Skip to main content

Posts

Showing posts from 2021

வன்முறை

கண்ணே! காதலின் பேரால் என் சுய அடையாளங்களை அழிக்க முயலும் உந்தன் சுயநலத்திற்குப் பேரன்பு என்று பெயரிடாதே வன்முறையில் சேருமது கார்த்திக் பிரகாசம்...

என் துரோகியைச் சந்தித்தேன்

நேற்று என் துரோகியைச் சந்தித்தேன் 'நீ தான் கடைசி' இப்போதெல்லாம் யாருக்கும் துரோகம் நினைப்பதில்லையெனச் சத்தியம் செய்தான் சிரித்தேன் வேண்டுமானால் என் புதிய நண்பனிடம் கேள் என்றான் அருகிலிருந்தவனைச் சுட்டிக்காட்டி மீண்டும் சிரித்தேன் நம்பு இல்லையேல் கொன்று விடு என்றான் கெஞ்சும் குரலில் நம்புகிறேன் ஆனால் நீ துரோகம் செய்ததை தான் இன்றுவரை நம்ப முடியவில்லை என்னால் என்றேன் அழுதேவிட்டான் கார்த்திக் பிரகாசம்...

இருண்மையின் ம(ப)சி

மானுடத்தின் மனப்பிறழ்வை மாய்த்திடும்  அந்த ஓர் கவிதையை எங்கோ வாசித்தது போல் நினைவில் தேங்கிய அந்த கவிதையை என்றோ நானெழுதியதாய் எனக்கே தோன்றும் அந்த ஓர் கவிதையை தினந்தினம் எழுத முயல்கிறேன் இருண்மையில் பசியாறிய பேனாவின் மசி சொட்டலில் கார்த்திக் பிரகாசம்...

தீரா பசி

சாலையில் நீந்தும் மேகத்தின் நிழல்களை இரையென விரட்டும் காக்கைகளின் பசி ஒருபோதும் தீர்வதில்லை கார்த்திக் பிரகாசம்...

தங்களின் உத்தரவுப்படியே மகாராணி

தன் வயதையொத்த இளம் நங்கையொருத்தி குதிரையில் ஏறி அமர்வதைக் கண்டதும் இவளே ராஜ்ஜியத்தை ஆளும் மகாராணியைப் போல் உணர்ந்தாள் குழந்தைகள் மணலில் கோட்டை கட்டுவதைப் போல இல்லாத கோப்புகளில் கையெழுத்து வரைந்து கரங்களைக் காற்றில் வீசி புது ஆணைகள் இட்டாள் 'தங்களின் உத்தரவுப்படியே மகாராணி' சேவகன் கோலத்தில் பிரதிவாதம் இல்லாமல் ஏழு போல் வளைந்து கட்டின லுங்கியோடு வாய் பொத்தி நிற்கும் கணவனைப் பார்த்து உள்ளூர எக்களித்தாள் புதிதாய் முளைத்தது போல் வெடுக்கென வெயில் உரைக்கக் கால் தவறி பாதாளத்தில் விழுந்தவளாய் நிகழில் விழித்தவளின் பாதங்களை நனைத்தவாறே தற்காலிக சுவடுகளை அடையாளமில்லாமல் அழித்துவிட்டு வந்தவழி திரும்பிக் கொண்டிருந்தன அலைகள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் குதிரையின் நிழல் பின் தொடர்ந்தது அவளை கார்த்திக் பிரகாசம்...

மலிவு

சமயங்களில் சந்தையில் கிடைக்கும் மலிவான  பொருளாகி விடுகிறது அன்பு கார்த்திக் பிரகாசம்...

இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன்

நெடுங்காலமாக என் சுதந்திரத்தின் சாவி துருப்பண்டி கிடக்கிறது உன் சட்டைப்பையில் அதன் இருப்பே பொன்னாய் ஜொலிக்கிறது உந்தன் சுதந்திர கிரீடத்தில் முதல் மாணிக்கமாக விரல்களை வெட்டியெடுத்த பின்னும் கரம் இருக்கிறதேயென்ற ஆசுவாசத்தில் இருளடையும் அடிமை நாட்கள் நரகத்தின் வாசலில் ஒலிக்கும் யாசக குரலின் ஓலங்கள் பிறந்தது பிறந்துவிட்டேன் பிடித்தது போல் வாழவிடு இனியேனும் இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கருணையின் சிரிப்பு

நான்கு மணிக்கே இருட்டி விட்டது வீடெங்கும் மழை பெய்யும் சத்தம் நத்தையாய் ஊர்கிறது நகக் கண்களில் சுடும் நின் விரல் சுவாசம் யாருமற்ற அறையில் எக்களிப்பு கூச்சலுடன் மெல்ல மெல்லப் பிரம்மாண்டமாய் விரிகிறது சுவர்களில் உன் பிம்பம் மரணபயம் வியர்வையோடியது இருளைக் கிழித்துக் கடித்துக் குதறித் தப்ப முயன்ற கடைசி சிணுக்கில் ஊறும் இருட்டிலே தள்ளி தாழிட்டது இரக்கமற்றவனுக்குமான நின் கருணையின் சிரிப்பு கார்த்திக் பிரகாசம்...

அந்த காதல்

விடாமல் துரத்துகிறது வலை வீசிடும் முன்பே வலியச் சிக்கிவிடுகிறேன் அதிர்ஷ்டமற்ற நானும் பெருங்கருணையுடன் கையிலேந்தி தரையில் தூக்கியெறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறது அந்த காதல் கார்த்திக் பிரகாசம்...

கழிவாகி மிதக்கும் நினைவுகள்

அன்பென பேசியதையெல்லாம்  பழைய சங்கதியென மறுத்திடும் காதலியிடம் கசிந்துருகி மன்றாடும் காதலனை நினைவுபடுத்துகிறது நிற்காமல் பெய்திடும் இம்மழை கழிவாகி மிதக்கின்றன நினைவுகள் கார்த்திக் பிரகாசம்...

சபிக்கப்பட்ட இரவுகள்

மை பூசிய இருள் உண்டு வடிவான வானம் உண்டு மின்னிடும் நட்சத்திரங்கள் உண்டு நிலவு உண்டு நிலவின் குளிர்தலும் உண்டு உறக்கம் மட்டும் இல்லை சபிக்கப்பட்ட என் இரவுகளில் கார்த்திக் பிரகாசம்...

அன்பு

ஒருமுறை ஏற்றுக் கொண்டால்   போதுமானது  காலந்தோறும் நிராகரிக்க கார்த்திக் பிரகாசம்...

சப்தமில்லாமல்

சுவாரசியம் நீர்த்துப் போய் சூழ்வதெல்லாம் சூன்யமாய் தெரிந்திடும் தீவிர மனமூப்பின் திட்டமிடாத நாட்களில் சப்தமில்லாமல் நிகழ்ந்தேறும் அழகிய தருணங்கள் அக்கணமே கவிதையாகி விடுகின்றன  அழுந்த பற்றிய வலிகளின்  உரசுதலில் கார்த்திக் பிரகாசம்... 

ஓரிரு துளிகளில்

அந்த ஓரிரு துளிகளில் தான் எல்லாம் மாறுகின்றது இலக்கியம் விரும்பி இன்ஜினியரிங்கில் வீழ்வதும் கனத்த மனதோடு காதலனை / காதலியை உதறுவதும் கனவுகளை மூட்டை கட்டியொழித்து மனமே இல்லாமல் மணப்பதும் மாத சம்பள வேலை மன்னனுக்கும் வாய்க்காதென்ற அங்கலாய்ப்பில் மனம் கசக்க தோய்வதும் இல்லாத இன்பத்தைச் சுகிக்காத நிம்மதியை வலிந்து முகத்தில் திணித்துக் கொள்வதுமென தனக்கான பிரபஞ்சத்தின் அஸ்திவாரம் ஒவ்வொரு முறையும் இடம் பெயர்கின்றது பெற்றவர்களின் அந்த ஓரிரு கண்ணீர்த் துளிகளைக் காணச் சகிக்காமல் கார்த்திக் பிரகாசம்...

பகடையாகாதவரையில்

விதிமுறைகளற்ற ஓர்  விளையாட்டினை இயற்கையின் பேரில் நம் எல்லைக்குட்பட்ட வாழ்க்கை மைதானத்தில் விறுவிறுவென விளையாடிக் கொண்டிருக்கிறது காலம் விளையாட்டில் பங்கேற்க முடியாமல் அசந்தர்ப்பமாக நீயும் நானும் வெறுமனே வேடிக்கை பார்க்கிறோம் ஒருவருக்கொருவர் பகடையாகாதவரையில் விபரீதமில்லை கார்த்திக் பிரகாசம்...

மயானத் தெரு

எந்நேரமும் மலர் மணம் வீசிடும் தெருவில் நாங்கள் குடியிருந்தோம் சுகந்தமான தென்றலுடன் எங்கள் வீட்டு வாசல் ஈரமாய் நனைந்தே இருக்கும் அறிமுகமில்லாத அந்நியர்களே அதிகம் உலா வருவார்கள் தாரை தப்பு முழங்கச் சில்வண்டுகளாகிய எங்களுக்கு ஒரே கும்மாளமாய் இருக்கும் அடிக்கு ஏற்ப ஆட்டம் போடுவோம் பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள் கோலிக் குண்டு ஆட்டத்தில் ஓர் நாள் நண்பனின் குண்டை உடைக்க கோபத்தில் திட்டினான் 'போடா.. மயானத் தெரு மயிராண்டி' அழுது கொண்டே ஓடினேன் மலரின் மணம் சகிக்கவியலா இழவு வீட்டின் நெடியாய் நீண்டு படுத்திருந்தது தெருவில் சுடுகாட்டுக் கரையின் ஒப்பாரி கூச்சலில் கூரை முக்காட்டுக்குள் முதுகின்றி முடங்கியிருந்தது எங்கள் வீடு கார்த்திக் பிரகாசம்...

வலசை

இறந்த காலத்திலிருந்து எப்போதாவது நிகழுக்கு வலசை வருபவனென்று நிந்தனைச் செய்கிறது வாழ்வோடையின் வழுவலில் நகர்ந்திடும் இளைய குரல் வாழ் நாட்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்திலேயே வாழ்ந்திறந்திட வேண்டும் இல்லையேல் முடிந்த காலத்தில் மூழ்கி சிறகுகளைப் பிய்த்தெறிந்து இரத்தம் உறையும் உடலை மறந்து இறக்க நேரிடும் என்கிறது பேசாமல் இருந்தே கம்மிப்போன முதிய குரல் இருள் அப்பிய குரல்களின் தனிமையில் மூச்சடைக்க அழுத்தும் இரவுக்குள் இன்பமான ஓர் காதல் கனவைக் காண முயல்கிறேன் கார்த்திக் பிரகாசம்...

சிறகு

பல பறவைகளின்  உதிர்ந்த இறகுகளைப் பொறுக்கி ஓர் சிறகுச் செய்தேன் உதிர்த்துச் சென்ற எல்லா பறவைகளின் சிறகைப் போலவும் இருந்தது அது கார்த்திக் பிரகாசம்...

சாத்தான்

ஒரு காலத்தில் நான் மனிதனாக இருந்தேன் சமூகத்தின் கீதையில் ~ பைபிளில் ~ குரானில் வரையறுக்கப்பட்ட நன்னடத்தைகள் அனைத்தும் என்னிலடக்கம் - தன் நெருங்கிய கூட்டாளிகளை வாழ்வானது அறிமுகப்படுத்திடும் வரை அநீதி ~ காயம் ~ சூழ்ச்சி ~ துரோகம் ~ துயரம் ~ வலி ~ பிரிவு ~ வீழ்ச்சி மனிதத்தின் மலிவான கீறல்களில் இறக்கும் முன்னே இரையாக சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தேன் சாத்தனாக கார்த்திக் பிரகாசம்...

எப்போதோ நான் இறந்துவிட்டேன்

என்றோ  தொலைந்து போன என்னைத் தேடிடும் போது எப்போதோ தொலைத்த அவளைக் கண்டடைந்தேன் வடுக்கள் மறைத்து இதயத்தின் முற்பகுதியில் புன்னகைத்தாள் மறுபகுதி கன்னத்தில் வழிந்தது கரங்களைப் பிடித்து நான் இன்னும் இறக்கவில்லை என்றேன் எப்போதோ நான் இறந்துவிட்டனே உனக்கு நினைவில்லையா என்றாள் அப்படியென்றால் ‌ என்னை மறந்துவிட்டாயா அதுதான் சொன்னேனே எப்போதோ நான் இறந்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கைவிடப்பட்டவனின் கடைசிக் குரல்

பணங்காசு முக்கியமா போச்சு சொமந்த கட்டயே சொமையா ஆச்சு சொந்தபந்தம் பாரமாச்சு நெஜமெல்லாம் நீர்த்து போச்சு போற வழிக்கு நெனப்பு ஒன்னே சொந்தமாச்சு ஒறக்கம் இல்லமா ஒழைச்சேன் ஒதுங்க ஒரு எடம் இல்ல யப்போ ஆச ஆசயா வளத்தேன் அப்போ அரவயித்து சோத்துக்கு நாதியில்ல இப்போ தூணா இருந்தவ போனதும் தொரத்திபுட்டான் மகனவனும் கார் நிறுத்த எடம் இருக்கு வீட்டுல அத்தனுக்கு கட்டில் போட எடமில்ல மனசுல காடு போற வயசாயிடுச்சு பாத்துக்க கடேசி வர காப்பாத்துவான்னு கண்ட கனவெல்லாம் பாழாயிடுச்சு கேட்டுக்க பீ மூத்திரம் கழுவக் கூட கை எழல கண்ணீரா வருது மக்கா கண்ண மூடி படுத்துக்கறன் இதுவே கடேசி ராவாக்கிடு கூற்றுவா கார்த்திக் பிரகாசம்...

மானசரோவர்

எல்லா வியாதிகளுக்கும்  ஒரே மருந்து இருந்தால் நன்றாக இருக்குமே என பிரலாபிக்கிறான் நண்பன் எனக்கு அதெல்லாம் தெரியாது ஆனால் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேண்டுமானால் ஒரே தீர்வு சாத்தியம் மறந்து விடுவது இல்லையேல் மன்னித்து விடுவது கார்த்திக் பிரகாசம்...

வலை

பிரம்மாண்ட வலைக்குள் சிக்கிய நெத்திலி மீனாய் கையளிக்கப்பட்டிருக்கிறேன் வாழ்க்கைக்கு பிளந்த வலிகள் பகிர்தலின் கடைசிச் சொட்டில் மென்மையாய் வருடினாலும் யாசகமாய் கொட்டும் ஆறுதல்கள் காயத்தின் கொள்ளளவுக்குப் பூரணமாய் இல்லை வலியே வலையானால் வாழ்க்கையுமதுவே சிறுசிறு வலிகளால் கோர்க்கப்பட்ட பிரம்மாண்ட வலை கார்த்திக் பிரகாசம்...

யார் யாரை

கூண்டில் கிடந்த பறவையை விடுவித்தேன் பறவை நன்றி சொன்னது நானும் நன்றி சொன்னேன் பறவைக்கு யார் யாரை விடுவித்தது.? கார்த்திக் பிரகாசம்...

காலாதீதம்

தூரத்து உறவுக்கார பெண்ணவள் அடுத்த தெருவிலிருந்தாள் பால்வாடி பருவந்தொட்டே நானும் அவளும் ஒன்றாய் பள்ளிக்குச் செல்வோம் அன்பாய் பார்ப்பாள் அன்பாய் பேசுவாள் அன்பாய் கொஞ்சுவாள் அன்பாய் சிரிப்பாள் அன்பாய் கரம் பற்றுவாள் கோவமும் அன்பாய் என் கழுத்தில் தொங்கிக் கிடக்கும் தண்ணீர் பாட்டிலைக் கழுத்திலிருந்து எடுக்காமலேயே கலைந்து போன முடிகள் முகத்தை உரச மூடியைக் கழற்றி நீர் உறிஞ்சுவாள் பெண் குழந்தை பொம்மையை தன் குழந்தையாகக் கவனித்துக் கொள்வதையொத்த கனிவன்பிருக்கும் பார்வையில் சொப்பு சாமானத்தில் சமைத்து மணக்க மணக்க ஊட்டுவாள் செடிகளுக்குள் தட்டான் பிடிக்கையில் பாதத்தில் பத்திய முள்ளை ஊக்குப் பின் வைத்து லாவகமாய் எடுப்பாள் காலத்தோடு வளர்ந்தோம் அரும்பு மீசை பருவத்தில் பாவாடை தாவணியில் கனவிலெங்கும் பாட்டுப் பாடி திரிந்தாள் டா‌ போட்டுப் பேசுவாள் நான் டி போட்டால் உனக்கு நானென்ன பொண்டாட்டியா எனச் செல்லமாய் ஏசுவாள் தெளிக்கும் வெயிலிலும் வானம் பார்த்து இதழ் விரித்திருந்த சூரிய காந்தி மலரை அவளுக்குப் பரிசளித்த நாளில் சாதிய முறைப்படி அவள் உனக்குச் சகோதரி முறை என்றாள் அம்மா விரும்பிய பெண்ணை விளங்காத சாதி வந்து வி...

எடையிழப்பதில்லை

முதற் பாதியில் ஓட்ட வேகத்தில் நடந்தவன் தோய்ந்த கால்களை இழுத்தவாறு‌ தவழ்கிறேன் பாரம் சுமந்த அவை பரிதாபகரமாய் தொங்குகின்றன முடிகள் நரைத்து தேகம் சுருங்கிவிட்டது வில்லாய் வளைந்த முதுகு நிரந்தரமாய் வளைந்தாகிவிட்டது சமயத்தில் சுயநினைவும் கூட தப்பிவிடுகிறது வதைக்கும் பருவ வேள்வியின் வேதனையில் தனிமைக்கு இரையான பாதுகாப்பின்மையின் விரக்தியில் கரம் சேரா காதலியவள் அவசரத்தில் எறிந்த 'அந்த சொற்கள்' மட்டும் குளத்தில் எறிந்த கல்லைப் போல் அடி நெஞ்சில் அப்படியே தங்கி இருக்கின்றன சொற்கள் ஒருபோதும் எடையிழப்பதில்லை கார்த்திக் பிரகாசம்...

அழகிய நாய்

அழகிய நாய் அழுகு என்றால் நாயாய் பிறந்திருக்கலாமோ என ஏங்க வைக்கும் அழகு மழை பெய்து எங்கும் பசுமை பூத்திருந்த ஓர் நன்னாளில் நான்கு குட்டிகளை ஈன்றது கடைக்குட்டியின் சாயல் தாயின் பிரதியை ஒத்திருந்தது அதன் மீது மட்டும் கூடுதல் பாசம் மற்ற குட்டிகளின் மீதும் அளவில்லா பாசம் தான் தாயாயிற்றே உணவைப் பங்கிட்டு அளிக்கும் தினமும் நக்கிக் கொடுக்கும் வளர்ந்த நாய்களிடமிருந்து ஒற்றை ஆளாய் காக்கும் ரேபீஸ் தாக்கிய அன்று கடைக்குட்டியைத் தான் முதலில் கடித்துக் குதறியது விபரீதம் அறியாமல் விளையாட்டு என நினைத்து தலையை நக்கக் கொடுத்தது கடைக்குட்டி நிலமெங்கும் சிவப்பு துளிகள் தாயின் பற்களெல்லாம் கடைக்குட்டியின் குருதி வாடை வாயில் கவ்வியிருந்த கடைக்குட்டியின் கழுத்தைத் தரையில் விட்டபோது அது செத்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது அன்றே மற்ற குட்டிகளை மறந்து அந்த நிலத்திலிருந்து ஓடிவிட்டது தாய் எந்த தேடியும் கிடைக்கவில்லை காற்றில் கடைக்குட்டியின் குருதி வாடை வீசாத ஒரு நிலத்திற்குத் தப்பியோடியிருக்கலாம் அல்லது தன்னையே கடித்து மாண்டிருக்கலாம் அந்த அழகிய நாய் அழுகு என்றால் நாயாய் பிறந்திருக்கலாமோ என ஏங்க வைக்கும் அழகு கார...

அரசல்புரசலான தகவல்

அரசல்புரசலான தகவல் ஊர்த் தெரு பெண்ணுக்கும் காலனி தெரு பையனுக்கும் காதலாம் அடுத்தநாள் செய்தி கடன்சுமை தாளாமல் காலனி தெருவில் குடும்பமே தீயிட்டு தற்கொலை தகவல் உறுதியானதாகப் பேசிக் கொண்டனர் சிலர் கார்த்திக் பிரகாசம்...

குறையின்றி

குறையென்று ஒன்றுமில்லை என்றான் அவன் குறையின்றி ஒன்றுமில்லை என்றான் மற்றொருவன் குறைத்தவிர ஒன்றுமில்லை என்றாள் அவள் பசியால் செத்துப் போன வயிற்றையும் மறுப்பால் மரத்துப் போன மனதையும் தோல்வியால் இத்துப் போன பருவத்தையும் கொண்டவன் சொல்கிறேன் அவர்கள் குறையெனக் குறைபட்டுக் கொள்வதெல்லாம் இருத்தலின் தினசரி சுகங்களையும் சுகித்திடாத சுவாரசியங்களையும் மட்டுமே கார்த்திக் பிரகாசம்...

சரி விடுங்கள்!

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் முனைப்பில் அவசரமாகக் கயிற்றைக் கம்பத்திலிருந்து இறக்கி முடிச்சுகளை நிதானமில்லாமல் அவிழ்க்கிறான் வணிக வளாகத்தின் காவலாளி வேடனிடம் சிக்கிய பறவையைப் போலத் தலை கவிழ்ந்து தரையில்படத் தொங்குகிறது தேசியக் கொடி சரி விடுங்கள்! தேசமே தலை குப்புறக் கிடக்கையில் தேசியக் கொடியில் என்ன இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

புகழுரை

புகழுரை என்றறிந்ததும் அதை ஒரே மூச்சில் உடனடியாக வாசிப்பதில்லை நான் சிகரெட்டை அடிப்பாதம் வரை உள்ளிழுக்கும் பயிற்சி பெற்ற நிபுணனைப் போல் ஒவ்வொரு சொல்லையும் மனதின் ஒவ்வொரு அறைக்குள்ளும் உலாத்துவேன் சொற்களை மிஞ்சிய ருசி மருந்து மனதிற்கு வேறெதுவுமில்லை அதிலும் பாராட்டுச் சொற்கள் ரசித்து ருசித்து சொற்களின் சுயமைதுனம் நிகழும் சுக்கிலம் கக்கிய குறியாய் மனத்தின் சொற் போதை தளர்ந்ததும் ஒரே மூச்சில் வாசிப்பேன் சொற்களின் கூச்சல் பிணத்தின் வாடையில் உடலைக் கூசும் கார்த்திக் பிரகாசம்...

சில்லறை கவிதை

தம்பி.. பண்டம் எவளோ.? சமோசா பத்து ருவா போண்டா பத்து ருவா வடை பஜ்ஜி எட்டு ருவா உனக்கெது வேணும் பாட்டி.? கந்தலான முந்தியில் முடிந்திருந்த  நாலைந்து சில்லறை நாணயங்களை  முன்புறமும் பின்புறமும்  திருப்பி திருப்பி  பார்த்துவிட்டுச் சொன்னாள் ஒரு டீ மட்டும் குடுய்யா... போதும் பொன்னிற வெயிலில் வயதான பாட்டியின் சில்லறை கவிதையானது டீ கார்த்திக் பிரகாசம்...

நான் சைக்கிள் வளர்க்கிறேன்

நான் சைக்கிள் வளர்க்கிறேன் இருவருக்கும் ஒரே சிறகுகள் நான் இல்லாமல் அது பறக்க முயல்வதில்லை அது இல்லாமல் நானும் பறப்பதில்லை ஒருசிலர் அதற்கு 'பருந்து' எனப் பெயரிடச் சொன்னார்கள் வேறுபலர் 'பீனீக்ஸ்' என்றார்கள் ஆகாயமும் பிரபஞ்ச வெளியும் எல்லாருக்குமானது தானே ஆதலால் அதற்கு 'தும்பி' எனப் பெயரிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கதாநாயக பிம்பம்

என் மீதான அவளின் கதாநாயக பிம்பம் கவர்ச்சிகரமாய் இருந்தது போக்கில் மெல்லிய புன்னகையை உதிர்க்க இயேசுவைப் போல் புனிதமானவன் நீ எனச் செவிகள் கூசிடப் போற்றுவாள் மழலை சிரிப்புடன் நான் அமர்ந்திருக்க உலகின் அத்துணை புனித ஆத்மாக்களும் எந்தன் சிறு பார்வை வேண்டி பவ்யமாய் நிற்பது போல் முகம் கொள்வேன் அப்பிம்பம் பெருஞ்சுவர் காவலில்லா சிறை மீண்டெழச் சாத்தியமற்ற நானே ஆணிகள் துளைத்து என்மேல் சுமத்திக் கொண்ட நிரந்தர சிலுவையென பிறகு தான் புரிந்தது ஏதோ ஒரு நாள் இயல்பான மனிதனாய் எதிர்பாராமல் ஒரு தவறை நிகழ்த்திய போது அருவருப்பினும் கீழான அவளின் பார்வையில் தான் பின்னிய வலையிலேயே சிக்குண்ட சிலந்தியைப் போல் முதன்முதலாய் என் கதாநாயக பிம்பம் துடித்தது நடக்கும் போது கைகளைப் பற்றிக் கொள்ளாத ஓர் நாளில் நூறாவது மாடியிலிருந்து விழுந்த கண்ணாடியைப் போல் என் கதாநாயக பிம்பம் சில்லு சில்லாய் உடைந்தது சிலுவையைச் சுமந்த சென்ற இயேசுவைப் பின்தொடர்ந்த பாரபாஸைப் போல் துரத்தி வந்தவள் திடீரென்று காணாமல் போய்விட்டாள் அவள் விட்டுச் சென்ற அன்பின் வழியில் அரைகுறையான நான் மட்டும் இருந்தேன் வெளுத்துப் போன கதாநாயக பிம்பத்தோடு கார்த்திக் ...

சிறைகள் விற்பனைக்கு

இன்றொரு விளம்பரம் பார்த்தேன் சிறைகள் விற்பனைக்கு பலவித உணர்ச்சிகளின் கண்ணீர் உப்பினைச் சேர்த்து சோக வடிவமைப்பில் செதுக்கப்பட்ட விதவிதமான சிறைகள் வனத்தைக் கண்டிராத கோவில் யானையின் சிறை ஆகாசத்தை அளந்திடாத கூண்டு பறவையின் சிறை பணக்கார வீட்டு வராண்டாவில் பிஸ்கட்டிற்கு வாலாட்டும் காட்டு நாயின் சிறை வண்டு தீண்டிடாத மலரின் சிறை கணவனை இழந்த இளம் விதவையின் சிறை கால்கள் கட்டப்பட்ட கழுதையின் சிறை எதற்கும் ஆசைப்படாதது போல் எல்லாவற்றையும் இழக்கும் அம்மாக்களின் தியாகச் சிறை ஒவ்வொன்றுக்கும் பயனர் கையேடு காரணங்களோடு வகுக்கப்பட்ட தகுதிகளோடு வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட சிறைக்குள் செல்லலாம் மாதத் தவணை உண்டு ஆண்டுச் சந்தா செலுத்தி மாதமொரு சிறையை வாடகைக்குப் பெறலாம் சிறையிலிருந்து விடுபடவே முடியாதென்ற யதார்த்த வாழ்வியலின் புரிதலில் விரும்பிய துயர்வுறும் சிறையிலாவது அடையலாமே எனச் சொந்த சிறையை பரிமாற்றி வேறு சிறைக் கேட்டேன் அந்த சலுகை எக்காலத்துக்கும் இல்லையென்றதால் திரும்பி வந்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

தீண்டாத வரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தோழியிடம் சுற்றித் திரிந்த பேசிப் பேசி மலைத்த பொழுதுகளை அளவளாவினேன் நான் சம்மந்தப்பட்ட நினைவுகளின் பிம்பத்தை மட்டும் எளிதில் மறந்துவிடும் அவளிடம் மயிர்க்கால் கூச்செறியச் சிறந்த தருணமென அவள் புளங்காகிதமடைந்த பொக்கிஷமென நான் பொத்தி அடைகாக்கும் நினைவுச் சுளைகளை உயிர்த்தலுக்குப் போராடும் போன ஜென்மத்தின் சுகமான தொலைதல்களை ஒவ்வொன்றாக மீட்டேன் அவளைப் பொறுத்தவரையில் அவைப் பிரேதமாகி பிரயோஜனம் இல்லாமல் நினைவறையில் மக்கி வெகு காலமாகிவிட்டது மறந்திடாத நினைவுகளால் பூட்டப்பட்ட நிரந்தர கைதியாக உணர்ந்தேன் நிராதரவான நிலையைக் கண்டு கலங்கிய கண்களுடன் தோழி சொன்னாள் 'தீண்டாத வரை முட்கள் குத்துவதில்லை நினைவுகளைப் போல' கார்த்திக் பிரகாசம்...

பலவீனன்

அன்பைப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் திரண்டிடும் பலவீனன் நான் பலவீனனின் பற்றாக்குறையான மொழி மென்மை வார்த்தைகளானதென்பதால் திரவ மொழியும் தன் பங்கிற்கு உரையாடலை உயிர்ப்பிக்கிறது போலும் எதிரிலிருப்பவர்கள் அசூயையாய் உணரலாம் சிலர் உரையாடவே தயங்குகிறார்களென்றும் தெரியும் ருசிப் பண்டத்திற்கு அனிச்சையாய் நாவில் உமிழ்நீர் சுரப்பது போல என் காற்றில் எப்போதும் கண்ணீரின் உப்பு உலர்வதே இல்லை தாழ்மையாய் வேண்டுகிறேன் அன்பாய் என்னுடன் பேசாதீர்கள் திரும்பிச் செல்லும் போது உரையாடுவோர் பட்டியலில் நீங்கள் ஒருவரை இழக்காமல் தவிர்க்கலாம் நானோ ஒற்றைத் துளியின் உப்பின் அளவிற்கேனும் அவஸ்தைப்படுவதைக் கொஞ்சம் தவிர்க்க முடியலாம்  கார்த்திக் பிரகாசம்...

மழை நனைக்காத நாட்களில்

மழைக்கான வாய்ப்பிருப்பதாக  மேகம் சொல்லும் தினமும் நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்திருப்பினும் காற்றுடன் உலாவி கைவிரித்த மேகங்களின் மீது ஒருபோதும் கோபம் இருந்ததில்லை மழை நனைக்காத நாட்களில் மண் எனக்கு ஆறுதல் சொல்லும் கார்த்திக் பிரகாசம்...

இதுவரை

கசப்பற்ற ஓர் நாளை கண்டடைய யுகமாய் வேண்டுகிறாள் புனித சிறையில் அடைபட்ட தாயொருத்தி அண்டை பொற்சிறையில் அகப்பட்டிருக்கும் கடவுளால் எந்த நன்மையும் இல்லை இதுவரை கார்த்திக் பிரகாசம்...

அழுகல்

பிறருடைய மகிழ்ச்சியில் பொதுவாக நான் கலந்து கொள்வதில்லை பொறாமையோ வக்கிர எண்ணமோவல்ல வலிந்து திணிக்கப்படுவதும் தவிர்க்க இயலாது வேறு வழியின்றி சுமந்தே ஆகக் கட்டாயமாக்கப்படும் மகிழ்ச்சியானது மனதிற்கு உவப்பானதாக இருப்பதில்லை இயல்பாக வருடாத அந்த மகிழ்வுணர்வு அழுகல் நாற்றத்தையே நெஞ்சத்தில் வீசுகிறது கார்த்திக் பிரகாசம்...

பேரன்பின் அசரீரி

கதவுத் தட்டும் ஓசைக் கேட்டு அச்சமூட்டி நடுநடுங்க வைத்திருந்த துர்கனவிலிருந்து‌ பதைப்புடன் வெளியேறினேன் கதவைத் திறந்தால் வெளியில் யாருமில்லை தட்டியது யாரோ பேரன்பின் அசரீரியாக இருக்கலாம் கார்த்திக் பிரகாசம்...

போதுமானதாக

எவ்வித  துயரத்தையும் மறக்க ஓர் கண்ணீர்த் துளியும் எத்துணை கவலைகளையும் கடக்க ஓர் இரவும் போதுமானதாக இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

பாவம்

நாங்கள்  ஆக்ஸிஜன் கேட்டோம் மருத்துவமனைகளில் படுக்கை வேண்டினோம் தடுப்பூசியைத் தேடியலைந்தோம் சவங்களை எரித்தகற்றவும் கூட ஏற்பாடு செய்யவில்லை அவர்கள் கார்த்திக் பிரகாசம்...

சூன்யம்

ஊரடங்கின் சூன்யம் தாங்காமல் முன்னிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து பின் தெருவில் வசிக்கும் என் வீட்டிற்கு வந்தான் நண்பன் வேறு இடம் வெவ்வேறு முகங்கள் சூன்யத்தை தொலைக்கக் குறைந்தபட்ச மாற்றமென நம்பிக்கை சோர்வைப் பூசிய முகங்களில் வழக்கமான விசாரிப்புகள் சுவாரசியம் தராத பேச்சு சுரத்தையில்லாத சிரிப்பு மாற்றி மாற்றி மறுத்துப் போன டிவி ரிமோட் பட்டன்கள் சூன்யத்தில் தொடங்கி சூன்யத்தில் முடிந்த உரையாடல்கள் சர்வ இடத்திலும் சகல முகங்களிலும் விழியில் விழும் வெளியெங்கும் அள்ளியப்பிய சூன்யம் தாளமுடியவில்லை சூன்யம் சுமந்து வந்தவன் சென்றுவிட்டான் சூன்யத்துடனே கார்த்திக் பிரகாசம்...

ஞானம்

விடிந்ததும் முதலில் துணையவளை அமரவைத்து அன்பாகப் பேசி அவளின் கை கால்களைப் பிடித்துவிட்டு ஆசையாக முத்தம் பதியனும் எவ்வளவு நாட்கள் ஆயிற்று வெயில் பட்டு வதங்கிய தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் வேலைக்காரியை வேறு நேற்று இழிச் சொற்களால் ஏசி விட்டேன் அவளிடம் மனம் திறந்த மன்னிப்பு கோர வேண்டும் கௌரவ குறைச்சல் எனக் கைவிட்ட வசதி தொலைத்த பழைய சினேகிதனைச் சந்தித்து பள்ளி வாழ்வை மனம் கோணாமல் அளவளாவ வேண்டும் கூடவே அந்தப் பால்ய காதலையும் அசிங்கம் அநாகரிகமென அறைந்து அடித்தொடுக்கிய மகளை அமைதி செய்து அவள் அறிமுகம் செய்த அவளின் வேற்றுசாதி காதலனை விருந்திற்கு அழைத்து மணநாளை முடிவு செய்ய வேண்டும் என்னென்னமோ திட்டமிட்டதில் கணக்கில் இது விடுபட்டதே சாமர்த்தியமென நினைத்தது சடுதியில் முடிந்துவிட்டதே பலன் தேடிய நாட்களில் நலன் தொலைந்தறிய வில்லையே என்னுடல் எனக்கே சொந்தமில்லாமல் போயிற்றே மனவெளியில் எந்தன் சாயலையொத்த ஒருகுரல் துடித்து ஒப்பாரியது முந்தைய இரவின் கனவிலே நான் இலகுவாக இறந்திருந்தேன் ஈக்கள் மொய்க்க நெடுஞ்சாண்கிடையாக கிடத்தப்பட்டிருந்தது என்னுடல் கார்த்திக் பிரகாசம்...

உதிர்தல்

சபிக்கப்பட்ட மரத்தின்  பழுத்த இலைகள் மூர்ச்சையின்றி உதிர்கின்றன மண்ணில் முன்னமே உதிர்ந்திட்ட இளம் இலைகளின் சவ உரசலொலி உதிர்தலில் முதிர் இளமென்ற வேறுபாடுதான் உண்டோ? கார்த்திக் பிரகாசம்...

காலத்துக்குமான ஒரு முத்தம்

விரும்பாதவொன்றை வலிந்து பரிசளிக்கும் வன்முறையை நீ பயின்றிருந்த சமயத்திலே தான் மௌனத்தால் வீழ்த்திடும் வித்தையை நன்கு கற்றறிந்தேன் கோபப் பெருக்கில் இடதுபுற கூரலை அனாசியமாக ஒதுக்கிவிட்டு உள்ளறையில் நீ பூட்டிக் கொண்டபோதெல்லாம் பொதி சுமக்கும் கழுதையைப் போல கனத்திருந்தேன் கோடை வெக்கையில் இரவிலும் ஈரம் பிசுக்கு பிசுக்கென மேனியெங்கும் பசை போல் ஒட்ட லேசான இளம் வெயில் சூட்டில் அருவியில் குளிக்கும் சுகத்தை அனுபவித்திருந்தேன் விளம்பர அழுகையால் உணர்ச்சிகளோடு வியாபாரம் செய்ய முனைந்தாயே அன்றைய இரவை மட்டும் தான் இன்றுவரை மறக்க முயன்றவாறிருக்கிறேன் கவனிக்காத காதலும் காலத்துக்குமான ஒரு முத்தமும் சிதிலமடைந்து கிடக்கிறது அவ்விரவின் சவப்பெட்டிக்குள் கார்த்திக் பிரகாசம்...

எப்போதும் பெண்

மதிய நேரம். சூரியனை மறைத்தனுப்பிவிட்டு பெரும் இடி சத்தத்துடன் மடியிலிருந்து அடைமழையை அவிழ்த்தன கருமேகங்கள். 'அழாத' தோளில் தட்டினாள் அன்புக்கரசி. அழுகை நிற்கவில்லை.. தொடர்ந்து தேம்பிக் கொண்டே இருந்தாள் சங்கவி... 'அழாம என்ன ஆச்சுன்னு சொல்லுடி' விசும்பல் குறைவது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து நெருக்கத்தில் அமர்ந்தாள் அன்புக்கரசி. "யார நம்பறதுனே தெரியல அம்மா. உயிருக்கு உயிரா, உண்மையா சொல்லணும்னா அதுக்கும் மேல முக்கியமா நெனைச்ச ஒருத்தன் ஒருமுறை என்கூட படுங்கிறான். ஏதாவது விபரீதம் பண்ணலாம்னு யோசிக்காத அப்றம் உன் உடம்ப ஊரே பாக்கும்னு மெரட்டறான். மழைல நனைஞ்ச ஒருநாள் அவன் ரூம்க்கு போய் நான் ட்ரெஸ் மாத்துனத வீடியோ புடிச்சி வச்சிருக்கானாம். அவன் சொல்ற மாதிரி செய்யலன்னா அந்த வீடியோவ நெட்ல விட்ருவன்னு சொல்றான். ரொம்ப பயமா இருக்கு. அவன எவளோ நம்புனேன் தெரியுமா அம்மா" தோளில் சாய்ந்து மீண்டும் பெரும் தேம்பலோடு அழத் தொடங்கினாள் அம்மாவாக இருந்தாலும் அவள் சங்கவியோடு ஒரு தோழியைப் போலவே இருந்தாள். சங்கவிக்கும் அம்மாதான் முதல் தோழி. அவளின் அத்துணை விஷயங்களும் அம்மாவிற்குத் த...

தாமதம்

அன்றே சொல்லியிருக்க வேண்டும்  தயங்கி நின்றிருக்கக் கூடாது ஆனந்தமாய் பெய்திடும் மழை அடுத்த ஏதாவதொரு நிமிடத்தில் நின்றிடும் என்பதை உணர்ந்திருக்கவில்லை வானவில் அணிந்த உள்ளக் குமிழியை நீ ஊசியால் குத்த உடைந்து போனது என் வானம் வானமற்று இருப்பதை விடக் கொடுமை உன் வாசமற்று இருந்து தொலைப்பது தாமதமாய் சேதி சொல்லும் காலத்திற்குப் பதிலற்று முழிக்கிறது தலைவிதி கார்த்திக் பிரகாசம்...

யாரோ ஒருவன்

இன்று அதிகாலை வரை நடமாடிய  சனங்களில் ஒன்று சவமாகிக் கிடக்கிறது ஊரே கூடியது ஓலக்கூரையும் ஓட்டையில் கண்ணீரை ஒழுகவிடும் வேடிக்கை பார்ப்பவனும் வோவென வெடித்துக் கதறும் ஒப்பாரி ஓலங்கள் வேதனையை வீசி அயர்ந்தன கிளைகள் புலம்பலை ஊற்றி மூழ்கின நேரங்கள் கிழிந்த ஆடையில் நைந்த‌ முகத்தில் சடுதியில் வந்தான் ஒருவன் கையில் மாலை இல்லை முகத்தில் சோகக் கண்ணீர் இல்லை பழுத்த இலை உதிர்வதைப் போன்ற முதிர் சிரிப்பில் சவமாய் கிடக்கும் பிண்டத்தை வணங்கிய அவன் வெடுவெடுவென நகர்ந்து மறைந்தான் வெயில் அப்பிய அவன் முகத்தில் சவத்தின் சாயல் இருந்ததை நான் மட்டுமே பார்த்தேன் கார்த்திக் பிரகாசம்...

மயானம்

விறகடுப்பில் இருந்து விடுதலை வேண்டியவளின் விருப்பம் இறுதியில் நிறைவேறியது மின் மயானத்தில் கார்த்திக் பிரகாசம்...

காரணமவள்

சில கவலைகளுக்குக் காரணம் இருப்பதில்லை அதுபோன்ற இல்லாத காரணத்தின் கவலையில் நாள் முழுக்கத் தோய்ந்திருந்தேன் இளம் வெயிலின் சாயலில் அருகில் வந்தாள் உன் கவலைக்கு நான்தான் காரணமா எனக் கேட்டு அம்மாவை தேடியழும் மழலையின் முக பாவத்தோடு இருளில் மறையும் நிழலைப் போல் நகர்ந்தாள் பிறகென்ன பின்னான கவலைக்குக் காரணம் அவளாகிப் போனாள் கார்த்திக் பிரகாசம்...

'நூல்' அளவு

என்னிடம் தட்டிப் பிடுங்கிய வாய்ப்பு தான் மணக்க மணக்கப் பரிமாறப்படுகிறது உங்களது இலைகளில் வாய்ப்பே வழங்கிடாமல் என்னால் முடியாது என முடிவெடுத்தீர்கள் அல்லவா உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம் 'நூல்' அளவே கார்த்திக் பிரகாசம்...

கனத்த இரவு

இரவே சுயம் மறந்துறங்கும் அர்த்த ராத்திரியில் பசியால் வீறிடுகிறது  தூளியில் மிதக்கும் குழந்தை செவிடாய் இருப்பினும் கேட்டுவிடும் போலக் குழந்தையின் அழுகை அன்னைக்கு பாரமிழந்த உடலின் எடையை மீட்டினாள் தொட்டிலில் மிதந்த குழந்தை அடுத்த நொடி அவளின் தொடைகளின் மேல் மீண்டது உள்ளாடை அணியாத சௌகரியத்தால் எளிதில் திறந்து காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள் அனிச்சையாய் இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை குழந்தையும் கூட குழந்தையின் எச்சிலில் மயிர்க்கூச்செறிய விரைத்த காம்பு பாலமுதை பாய்ச்சியது சிலிர்த்த உடலைச் சீர்செய்யக் கண் விழித்தாள் கண்களைத் திறவாமல் உதட்டினை மட்டும் நமுட்டி உணவினை உறிஞ்சும் குழந்தை அதிசயம் ஊறிக் கொண்டிருக்கும் மார்பில் ஊறியது உதடுகளால் மென் கன்னங்களால் பசியாறிய குழந்தையைத் தொட்டிலில் இட்டாள் சுளீர் சுளீரென உள்ளிழுத்த பால் கனத்த மார்பின் வலி குழந்தைக்கு எப்படித் தெரிந்திருக்கும் பாரம் தீர்ந்த வலி கண்ணீராய்ச் சொட்டியது கனத்த இரவை இலகுவாக்கி கார்த்திக் பிரகாசம்...

பேரமைதி

நிலைத்த கண்களும் உறைந்த உடலும் அசைவற்ற அமர்வுமாய் அவ்வப்போது இறந்தநிலை போல் இருக்கும் உயிர் பிரிந்த பிறகு இப்படித் தான் இருக்குமோ என்றெண்ணுகையில் இதயம் தட்டி மெல்லியதாய் மூச்சுக் காற்று வெளிவரும் அது இருக்கும் இதைவிட பெரும் பேரமைதியாய் என்று கார்த்திக் பிரகாசம்...

குழந்தைமை

சிக்னலில் ஒரு குழந்தை உற்றுப் பார்க்கிறது அதன் கண்களில் என்னவாக தெரிவேன் நடமாடும் மரமாக கருத்த வானமாக நிமிர்ந்து நிற்கும் பூனையாக கண்ணாடி அணிந்த பொம்மையாக வண்டியோட்டும் சொப்பு சாமானமாக புவா சாப்பிடாவிட்டால் கடத்தி போய்விடும் பூச்சாண்டியாக பெரிய மனிதன் வேடம் பூண்டிருப்பவனுக்கு அந்த உலகத்தில் இடமே இல்லை கண்களை விரித்து புருவத்தை உயர்த்தி கன்னத்தை உப்பலாக்கி கரத்தை அலையாக்கி சட்டென புன்னகை சிந்தியது மீண்டதென் குழந்தைமை சிக்னல் விழுந்தது வண்டி புறப்பட்டது கார்த்திக் பிரகாசம்...

அப்பா என்ற ஓர் பதம்

நண்பனின் அப்பா இறந்துவிட்டார் கைகள் நடுங்குகின்றன குழிக்குள் சிக்கியதாய் தொண்டை நகர முடியாமல் திணறக் கண்கள் குளமாகின்றன உள் வாங்கிய மூச்சு உள்ளுக்குள்ளே ‌அடைப்பதால் சுவாசிக்கச் சிரமமாய் இருக்கிறது அவரை‌ பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை நொடியேனும் பழகியதில்லை ஆனாலும் இத்தனைக்கும் காரணம் 'அப்பா'‌ என்ற ஓர் பதமே கார்த்திக் பிரகாசம்...

பிசகு

நெத்தியில் பட்டையும்  கழுத்தில் கொட்டையுமாய் காலத்தில் திரிந்தவன் இவன் பக்தியோ பம்மாத்தோ அர்த்த மறியாதவற்றின் அர்த்தங்களை அன்றைக்கொன்றாய் அடுக்கிவைத்து உலவிய நாட்கள் தெரியாததையெல்லாம் விருப்பமில்லையென வெறுத்து ஏமாற்றிக் கொண்ட பகுத்தறியும் பக்குவமில்லா பொழுதுகள் பின்னான சிதைவுகளில் கண்களைச் சிமிட்டி சாட்டையை சுழட்டி காலமாடிய கள ஆட்டத்தில் புரிந்தது பிடிமானமென நினைத்ததெல்லாம் பிசகு கார்த்திக் பிரகாசம்...

வறண்ட வாசம்

என்ன விழைந்தாலும்  'எனக்கொரு கவிதை லாபம்' எனப் புட்டம் புதையப் புத்தகத்தை முறைத்தவாறு அமர்ந்துவிடுவாய் புசித்துப் போட்ட மாமிச துண்டாய் இழவு வாசம் புகையும் இருண்ட வீட்டில் இரவுக் கஞ்சிக்குக் காய்ந்த வயிற்றுடன் சுருண்டு கிடக்கும் எங்களைப் பற்றி உனக்கென்ன கவலை புருஷ ஜென்மமே பேனா மசி காகிதத்தை நிறைக்கும் வயிற்றை நிறைக்குமா வார்த்தைகளைப் புசித்தால் பசி தீர்ந்திடுமா எழுது இதையும் எழுதித் தள்ளு சிறந்த கவிஞன் பதக்கம் வாங்கி மார்பில் குத்திக் கொள் முலாம் பூசிய பதக்கத்தின் மறுபக்கம் வீசிடும் பார் காய்ந்த வயிற்றின் வறண்ட வாசம் கார்த்திக் பிரகாசம்...

விற்பனைக்கல்லாத

ஒரு சில கவிதைகளை எண்பது ரூபாய்க்கு விற்றேன் காய்ந்த வயிற்றைக் கவிதை விற்ற காசு காப்பாற்றியது விற்பனைக்கல்லாத ஒரு கவிதையை உடனடியாக எழுதிடப் போகிறேன் இப்போது கார்த்திக் பிரகாசம்...

வருமானம்

கம்மங்கூழ் மோர் விற்கும் வயதான பாட்டிக்கு வருமானம் என்பதெல்லாம் நரை கூச்செறிய தழுவும் கலப்படமற்ற மரத்தடி நிழல் காற்றும் வழிப்போக்கனின் கனிவான வார்த்தைகளுமே கார்த்திக் பிரகாசம்...

கோடாலி

சாதிய வேர்களில்  சாதிய பூவே  பூக்கும்  சாதிய வேர்கள்  சாதிய கனியையே  நல்கும் இலைகளில்  பச்சையத்திற்குப் பதில்  பரவியிருக்கும்  சாதியம் கிளைகளில்  சாதிய உண்ணிகளே     ஒட்டியிருக்கும் கோபம் கொண்ட  கோடாலி ஓங்கியது கொத்தி குடைந்தது தழுதழுத்த வேரின்  கடைசி பாகத்தில் கண்டது வேரில் இல்லை  நட்டு வைத்த கரத்தில்  இருந்திருக்கிறது  சாதி  கார்த்திக் பிரகாசம்...  

கண்ணீர்த் தடங்கள்

நேர் வெயில் நெடுநெடுவென நெற்றியில் ஏறிக் கொண்டிருந்தது. மரம் துளிக்குக் கூட அசையவில்லை. அசலூரில் உத்யோகம் பார்க்கும் மகனின் வரவுக்காகக் காத்திருக்கும் பெத்தவளைப் போலக் காற்றை எதிர்பார்த்து மீளாத துயரத்தில் சரிந்திருந்தன கிளைகள். நிழலை விரிக்க அவற்றிடம் கொஞ்சமும் திராணியில்லை. நுதத்தைச் சுருக்கிக் கொண்டு - நடக்கும் தோரணையில் தெருவில் ஊர்ந்து செல்லும் மனித உருப்படிகளின் கண்களில் தளும்பியபடி - அலைகளற்ற கானல் கடலொன்று அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன்னர் பக்கத்துத் தேசத்துக்குப் பறந்துவிட்ட பறவைக் கூட்டம், பிறந்த மண்ணுக்கு இன்னமும் திரும்பியிருக்கவில்லை. "எங்கப் போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்" ஆளக் காணோம். 'பசிவேற வயித்தக் கிள்ளுது' - மதிய சாப்பாட்டிற்கு வராத கணவனைத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தாள் அழகம்மா "நேரங் கெட்ட நேரத்துல வந்து சாப்புட வேண்டியது அப்றம் சாப்பாடு சேரல ஜீரணம் ஆகலனு ஏப்பம் ஏப்பமா விட்டுக்கிட்டு ஏகத்துக்கும் என்னைய புடிச்சித் திட்ட வேண்டியது. இதே வேலையா போச்சு இந்த மனுசனுக்கு. எத்தனத் தடவ சொல்றது. கேட்டா தான......

வளைந்த மூக்கு

வளைந்த மூக்கெனக்கு இயல்பில் வளைவு இல்லை நயவஞ்சகமாய் வளைக்கப்பட்டது கட்டியிருக்கும் நீள் கயிறு தொப்புள் கொடியில்லை கழுத்தை இறுகப் பிடித்திருக்கும் தூக்குக் கயிறு துளைக்கப்பட்டமென் புழுக்களின் மரண ஓலமும் இரைக்காக வேண்டி பின் இரையானவற்றின் இளஞ்சூட்டு இரத்தக் கறைகளும் என் மூக்கின் அடையாளங்கள் முனையில் பிடித்திருக்கும் இரும்புக் கரத்திற்கு நான் தூண்டில் செருகிய மென் புழுக்களுக்கு நான் துன்பன் மிதந்து வரும் மீன்களுக்கு நான் துரோகி எனக்கு நான் யாரோ கார்த்திக் பிரகாசம்...

இரண்டாம் முறை

விருப்பமின்றி வற்புறுத்தி வன்புணர்ந்தவனை மணக்க விருப்பமா எனக் கேட்கையில் இச்சமூகம் இரண்டாம் முறை அவளை வன்புணர்ந்திருந்தது கார்த்திக் பிரகாசம்...

தனிப்பெருந்துணை

முன்னாள் காதலர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் நானும் என்னவளும் அவளின் அந்நாள் காதலனுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது அந்நாளைய என் காதலிக்கு விரைவில் திருமணம் மாடு அசைபோடுவதைப் போல் சர்வ சாதாரணமாய் நிகழ்ந்தது அந்த உரையாடல் ஊற்றெடுத்த நினைவுகளின் நீட்சியைக் கண்களில் தவிர்க்க முடியவில்லை இருவராலுமே ஆரத் தழுவினோம் முத்தம் சுவைத்தோம் இறுகணைத்த சூட்டில் விட்டுச் சென்ற தத்தம் காதலர்களுக்கான நன்றி காற்றில் மிதந்தது கார்த்திக் பிரகாசம்...

புழுக்கம்

சட்டையற்ற வெற்றுடம்பு வெளிச்சத்தை உண்ணும் பின்பனிக்கால பேரிருள் பேச்சரவமற்ற அமைதி புழுக்கம் தேடும் தனிமை ஏதுமற்ற ஏதேதோ சிந்தனை புறவுலகைப் புறக்கணித்து திசையறியா தொலைவில் எங்கெங்கோ திரியும் ஓரிடத்தில் நிற்காத மனம் கலங்குவதை உணர்ந்திடாத கண்கள் துடைத்திட எழுந்திடாத கரங்கள் மனவெளி அலைச்சலில் மறுத்துப் போன ஆத்மாவின் சோக கீதம் தான் இப்பொழுதில் யாவும் கார்த்திக் பிரகாசம்...

நீட்சி

காதலை எனக்குப் பழக்கியவனுக்குப் புத்தனின் சாயல் நானோ யசோதரையின் நீட்சி கார்த்திக் பிரகாசம்...

பூட்டியே கிடக்கின்றன

கழிப்பறையின் வாசல் முக்கில் ஆடம்பர அலுவலக கட்டிடங்களுக்குப் புறமுதுகைக் காட்டி திறந்தவெளியில் மலம் கழிக்கிறாள் சிறுமி வெயில் கொண்டு பூசுகிறது நகரம் முழுதும் நரகலின் நிறம் கட்டணமில்லா கழிப்பறையின் பூட்டுகளைத் திறப்பதற்குச் சாவிகள் இன்னும் உருக்கொள்ளவில்லை கார்த்திக் பிரகாசம்...

களவாடிய யோனிகள்

வயதாகிவிட்டது மணந்து கொள் என்கிறாள் அம்மாச்சி கனவில் களவாடிய யோனிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஆயிரத்திற்கு மேல் ஊர் மலை தாண்டி பார்க்கப் போன பெண்ணிற்குக் கனவில் களவாடிய முள் மயிர்கள் நீட்டியவாறிருக்கும் யோனியின் உருவம் ரயிலேறி பார்க்கப் போன பெண்ணிற்கு மிருதுவான மயிர்கள் உடைய யோனியின் உருவம் பக்கத்துத் தெருவில் பார்த்த பெண்ணிற்கு மயிர்களற்ற மொட்டையான யோனியின் உருவம் பார்க்கும் பெண்களெல்லாம் யோனிகளாக மட்டுமே தெரிகிறார்கள் அடுத்தமுறை பெண் பார்க்கச் செல்லும் போது குறியை அறுத்தெறிந்துவிட்டுச் செல்ல வேண்டும் கார்த்திக் பிரகாசம்...

கூடுதல்

சோகத்தை மறைப்பது கூடுதல் உற்சாகத்தில் இருப்பது போல் நடிப்பதுவே கார்த்திக் பிரகாசம்...

ரணமின்றி

எப்போதோ உண்டான காயத்தின் குருதி ரணமின்றி கசிகிறது இப்போது பால்ய காலத்தின் பழைய நினைவுகளுக்குள் சத்தமின்றி என் பெயர்ச் சொல்லித் திரும்பினாயா நீ கார்த்திக் பிரகாசம்...

கிழம்

'மனதளவில்  நீயொரு கிழவன்' தோழி கடிகிறாள்  சிந்தையின் போக்கிடம்  மூப்பின் முகாந்தரம் அறிந்தவனின் மனம் கிழமாகத் தான்  இருக்கும் என்றேன் சாயம் பூசிய  நரை மயிராய் ஒதுக்கிவிட்டாள் அவள்   கார்த்திக் பிரகாசம்...

சென்னைவாசிகள்

நான் சேலம் மேல்வீட்டுக்காரர் பரமக்குடி கீழ்வீட்டுக்காரர் கடலூர் காய்கறி கடைக்காரர் நாகர்கோவில் மளிகைக் கடைக்காரர் திசையன் விளை டீக்கடைக்காரர் பாலக்காடு பழக்கடைக்காரர் செஞ்சி தண்ணீர்க்கேன் போடுபவர் ஈரோடு சைக்கிள் கடைக்காரர் அறந்தாங்கி இரைக்காய் அடைக்கலம் நாடிவந்து திரும்பும் பாதை நினைவிருந்தும் பயணம் சாத்தியப்படாத நாங்களெல்லாம் சென்னைவாசிகள் என்று வெளியில் பெருமையாகச் சொல்லிக் கொள்வோம் கார்த்திக் பிரகாசம்...

களம்

களத்தில் நிற்பவனின்  வாழ்க்கை பதக்கத்தில் முடிகிறது நிலத்தில் நிற்பவனின் வாழ்க்கை பஞ்சத்தில் முடிகிறது கார்த்திக் பிரகாசம்...

புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான்

உலகம் கண்டுகொள்ளாததையெல்லாம் ஒரு கவிஞன் உன்னிப்பாய் கவனிக்கிறான் உலகம் வெறுப்பதையெல்லாம் ஒரு கவிஞன் ஆழமாய் நேசிக்கிறான் உலகம் விரும்புவதையெல்லாம் ஒரு கவிஞன் வெகுவாய் வெறுக்கிறான் உலகம் சிறப்பற்றதென ஒதுக்குவதையெல்லாம் ஒரு கவிஞன் நினைவடுக்கில்  சீராய் அடுக்கி வைக்கிறான் உலகம் எத்தனையோ கவிஞர்களைப் புறந்தள்ளினாலும் புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான் கார்த்திக் பிரகாசம்...

மகிழ்ச்சியின் கண்கள்

'இன்று  நீ அழகாக இருக்கிறாய்' புன்னகை பூக்கிறாள் தோழி மறுத்தேன் முணுமுணுக்கிறாள் அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது மகிழ்ச்சியின் கண்களில் காண்பதெல்லாம் அழகென்று கார்த்திக் பிரகாசம்...

அம்மா கிடைத்தாள்

அம்மா இறந்தாள்  அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போனது மகள் பிறந்தாள் அன்பு அரவணைப்போடு அம்மாவும் கிடைத்தாள் கார்த்திக் பிரகாசம்...

அழுகுரல்

தொடர்ந்து ஒலிக்கிறது  அந்த அழுகுரல் நேசிக்கவும் வெறுக்கவும் வைத்த அழுகுரல் குழந்தையின் சிணுங்கலாய்த் தொடங்கி அபலையின் அலறலாய் நீளும் அழுகுரல் விழிநீர் விசத்தில் தோய்த்தெடுத்த வாளை நேராய் தொண்டைக் குழியில் இறக்கும் அழுகுரல் கனவிலும் கேட்கும் உடலில்லாத அழுகுரலைப் பற்றிக் கொண்டு நானும் அழுகிறேன் அழுகுரல்களின் ஓலமாய் கனக்கிறது இரவு கார்த்திக் பிரகாசம்...

வாசனை

முன்னாள் காதலனின் திருமணத்திற்குப் பரபரப்புடன் தயாராகிறாள் தோழி அவனுக்குப் பிடித்த அரக்கு வண்ணத்தில் சேலையுடுத்தி நிலைக் கண்ணாடியே சோர்ந்திடுமளவிற்கு ஒவ்வொரு மடிப்பையும் சரிப்படுத்தி செந்தூர பொட்டு மையமாய் அதன் மேல் குங்கும கோட்டினை அளந்திழுத்து எத்தனையோ நாள் எங்கோ பரண் மேலிருந்த அட்டைப் பெட்டியை அவசர அவசரமாக உயிர்ப்பிக்கிறாள் சின்னதும் பெரியதுமாகப் பல பரிசுப் பொருட்கள் கடிகை கைக்குட்டை கால் கொலுசு அன்னா கரினீனா புத்தகம் ஆங்கில கவிதைகளால் நிரம்பிய காதலிச அட்டைகள் சுளுவில் சொல்லிவிட முடியாத மேலும் சில தூசாக கண்களை நெருடுகிறது கடந்த காலம் தூசியோடு காலத்தையும் சேர்த்து ஊதித் தள்ளுகிறாள் அறையெங்கும் பரவுகிறது அந்த பழைய காதலின் வாசனை கார்த்திக் பிரகாசம்...

ஒருமுறை காதலித்துவிட்டால் போதும்

கவலைக்கு  காலத்திற்கேற்ப பிரத்தியேக காரணம் இருக்கும் என்று கட்டாயமில்லை ஒருமுறை காதலித்துவிட்டால் போதும் கார்த்திக் பிரகாசம்...

முகமற்றவன்

சமயங்களில் என் முகம் நினைவில் நிற்காமல் போய் விடுகிறது ஏதேதோ முகங்களைப் பொருத்தினாலும் அது என் முகம் போலில்லை நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் நபர் என்னைத் தெரியவில்லை எனச் சொல்வாரென்று ஒவ்வொரு முறையும் ஊகிக்கிறேன் சொந்த கண்களுக்குப் பழகிடாத முகம் மூளையில் பதிய மறுக்கிறது சில வேளைகளில் கண்ணாடியில் தெரியும் முகம் என்னுடையதா என சந்தேக பிம்பம் மேல் எழும்புகிறது எல்லாவற்றிற்கும் மேலாகச் சிலர் என்னை உற்று நோக்கும் போது முற்றிலும் முகமற்றவனாகி விடுகிறேன் முகமற்றவனைத் தான் முகமன் கூறவில்லையென்று அவர்கள் குறையாடுகிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

அவசியம்

தொடர் உரையாடலைப் போலவே அச்சுறுத்தாத மௌனமும் அவ்வப்போது தவிர்க்க முடியாததாகிறது ஜனனத்திற்கு முன்பான பிரசவ வலியைப் போல கார்த்திக் பிரகாசம்...

சவாரி

அண்ணே சின்னவங்களுக்கு நூறுவா பெரியவங்களுக்கு எரநூறுவா பத்து வயதைக் கடந்திடாத சிறுவன் குதிரைச் சவாரிக்கு விலை பேசுகிறான் பேரம் படிந்ததும் குழந்தை அம்மாவுடன் குதிரையேறுகிறது கயிற்றை வீசுகிறான் சிறுவன் பலவற்றில் தன்னுடையதும் ஒன்றாக குளம்படியை மணலில் பதித்தவாறு சுணக்கமின்றி கிளம்புகிறது குதிரை சவாரி செய்யும் குழந்தையின் சிரித்த முகத்தையே மெய்மறந்து பார்க்கிறான் சிறுவன் மணல் சிதறலில் சிறுவனின் தொலைந்த பருவத்தை குளம்படியில் இறைக்கிறது குதிரை கார்த்திக் பிரகாசம்...

எச்சம்

சில்லறை நாணயத்தையும் ரூபாய்த் தாளையும் நீட்டினால் குழந்தை கூட ரூபாய்த் தாளையே எடுக்கின்றது பணம் பாதாளம் வரை பாயுமே நண்பனொருவன் கெக்கலிக்கிறான் கண்டுகொள்ளாவிட்டாலும் கல்லாப்பெட்டி நிறைகிறது கடவுளுக்கு பணம் தன்னே அதள பாதாளத்திலும் மீட்குமே இன்னொருவன் புலம்புகிறான் எதிலுமே ஆழ்ந்திராத சமநிலையான பைத்தியக்கார மனதிற்கு பணமொரு எச்சம் உமிழ்ந்தாலும் உட்கொண்டாலும் எச்சம் கார்த்திக் பிரகாசம்...

காலம்

மழை நனைந்த சாலையில் அகல விரித்த கண்களோடு செத்துக் கிடக்கும் நாயின் கண்களினிலே ஒரே புள்ளியில் உறைந்து நிற்கிறது காலம் கார்த்திக் பிரகாசம்...

காலம் உண்ணும் மனிதர்கள்

மூப்பின் கொட்டகையில்  ஒவ்வொரு இரவும் கடந்த காலத்தின் ஏதோவொரு கனமான நாளில் உயிரின் ஒரு துளி குருதியை உறிஞ்சியபடி மறுத்துப் போன வலியுடன் விடிகின்றது சுருங்கிய தோல் சுண்டிய தசைகளைக் கடந்த காலத்திடம் காட்டி கேளிக்கை செய்கின்றது நிகழ் பொழுது காலம் கடந்துவிட்டதாகச் சுருக்க ரேகைகளில் கண்ணீர் ஊர்கையில் இன்னுமொரு மனிதனின் வீழ்ச்சியைக் கண்ணுற்றவாறே கள்ள மௌனத்துடன் பகலிரவைப் போர்த்தியபடி நகர்கிறது காலம் கார்த்திக் பிரகாசம்...

கதை மாந்தர்கள்

உறக்கம் கூடவில்லையென்று மருத்துவர் எழுதித் தராத உறக்க மருந்தான புத்தகம் வாசித்தேன் இந்த மருந்து வேலை செய்யாமல் இருந்ததில்லை எப்போதும் வெற்றி தான் மெல்ல மெல்லக் கண் கூடியது உறங்குவது போல உறங்குகிறேன் கதை மாந்தர்கள் கனவில் கதையைத் தொடர்கிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

மனசாட்சி

உன் தர்க்கப்பூர்வமான கேள்விகளைக் கொதி உணர்ச்சியின் வேகத்திலெழுந்த கோவத்தின்பால் அடக்கி வெற்றிச் செருக்கில் ஆளோடினேன் நெடுநேரம் நீடித்தோடிய உந்தன் கண்ணீர்த்துளிகளில் சுக்கிலம் கக்கிய குறியாய் கொதிநிலை தளர்ந்ததும் உறக்கம் களைந்த மனசாட்சி இப்போது எட்டிப்பார்க்கிறது அது முழுதாய் மென்று தின்பதற்குள் என்னிடம் பேசிவிடு கார்த்திக் பிரகாசம்...