறை ஊற்றெடுக்கிறது பாசம் கார்த்திக் பிரகாசம்...

நிழலைத் தொடரும் வெளிச்சம்

நடப்பதற்கு முன்னே நகர்கின்றன நிழல்கள் கிட்டத்தட்ட எல்லா மனித உருப்படிகளின் நிழல்களுக்கும் ஒரே சாயல் நிறமற்றதாய் முகங்களற்றதாய் நிலையுருவமற்றதாய் நிர்வாணம் பேசும் வேடிக்கை மனிதர்களின் நிழல்கள் மனிதனை அறிய நிழலைப் பின்தொடரும் வெளிச்சம் கார்த்திக் பிரகாசம்...

தனிமையின் ஓர் துளி

அடைபட்ட கூண்டுக்குள் சுதந்திரமாகச் சிறகடிக்கும் பறவையின் சப்தத்தில் தனிமையின் ஆற்றாமை புதிதாக வீட்டுக்கு வரும் யார் எவரென்று அறியாத விருந்தாளியிடம் விளையாட்டு சாமான்களையெல்லாம் காட்ட அடம் பிடித்து அழும் குழந்தை கண்களின் திரவத்தில் தனிமையின் விரக்தி அடர்ந்த தாடி மீசைக்குள் மரித்துப் போன குழந்தைத்தனம் தனிமையின் அடர்த்தி பிரியமானவர்கள் பிரிகையில் தனிமையின் சுயரூபம் விரும்பிடும் உள்ளம் விலகி வெறுக்கையில் தனிமையின் வலி தன்னைத் தானே விழுங்கிடும் உயிர் தனிமையின் ஏமாற்றம் பழகிப் போன சுயம் தனிமையின் யதார்த்தம்  கார்த்திக் பிரகாசம்...

கதை

மழையின் சத்தம் மெல்ல மெல்ல அறையை ஆக்கிரமிக்கிறது எதைப் போட்டுத் தடுக்க அடுத்த அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ மழையின் கதைகளோடு கதைக்கப் போகிறோம் கார்த்திக் பிரகாசம்...

மீட்சி

பிரியம் காட்டியவர்களெல்லாம் சீக்கிரத்தில் மறைகிறார்கள்  இல்லையேல் பிரிகிறார்கள் என்றோ ஒரு நாள் அலமாரியில் உருளும் சொப்புச் சாமானத்தின் சப்தங்களில் உயிர்த்தெழுகிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

கூடு

எனக்கொரு ஆசை இல்லை - இது அப்பாவின் ஆசை மரபுவழி நோய் பரிமாற்றத்தைப் போல் மரபுவழி ஆசை பரிமாற்றம் என்னை அறியாமல் எனக்குள் ஏற்றப்பட்டிருக்கிறது மூளையின் ஏதோவொரு மூலையில் பதியவைக்கப்பட்டிருக்கிறது சாகறதுக்குள்ள ஒரு வீடு சமாதிக்கு முன்னே சொந்தமாக ஒரு கூடு அடுக்குமாடி பலகணி பளிங்குத்தரை லட்சங்களில் ஆடம்பரம் யாருக்கு வேண்டும் படுத்ததும் கவலைகளின்றி உறங்கிடத் தனிமையினைத் தாலாட்டிட ஏக்கம் தொலைத்திடப் பாசம் பெருக்கிட அன்புடன் அரவணைத்திட உயிரினும் உயிராய் ஒற்றைக் கூடு அவ்வளவே கார்த்திக் பிரகாசம்...

உதிர்ந்த நாட்கள்

பேய்க் கிணற்றில் வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பங்களா பால்யகாலத்தைப் பயமுறுத்துகிறது அண்ணாச்சி கடை இடத்தில் சூப்பர் மார்க்கெட் கடனோ கருவேப்பிலை கொத்தமல்லி இனாமோ கொடுக்கப்படுவதில்லை அந்த ஏசிப் போட்ட கடையில் பத்து ரூபாய்க்கும் கார்டு மெஷின் ஸ்வைப் சில்லறைக்குப் பதிலாக ஆசை சாக்லேட்டுக்கெல்லாம் வாய்ப்பில்லை அங்கு கூரைக் கடை பாட்டியிடம் நாலணா எட்டணாவிற்கு இட்லி வாங்கிச் சாப்பிட்ட தலைமுறை பால்யத்தின் பழைய சங்கதி செட்டியார் பள்ளிக்கூடம் இன்னும் பெயர் மாற்றாமல் இருப்பதில் புரியும் சமூகத்தின் பொதுப் புத்தி கடல் உள்வாங்கி காலியான இடத்தில் மீன்கள் விற்கும் அக்காக்கள் செத்த மீனின் செதில்கள் குளத்தின் மேல் அடுத்த வீடு தெரியாமல் உயர்ந்து போன கட்டிடங்களில் மறைந்து போன பக்கத்து வீட்டு நலம் விசாரிப்புகள் வாசல் இல்லாத வீடுகளில் உறவினர்களின் வருகையை அறிவிக்க காக்கைகள் வருவதில்லை கார்ப்பரேஷன் தண்ணியும் வருவதில்லை வளர்ச்சியின் சக்கரங்களில் சொட்டு சொட்டாய் வீதியெங்கும் வழியும் பால்ய காலத்தின் பால் மணம் வீசும் குருதியைச் சகிக்க முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

நானில்லை

நானில்லை வாழ்க்கையே என்னைத் தேர்ந்தெடுத்தது வழுக்கலும் பிடிமானமும் அதுவே கார்த்திக் பிரகாசம்

வாழ்வோம்

வாழ்வோம் நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம் அன்புணர்ந்து அகம் மகிழ்ந்து அறமுறைத்து ஆறுதலறிந்து துணை நின்று துயர் துடைத்து நம் வானில் நாம் பறவைகளாவோம் நம் இசையில் நாம் மெட்டுகளாவோம் நம் காட்டில் நாம் காற்றாவோம் நம் கடலில் நாம் முத்துகளாவோம் மூழ்கித் திளைப்போம் கார்த்திக் பிரகாசம்...

சொந்தம்

அடைத்து வைத்திருக்கும் அறையின் சாளரங்களைத் திறந்திட  யாராவது உதவிடுங்கள் ஏங்கித் தவித்திட்ட தென்றல்  என் மேனியெங்கும் படரட்டும் சிலிர்த்த உடலோடு சிநேகமாகட்டும் கரமற்றவனுக்கும் காற்றானது  சொந்தமல்லவோ கார்த்திக் பிரகாசம்...

அதே சாயல்

நான்கு நாட்களாய் காணவில்லை எங்கும் தேடியும் எவ்வித தகவலும் இல்லை ஊரடங்கின் மந்தமான ஓர் மாலைப் பொழுதில் காட்டுச் செடிகளின் புதர்களுக்கிடையில் சடலமொன்று கிடப்பதாக சனங்கள் சொல்ல மார்பிலடித்து கதறியோடினேன் கசக்கியெறிந்த பச்சை இலையாய் பத்து வயது பெண்பிள்ளை மென்னிதழ்களை முரட்டு முட்கள் கூட்டாக குத்தியிருந்தன பின்னிலிருந்து என்னைத் தள்ளி முகத்தைத் தூக்கி மடியில் தளர்த்தி ஒப்பாரி வைத்தாள் ஒருத்தி கால்கள் நடுங்க விரல்கள் விறைக்க குனிந்தேன் இந்தப் பிஞ்சின் முகத்திலும் அதே சாயல் தான் கார்த்திக் பிரகாசம்...

பொருத்தம்

எல்லா உணர்வுகளுக்கும்   பொருத்தமான வார்த்தைகள்  இருக்கவே செய்கின்றன ஆனால் அவைத்  தேடும்போது கிடைப்பதில்லை  நம்முள் செத்துவிட்ட  சில உணர்வுகளைப் போலவே கார்த்திக் பிரகாசம்...  

காலத்தில் எல்லாம் சரியாகும்

இதொன்றும் எனக்குப் புதிதல்ல இருப்பினும் இதயம் கனக்கிறது பன்னீர்த் தூவி வளர்த்தெடுத்த பாதங்களில் வழிந்திடும் குருதி மனதை இம்சிக்கிறது வளர்த்து அழகுப் பார்த்த முகங்கள் அழுகின்றன என்னைக் கண்டு அஞ்சுகின்றன எத்தனையோ பாதங்கள் என்னை மிதித்திருக்கின்றன வலியறிந்ததில்லை இந்தச் சுமக்காத பாதங்களின் வலியோ அமில வீச்சாய் நெஞ்சைப் பொசுக்குகின்றன விலகியோடும் கால்களை இருத்தி வைக்க எனக்குக் கரங்கள் இல்லை ஒருவேளை இருந்தாலும் அதற்குத் திராணி இல்லை ஏனெனில் பால் சுரக்காத மார்பில் மழலையின் பசி தீராது எனக்குத் தெரியும் வாழ்வாதாரமற்று அநாதரவாய் செல்லும் என் சொந்தங்களே காலத்தில் எல்லாம் சரியாகும் அன்று மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்பேன் ஈன்றெடுத்த குழந்தையை மார்பிலேந்தும் தாயைப் போல உங்களை ஏந்திக் கொள்வேன் மடியில் சாய்த்து புதுயுகம் காட்டுவேன் என்றென்றைக்குமான தளர்ந்திடா தன்னம்பிக்கையுடன் இப்படிக்கு சென்னை கார்த்திக் பிரகாசம்...

வெற்றுச் சதை

குளிக்கும் போது பார்த்து விட்டான் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்டவளின் உடல் நிர்வாணமாய்க் கிடக்கிறது அந்தப் பிரேத பரிசோதனைக்கூடத்தில் கார்த்திக் பிரகாசம்...

சவக் குழியில்

தொற்று வியாதியென தெருவில் விடபட்ட  வயோதிகரின்  கடைசி ஆசை உயிர்ப்போடிருக்கிறது  இன்னமும் சவக் குழியில்  கார்த்திக் பிரகாசம்... 

பக்குவம் துற

பக்குவமாயிருப்பதில் உனக்கேதும் இழப்பிருக்காது சந்தேகமில்லை  சமயங்களில்  எனக்குமே அது வசதியாகத்தான் இருக்கிறது மறுப்பதிற்கில்லை கொஞ்சம் கொஞ்சல் கொஞ்சம் குழந்தைத்தனம்  கொஞ்சம் குறும்பு இல்லாத உன் பக்குவம்  நீர் கண்டிராத விளைநிலத்தின்  வெடிப்புகளாய் வீடெங்கும்  விரவியிருக்கிறது  அதைப் பார்ப்பதற்கோ உன் பக்குவத்திற்கு  பார்வையில்லை உன் பக்குவச் சிரிப்பும்  பக்குவ ஆறுதலும்  பக்குவ அறிவுரையும்  பாசத்தைக் காட்டிலும்  பயத்தையே பயக்கின்றன  பிரச்சினையைப் பேசும் முன்பே விவாதம் வேண்டாமென மன்னிப்புக் கேட்டுவிட்டு கடந்துவிடுவாய் என்னையும் வேறு கடக்கச் சொல்வாய் சமருக்கு முன்னே  சமாதானம்  யுத்தக்களத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் என் மனதறியாமல்  நேரடியாக நீ கேட்கும் மன்னிப்புகள்  மரண ஓலங்களை  ஒத்திருக்கின்றன புண்பட்டு நிற்கும் மனதை மயிலிறகால் வருடிக்  கொடுக்காமல் பச்சை விறகால் விளாசும் உன் பக்குவத்தை கருகிய இதழ்களில் முத்தமிட்டு மார்பற்ற நெஞ்சில் தான்  தினமும் அணைக்கிறேன் பக்குவத்தைக் கழட்டி ஒருநாள...

நேற்று நாளை இன்று

பழைய குப்பைத் தொட்டியில்  பழகிய குப்பையாய்  நேற்று  மழலையின் கிறுக்கலாய் நாளை நித்திரையற்ற இரவின்  நீட்சியாய்    இன்று  எப்போதைக்குமான  வெறுமையுடன்  வெயிலில் கரைகிறது இப் பொழுது   கார்த்திக் பிரகாசம்...

முதல் அதிசயம்

பசித்தழும் வேளையிலும் அப்பாவின் முலையை தேடிடா குழந்தையின்  ஜனனம் பிரபஞ்சத்தின்  முதல் அதிசயம்  கார்த்திக் பிரகாசம்...

ச்சேய்...!

ச்சேய்...! இதென்ன காந்தியைப் போற்றி கோட்சேயை கொண்டாடுவது போன்றதொரு மனநிலை கார்த்திக் பிரகாசம்...

ஆற்றாமை

கவர்ச்சியற்ற அட்டைப்படம் வசிகரமற்ற தலைப்பு பழுப்பேறிய பக்கங்கள் சலுகையிலும் விலை  போகா புத்தகம்  நான் கார்த்திக் பிரகாசம்...

பொம்மை

குழந்தை பொம்மையுடன் விளையாடுகின்றது பொம்மை ஒரு குழந்தையுடன் கார்த்திக் பிரகாசம்...

ஒரு டீ சாப்பிடலாம்

உதாசீனப்பட்டே பழக்கப்பட்ட உள்ளம் எனது வெயிலின் உக்கிரத்தைப் போல் உண்மையான அன்பும் அரவணைப்பும் கூட வேதனைனையே தருகின்றன என்னை விலைப் பேசி என்னிடமே விற்பவர்கள் புகைத்ததும் மறைந்திடும் புகையாய் புன்னகைத்துச் சென்றதும் முகமிழந்து சாம்பலாகிறேன் இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு துளிச் சிரிப்பில் கடக்கவே முயல்கிறேன் பரவாயில்லை... வாருங்கள் ஒரு டீ சாப்பிடலாம் கார்த்திக் பிரகாசம்...

இலவச மரணம்

சொந்த ஊருக்குக் கூட்டிச் செல்லும் பாதை மாறிடாமலிருக்க நூல் பிடித்தாற் போல் இரயில் தண்டவாளத்தையொட்டியே நடந்த அப்பாவிகள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளை பறக்கும் விமானத்தில் அழைத்துச் செல்ல அரசாங்கமொன்றும் அடி முட்டாள் இல்லை பசியன்றி வேறறியா போக்கற்றவர்களுக்கு பேருந்து எதற்குச் சொகுசாக நடந்தே சென்றிட நிர்பந்தித்த அரசு ஏழைகளுக்கானது என்பதில் எங்களுக்கு எவ்வித அய்யமும் இல்லை எங்களுக்கும் இரயில் தண்டவாளத்திற்கும் எப்போதுமே ஏகராசி அழைத்துச் செல்ல வராத இரயில் அன்று ஏற்றிக் கொல்ல இலவசமாய் வந்தது வைரஸினால் பாதித்து இறந்தவர்களின் பொதுப்பட்டியலில் எங்களின் எண்ணிக்கையைச் சேர்க்க மாட்டார்கள் ஆனால் இறந்துவிட்டால் பசிக்காது என்றறிருந்திருந்தால் என்றோ மரித்திருப்போம் மகிழ்ச்சியாக கார்த்திக் பிரகாசம்...

நீயெல்லாம்

நீயெல்லாம் என்னத்துக்கு எழுதுற நீயெல்லாம் என்னத்துக்குப் படிக்கிற நீயெல்லாம் என்னத்துக்கு வரையிற நீயெல்லாம் என்னத்துக்குக் கேள்வி கேக்குற ஏன்னா நான் "நான்" அயோக்கியமான 'நீ' அல்ல கார்த்திக் பிரகாசம்...

முதல்துளி

'அழ வேண்டும்' போலிருக்கிறது அழுதுவிட்டால் ஆசுவாசமாய் இருக்கும் உடைந்து போன மனதை ஒட்டும் ஈரப்பசையாய் கதகதவென்று இறங்கும் உதிர்ந்து விழும் துளிகளில் தாங்கல் குறையும் நம்பிக்கை முளைக்கும் ஆறுதல் பிறக்கும் அது நம் கரங்களால் நம்மை நாமே அணைத்துக் கொள்வதை போல ஆனால் அந்த முதல்துளி அதுதான் சிரமம் கார்த்திக் பிரகாசம்...

அவன் கடவுளைக் காப்பாற்றிவிடுவான்

கருவறைக்குள் நுழைந்து விட்டான் அர்ச்சனை செய்ய அல்ல சிலையைத் தொடமுடியாது ஆனால் தீட்டு அவனுக்கல்ல ஈரடி விலகி நின்று தெளித்தான் பால் பன்னீர் புஷ்பங்களை அல்ல கிருமி நாசினியை கவலை வேண்டாம் அவன் உங்கள் கடவுளைக் காப்பாற்றிவிடுவான் கார்த்திக் பிரகாசம்...

உலகமே பூட்டிக் கிடக்கிறது

நுண்உயிரியொன்று  நூதனமாக  துரத்துகிறது  உயிர் பயத்தில்  உலகமே பூட்டிக் கிடக்கிறது  வேலை இல்லை  கடைகள் இல்லை கையில் காசு இல்லை   தூங்கியெழுந்து மூன்றுக்கு ஐந்து வேளைச் சாப்பிட்டு  டிவி பார்த்தும்  நேரம் போகவில்லையென்று  யாரோ புலம்புகிறார்களாம்   நடந்து நடந்து  கால்கள் வலுவிழுந்துவிட்டன  அழுது அழுது  கண்கள் வீங்கிவிட்டன    எல்லா வியாதிகளையும்  எதிர்க்கும் சக்தி  இயல்பாகவே மனித  உடலுக்கு உண்டாம்  இருப்பினும் இந்த  வயிற்றையும் பசியையும் தவிர்க்கும் சக்தி  இல்லையே  நாளையோ  நாளை மறுநாளோ தான் சாவு என்றாலும்  அதுவரையில் உயிரோடிருக்க  இன்று ஒரு வேளையாவது  சாப்பிட வேண்டுமே  கார்த்திக் பிரகாசம்... 

துருப்பிடித்த வார்த்தைகள்

உயிர் போக்கும் வதையாய் உரசி உராய்ந்திட குருதிச் சிந்திடா ஓர் மரண ஒத்திகை தத்ரூபமாய் கங்கையில் கலந்திட்ட சாக்கடையாய் கண்ணீர் அழுகை விசும்பல் வலி காயம் அடியில் அந்தத் துருப்பிடித்த வார்த்தைகள் கார்த்திக் பிரகாசம்...

ஆகாசத்தல ஒரு முத்தம்

பக்கத்துல வந்துட்டதா தெரிஞ்ச மானம் இன்னும் மைல் கணக்கா வெலகி இருக்கு தண்ணில மெதக்குற பஞ்சு மாதிரி மேகமெலாம் அந்தரத்துல மெதக்குது இந்த பிளேன்னு பறக்குதா நீச்சலடிக்குதா கடலும் ஆகாசமும் ஒண்ணு தான பறக்க முடிஞ்ச கடல் ஆகாசம் நீந்த முடிஞ்ச ஆகாசம் கடல் அந்த ஒசரமான ஒசரத்தின் உச்சியில ஆகாசத்தல ஒரு முத்தம் கடலுக்குள்ள மூழ்குறதாட்டம் கண்ணு ரெண்டும் உள்ள சொருவுது மெதந்துகிட்டே பறக்குற திரி இருக்கு ஒதடுங்க ஒத்தியெடுத்த எடமெல்லாம் ஈரமா இனிக்குது ஒடம்பெல்லாம் சில்லு சில்லா சிலிர்க்குது கண்ணாடில எட்டிப்பாத்தா ஒலகமே ஒரு சின்னப் புள்ளியாட்டம் கண்ணுக்குள்ள சிக்குது கார்த்திக் பிரகாசம்...

நிரப்பப்படாத பக்கங்கள்

நிரப்பப்படாத டைரியின் பக்கங்களில்  எழுதப்படாததெல்லாம்   புறக்கணிப்பின் பெரும் வலிகள்  எழுதப்பட்டதெல்லாம்   யதார்த்தத்தின் மிச்ச மீதிகள்  கார்த்திக் பிரகாசம்... 

சாம்பல் நினைவுகள்

"இந்த நாள் இந்தளவிற்கு ஈவிரக்கம் இல்லாமல் விடிந்துவிட்டதே" இறுதித் துடிப்பை இன்றே எட்டிவிடும் உத்வேகத்தில் இதயம் உதறித் துடிக்கிறது. தாங்கவொண்ணா சுமையை வெகுநேரம் தூக்கிச் சுமந்திருந்து இறக்கியது போல் கை கால்கள் நடுங்குகின்றன. வியர்வைத் துளிகள் வேர்த்து விறுவிறுவென்று உடல் முழுதும் விரவுகின்றன. உட்கார முடியவில்லை. அரை மணி நேரத்திற்கு முன்பு தான் ஜிலேபி ரமேஷ் போன் போட்டு சொன்னான். "சங்கர் செத்துட்டான்" என்று.. இன்று விடிந்ததே இவ்வுலகில் சங்கரின் இருப்பை இன்றோடு விலக்கிக் கொள்ள தானா. இதற்கு விடியாமலே இருந்திருக்கலாமே.. 'ஏதோ பொண்ணு விஷயம் போலடா. வீட்லயே தூக்கு மாட்டிக்கிட்டான். கூடவே இருந்த எங்கிட்ட கூட சொல்லாம விட்டுட்டான் பாரேன். தங்கச்சியும் அம்மாவும் கதறாங்க. அவங்க மூஞ்சில முழிக்க முடியலடா. 'ஏப்பா ரமேஷூ. உன்னோட தான எம் மவன் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பான். என்னப்பா ஆச்சு'ன்னு அம்மா கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலடா. நடுத்தெருவே சங்கர் வீட்டு முன்னாடி கூடி நின்னு அழுதுட்டு இருக்கு. பாக்கவே கஷ்டமா இருக்கு மச்சான். நீ உடனே கெளம்பி வா...

பெயர் தெரியா பறவை

எங்கிருந்தோ வந்த பெயர் தெரியா பறவை ஒரே ஸ்தாயில் வெகுநேரம் இனிமையான ஓசையை உண்டாக்கியது எங்கும் சுகந்தமான வாசனையை பரப்பிய தொடர் ஓசை இன்னிசையாக மாறிய கணம் நெடுநேரம் நீடிக்குமென்றிருந்த வாசனை சட்டென மறைந்தது காற்று தீண்டாத முதிர் இலைகளைக் கண்ட இளம்கிளையோ பெயர் தெரியா அடுத்த பறவையின் வருகைக்காக அங்கேயே கவர்ச்சியற்று நிற்கிறது கார்த்திக் பிரகாசம்...

ஏதோவொரு நம்பிக்கை

இன்னுமொரு பொழுதை கழித்துவிட்ட பெரும் நிம்மதியில் கரைகிறது இரவு அடுத்த பொழுதையும் தாட்டிவிடும் அச்சத்தில் புலர்கிறது விடியல் யாவற்றையும் இழுத்தணைத்தவாறு ஏதோவொரு நம்பிக்கை நாட்களை உருட்டிச் செல்கிறது கார்த்திக் பிரகாசம்...

சந்தோசமான முட்டாள்

உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான்  அறிவாளித்தனத்தை நிரூபிக்க  நீங்கள் பெரும் பிரயத்தனப்பட்டு  கடைசியில்  முட்டாளாகுகிறீர்கள் நான் எப்போதும் சந்தோசமான ஒரு முட்டாளாகவே  இருக்கின்றேன்... கார்த்திக் பிரகாசம்...  

வீடிருக்கு - விடுவதற்கில்லை

முதலில் அவர்கள் என் சாதியைத் தான் விசாரித்தார்கள் அதன்பின் மாமிசம் உண்பதை உறுதியாக்கிக் கொண்டார்கள் இறுதியில் நேரடியாகவே சொன்னார்கள் முஸ்லீம்களுக்கு நாங்கள் வீடு தருவதில்லையென்று கார்த்திக் பிரகாசம்...

ஈரம் உலர்ந்த தடம்

அழகான கையெழுத்து அவளுக்கு இடைமறிக்கா எளியச் சொற்களின் தொய்வில்லா நடையில் பார்க்கும் போதே காட்சிகளின்  பாவனையோடு கண்களில்  மிதக்கும் எழுத்துகள் படிவ வடிவக் கடிதத்தின் வலது இறுதியோரத்தில் ஈரம் உலர்ந்த தடத்தில் பெயர் எழுதி மூன்று புள்ளிகள் அழகான கையெழுத்தில்  துயரம் இன்னும் துயரமாக முற்றில்லா மூன்று புள்ளிகளுடன் அவளின் தற்கொலை கடிதம் காற்றிடம் காரணம் பேசுகிறது கார்த்திக் பிரகாசம்...

பட்டாம்பூச்சியின் மரணம்

வண்ண வண்ணமாய்ச் சிரித்து வானில் சிறகடித்த பட்டாம்பூச்சி பறக்க மறுத்து வண்ணம் மறந்து மடிந்துக் கிடக்கின்றது மூடிய கண்களில் வெளிச்சமில்லை வானத்தை அளந்துப் பார்த்த சிறகுகளில் அசைவில்லை பார்த்து பரவசமடைந்த முகங்களிலோ துளிக்கும் வருத்தமோ கண்ணீரோ இல்லாதது அந்தப் பட்டாம்பூச்சிக்குத் தெரிந்திருக்கும் எனக்கும் கூட வருத்தம் இல்லை பட்டாம்பூச்சியின் மரணத்திற்குப் பரிதபிக்கும் அளவிற்கு மனித மனமானது அவ்வளவு விஸ்தாரமாய் படைக்கப்பட்டதில்லை பட்டாம்பூச்சியும் அதை நன்கு அறிந்திருக்கக் கூடும் அதனால்தான் வாழும் வரை அனைவரையும் வசீகரித்த அதன் வண்ணங்களை மட்டும் இறந்தும் அது இழக்கவில்லை கண்ணீர்த் துளிகள் கிடைக்காத பட்டாம்பூச்சியின் மரணம் உணர்த்துவதெல்லாம் இறப்பின் வருத்தத்தில் இல்லை இருக்கும் வரையிலான இருத்தலின் மகிழ்ச்சியில் இருக்கிறது நமக்கான எல்லாமும் கார்த்திக் பிரகாசம்...

முழுமை

வேறு ஏதேதோவாய் இருந்தவனை நானாய் உணர்த்தியதில் இருக்கின்றது உன் இருப்பின் முழுமை கார்த்திக் பிரகாசம்...

குருதியில்

நீங்கள் வீசிய கூர்வாளின் முனையில் தோய்த்திட்ட மனிதவூன் ருசிக்கும் கூரியக் குருட்டுத்தனமான வார்த்தைகளுக்கான பதில் என் இதழ்களில் வழிந்திடும் குருதியில் கார்த்திக் பிரகாசம்...

கொலையாளி ஆகாதீர்

மூச்சுத் திணரும் ரோஜாவை சுருக்கு முடிச்சிட்ட நெகிழியிலிருந்து விடுவித்து மீண்டுமொரு முறை கொலையாளியாகும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் கார்த்திக் பிரகாசம்...

பைத்தியக்காரனின் சிந்தனை

விடியும் வேளையில் உறங்கச் சென்றேன் விடிந்தததை அறியாமல் உறங்கிக் கிடந்தேன் உறக்கம் விரட்டி விழிக்கையில் இருள் சோர்ந்திருந்தது கடினப்பட்டு இருளை விரட்டி விரட்டி விடியும் வேளையில் உறங்கச் சென்றேன் விடிந்தததை அறியாமல் உறங்கிக் கிடந்தேன் கார்த்திக் பிரகாசம்..

பெருங்கூட்டு

கலைந்து சேர்ந்து ஒட்டி உதறி தயங்கி நின்று துரத்தி வந்து பெருங்கூட்டாய் இணைந்தே பயணிக்கின்றன மேகங்கள் கார்த்திக் பிரகாசம்...

வீடென்பது

வெட்கக் கூச்சல்களும் முத்தச் சத்தங்களும் மோக முனகல்களும் உச்சத்தின் போது சிதறிய கெட்ட வார்த்தை முணுமுணுப்புகளும் காமத் தடயங்களாய்  கரைந்திருக்கும் அதுவே எங்கள் வீடென்பது கார்த்திக் பிரகாசம்...

துளி

புகையும் தீயில்  இரத்தத் துளிகளைச்  சிந்தினேன் கொழுந்துவிட்டு எறிந்தது காதல் கார்த்திக் பிரகாசம்...

நீலநிற கை

இருபுறமும் இறுகப் பிடித்திருக்கின்றன  கைகள் தளர்த்த முடியவில்லை மேலிருந்து யாரோ நெருப்பை அள்ளி வீசுகிறார்கள் அனல் எரிக்கிறது மெழுகைப் போல் தோலுருகி உரிகிறது நிலமெங்கும் வடியும் என் நிணவாடை நாசியைத் துளைக்கிறது  கண்களும் வாயும் வெற்று குழிகளாகையில் நீண்டு வந்தது ஒரு நீலநிற கை தோலுரிந்து நிணமிழந்து நின்ற ஓர் வெற்றுக் கூட்டை பற்றியது இறுக்கிய கைகள் தளர்ந்தன உடல் முழுவதும் நீலம் பரவியது இலகுவாகி மேல் பறந்தேன்  மனிதர்களற்ற பசுமையான  அகண்ட வெளியில் பட்டாம்பூச்சிகளோடு உயிரோடு இருக்கிறேன் கார்த்திக் பிரகாசம்...